Vallalar Universal Mission Trust   ramnad......
89. அந்தணர் வழுத்தும் மந்தணம்

177. மந்தண மிதுவென மறுவிலா மதியால்

178. அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) அந்தணர் உண்மையில் எவ்வுயிர்க்கும் செந்தண்மையாம் தயா அன்பு பூண்டொழுகுவாரேயாவர். அப்படியார் எவ்வுயிர்க்கும் உண்மை அன்புடன் உதவி உயரின்பம் உண்டுபண்ணுகின்றவர்களாய் இருக்கின்றனர்? அப்படி எவரையும் இந்த உலக வரலாற்றில் காண்டற்கில்லை. வரலாற்றுக்கு முன்பேனும் இருந்திருப்பதற்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை. கற்பனைக் கதையிலும், கனவிலும் கூட எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய அந்தணாளனை அறிதற்கில்லையாம். மெய்ஞ்ஞான அனுபவத்திற்கே வெளியாகும் மெய்ப்பொருளாகிய கடவுள் ஒருவரே எக்காலத்தும், எவ்விடத்தும் உள்ள எவ்வுயிர்க்கும் மெய்யன்பால் தேவையானவற்றை எல்லாம் உதவி உதவி உயர்நிலைக்கேற்றி, உயரின்பம் கொள்ளச் செய்து கொண்டிருக்கின்றார் என்பதுதான் உண்மை.

அப்படியுள்ள தனிப்பெருங்கருணாகரனை, அருள் ஒளி பெறாத மருள்மன மாந்தர்கள் எவ்விதத்தும் அறியார்கள். உண்மை இப்படி இருக்க, மருளாளர் சிலர் மன அறிவு கொண்டு , கடவுளான்ம இயல்பை ஏகதேசம் அறிந்து, ஏகதேச ஆற்றலும் பெற்றுக்கொண்டனர். இவர்களே வேத வேதாந்தங்களை எல்லாம் படைத்துக் குவித்துவிட்டனர். அந்த வேதநாயகந்தான் பரப்பிரம்மம் அல்லது கருணாகரக் கடவுள் எனக் கூறிவைத்துள்ளனர். இந்தக் கற்பனை கடவுளையே எவ்வுயிர்க்கும் செந்தாண்மை பூண்ட அந்தணனாகப் புனைந்துரை செய்துவிட்டனர். இவர்களே தங்களைப் புறத்தேக நிலை கடந்து, அகப் பிரம்ம சொரூபிகளாய் இருப்பதாக விளம்பரப்படுத்திக்கொண்டு தாங்களே பிராமணர்கள் என்றும், அந்தணர்கள் என்றும் சொல்லிக்கொண்டார்கள். இவர்கள்தாம் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுகின்றவர்களா?

மெய்யருள் அறிவால் நம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைக்கடவுள் உண்மையை உள்ளவாறு காணமுடியும் இந்த ஒன்றான பேரருட்பெரும்பதியே எவ்வுயிர்க்கும் கருணை பாலித்துக்கொண்டும் கடைத்தேற்றிக்கொண்டும் இருக்கும் உண்மை அந்தணன் எனலாம். இந்த அந்தணன் என்ற சொல்லையேகூட அம், தணன் என்று பிரித்துக்கொண்டு பார்த்தால் உண்மை விளங்கும். ஆம், அம் என்பதை --ம் = ஓம் என விரித்துக்கொள்ளலாம். இதற்குப் பொருள் அருளே. அடுத்துள்ள தணன் என்பது, தணல் அல்லது தழல் ( அனல் அல்லது அழல்) நெருப்பொளி எரியேயாம். ஆதலால் இத்தணன் ஜோதி சொரூபியாம் ஒளிவடிவினனே, எனவே, அந்தணன் என்பதற்கு இன்று காணும் பொருள் நம் அருட்பெருஞ்ஜோதியே எனக் கொள்ளலாம்.

மேற்படி அருட்பெருஞ்ஜோதியாம் பதியையே உண்மை அந்தணனாகக் கண்டு ,, வாழ்த்தி வணங்கி வாழ்கின்ற சுத்த சன்மார்க்கிகளே உண்மை அந்தணராக இருக்கின்றனர். இத் தூயர்கள்தாம் மறுவிலா மதியால் , மருளிலா அருள் அறிவால் உண்மைப்பொருளைக் கண்டவர்களாவர். அந்த உண்மைப் பொருளே அகமாகிய உள்ளிருக்கும் மறைபொருள். இந்த மறைபொருளே மந்தணம் எனப்படுவது. மந்தணமென்றால், இரகசியம் என்று பொருள் படுத்துவர். கடவுள்தான், மறைபொருளாய், வேதமந்திர வடிவினனாய் இருத்தல் உண்மையாம்,. இதுவே, மந்தணமாகக் கூறப்படுவது. இதனை இரகசியம், சிதம்பர இரகசியம் என்றெல்லாம் சொல்லிகொள்ளுவர். அருள்ஞான சுத்த சன்மார்க்கரே இந்த உண்மையை, மந்தணத்தை மறுவிலா மதியால் காண்கின்றார்கள். கண்டு வழுத்துகின்றார்கள். அத்தோடு அத்துவிதமாய் இருந்துகொண்டு, சூழ்நரை வாழ்வித்துக்கொண்டும், தாமே வாழ்ந்து கொண்டு விளங்குபவராவர்.

இனியும் ஒருமுறை இந்த இரண்டடிகளைப் பொருளுணர்ந்து ஓதிப்பாருங்கள்.

மந்தண மிதுவென மறுவிலா மதியால்

அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி”

திருவருள் சேர்க்கையால் அனுபவமுண்டாகும்,

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt

2 Comments
drsbarathan
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அறிது"
கடவுள் வாழ்த்தில் கடவுளை முதல் 8 குறள்களில் 8 விதமாகக் குறிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 1.ஆதி பகவன் 2.வாலறிவன் 3.மலர்மிசை ஏகினான் 4.வேண்டுதல் வேண்டாமை இலான் 5.இருவினையும் சேரா இறைவன் 6.பொறிவாயில் ஐந்தவித்தான் 7.தனக்குவமை இல்லாதான் 8.அறவாழி அந்தணன்
என்பவையே அவை. ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்பதும் இதனாலேயே.
அந்தணன் என்பது அந்து+அணன்; துரமாக (அந்தி) இருப்பது போல் தெரிந்தாலும், அவன் நம் உள்ளேயே அனலாக, ஒளியாக, உயிருக்கே ஆதாரமாக இருப்பதால்; (our body heat, core temperature is due to this) அந்தரங்கமாய், ஒருவராலும் பார்த்து அறியக் கூடியபடி இல்லாததால்; கடவுள் கடவு+ உள் என்றும், அந்தணன் என்றும் கூறப்பட்டது.
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்"
அந்தணன் ஒருமையில் உண்மைக் கடவுள்; அந்தணர் பன்மை; மனிதர்களைக் குறித்து அவ்வுண்மையைக் கண்டவர்கள், அதுவே அனைத்து உயிர்களிடத்தும்
உள்ளதால் மற்றெவ்வுயிர்க்கும் தீங்கினை நினையாமல் அற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தை அறிவிப்பது.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எனது உறவினர், தமிழாசிரியர் சொல்ல அறிந்தது, 50 வருடங்களுக்கு முன்பு. அந்தணர் என்பவர் ஒரு ஜாதியைச் சார்ந்தவர் அல்ல.
Monday, June 21, 2010 at 04:09 am by drsbarathan
drsbarathan
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது"