
175. உபரச வேதியின் உபயமும் பரமும்
176. அபரமு மாகிய அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) இரசவாதம், கீழான உலோகத்தை பொன்னாக ஆக்குவது என்பன, இது சித்தா மார்க்கத்தில் உள்ளதாம். பரசவேதி, பரிசனவேதி என்பது தீண்டுவதால் அல்லது தொடுவதால் பொன்னாக மாற்றுவதுஎனப்படும். இவைகளைப்பற்றி நம் வள்ளல் குறித்துள்ள விளக்கம் அருட்பாவில் காணலாம். அது இரு பிரிவு கொண்டு இரசவாதம், உப ரசவாதமாம். இவை ஒவ்வொன்றிலும் ஏழுவகை யுண்டெனவும் அறியலாகின்றன. இவ்வாத சித்தியின் பொருட்டு , எத்தனையோ மக்கள் எவ்வளவோ பாடுபட்டும் ஏதோ ஓர் அளவு சித்திக்கப்பெற்றும் பெறாமலும் காலமும் பொருளும் வீணாக்கிவிட்டு ஒழிகின்றார்கள். இதனால் இம்முயற்சி செய்வது அறியாமையா பயனற்றதா என்றால், அப்படி அல்ல தயவோடு கூடிய சுத்த சத் விசாரத்தால் அகப்பதியோடு பொருந்தி நிற்போர்க்கு திருவருட்சேர்ப்பால் இச்சுவர்ண சித்தி இயல்பாகவே ஏற்படுவதாய் இருக்கின்றதாம். இவர்களுக்கே இந்த இரசவாதம் உபரசவாதம் முழுமையாய்ச் சித்திப்பது. இவர்கள் இதனை எளிதில் செய்யமுடியும். ஆனால் இதில் அவர்களுக்குசிறிதும் இச்சையுமில்லை. இலட்சியமுமில்லையாம். பற்றற்றார் இட்ட மலம் பட்ட இடமெல்லாம் பொன்னாம் என்பர். இது உண்மையே.
நமது அருட்பெருஞ்ஜோதியே உண்மையில் மாற்றறியாத பசும்பொன்னாய் இருப்பதோடு, அதனைத் தீண்டாமல் தீண்டி ( அருளால் அதுவாக) நிற்போரையும் வேதித்துத் தன்மயமாக ஆக்கிவிடுமாம்.
“ ஆதியு மாய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியு மாய் விரிந் தார்ந்திருந் தான் அருட்
ஜோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகி நின்றானே” - திருமந்திரம்
இதில் குறிக்கப்பட்ட உடல் உள் நின்ற வேதி என்பது அருட்ஜோதியே. அது நம் அருட்பெருஞ்ஜோதியே என்பது தெளிவு. இந்த உடல் உள் நிற்கும் வேதியின் செயலால் அசுத்த அநித்திய உடலே பொன்மேனியாய்ச் சுத்த நித்திய நிலைபெற்று நிலவுதல் ஒன்றே உயர் சிறப்பு கொண்டதாம். இதுவே பரநிலையாகப் பகரப்படுவது. மற்று அவ் அகமிருந்து வெளியுலகில் பொன் செய்து காட்டுதல் தாழ்வான அபரநிலையாகும்.
இங்கு உபரசவேதி எனக் குறிக்கப்படுவது , உப என்பதன் உ + ப் + அ ( அதாவது) அகரவுகரத்தால்சூழப்பட்டு சிரநடு நின்றொளிர் பகரமெய்க் கடவுட் ஜோதி நிலையைச் சுட்டுவதாம். இதனையே உபநயனம், உபதேசம், உபவாசம் ஏற்கும் பொருளாய்க்கொள்ளலாம். இதுவன்றி உப என்பதற்கு, வேறான, துணையான, பகுதிப்பொருளாகக் கொள்ளுதல் சிறக்காது. எனவே உபரசவேதி நம் அகமுறு ஜோதியேயாம். இச் ஜோதியின் இருநிலை யுண்மை சுட்டவந்ததே உபயம் என்ற சொல். உபயம் என்றால் இரண்டு என்று பொருள், உபரச வேதியின் உபயம் – பரம் , அபரமாக வெளிப்பட்டு விளங்குவது நம் அருட்பெருஞ்ஜோதியே எனத் தெளிவுறக் காட்டுவன இவ்வடிகள், இதுவன்றி மருத்துவ முறையில் குறிக்கப்படும் “ உபரசம் “ 128 சரக்குகளால் பெறப்படு என மருத்துவர் கூறுவர்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்….