Vallalar Universal Mission Trust   ramnad......
98.உளம்திரியா அங்கைக்கனி


195. இங்குறத் திரிந்துளம் இளையா வகையெனக்

196. கங்கையிற் கனியாம் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்)

அக மனநிலையே உள்ளமாக இயம்பப்படுவது. அருள் உணர்வு பெற்று நோக்கும்போது , அக மனம் என்பது ஆன்மாவாகவே அறியப்படும். அந்த அமகனத்தின் அற்பக்கூறே புறமனமாய்ப் புலன்வழி சென்று உலக சுக துக்கங்களில் சதா உழன்று கொண்டிருக்கின்றது. இப்படித் திரியும் மனமே மாசடைந்தும் திடமற்றும், இளைத்தும் போவதாம். உடல் வலிமையைவிட மனவலிமை ஆற்றல் வாய்ந்தது. உடல் தோற்றத்தில் சிறியராய் இருந்தும் , பெரியவர்களாலும் செயற்கரிய காரியத்தை செய்து முடிக்கும் திற,ம் உள்ள வலிமையின்பாற் படும். ஆகையால் உள்ளம் திடமாய் இருப்பது இன்றியமையாதது. உள்ளத்தில் அருள் ஒளி குடிகொண்டு வாழ்த்தொடங்கி விட்டால் அதற்கு அழிவேயுண்டாகாது. அப்போது அவ்வுள்ளொளியின் சேர்ப்பால் உயிருடம்பும் அழியாமை பெற்று விளங்கும்.

மனம் சலியாது உள்ளொளிமயமாகி நிவாததீபம் போல் நிற்கவேண்டுமானால் திருவருள் சேரவேண்டும்.

“மெய்யகத்தி னுள்ளே விளங்கும் ஒளி காணில்

கையகத்தின் நெல்லிக்கனி” - ஒளவை குறள்

உள்ளொளியைக் கண்டுவிட்டால் மட்டும் போதாது; அதனை அருளால் அனுபவத்திற்கொண்டு வாழவேண்டுவது அவசியம். இதனால்தான்., உள்ளங்கை நெல்லிக்கனி, அல்லது அங்கைக்கனி, என்னும் பழமொழி ஏற்பட்டுள்ளதாம். நெல்லிக்கனியைக் கையில் வைத்துக்கொண்டு விட்டால் என்ன நன்மை? சித்த மார்க்கத்தில் வழங்கும் கருநெல்லியைக் கொண்டு சில சித்தி புரியக்கூடும். அதுவும் சிறப்பதன்று; உள்ளம் என்பது நம் கடவுளான்மவே, இது, நெல்லிக்கனி, கருநெல்லிக்கனி, கன்னற்கனி, அக்காரக்கனி, சிற்றம்பலக்கனி, முதலியனவாகக் கற்பனை செய்தல் மரபே. இப்பொழுது அதுவே நம் அருட்பெருஞ்ஜோதிக் கனியாகக் கண்டு கொள்ளப்படுகின்றது.

நம் வள்ளற்பிரானுக்கு, உள்ளத்தனியிற் கண்ட, அருட்பெருஞ்ஜோதிக் கனி, பேரின்ப சித்தியை வழங்கி உள்ளும் புறமும் நிறையோடு விளங்கச் செய்கின்றதை இங்கு இவ்வடிகளில் காண்கின்றோம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt