Vallalar Universal Mission Trust   ramnad......
87. சிகர வகர உகர அகர மாயது


173. சிகரமும் வகரமும் சேர்தனி யுகரமும்

174. அகரமு மாகிய அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) கடவுள் உண்மை வெளிப்பட்டு அனுபவத்தில் விளங்குவதற்காகவே இந்தப் பிரபஞ்சம் முற்றும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது ஆகும். அக்கடவுள் அனுபவம் முழுமையாக வெளிப்பட்டு நிலவதற்கான ஒரு பக்குவ வடிவம், இந்தத் தத்துவ நிறை மனிதப்பிறவியாக இருக்கின்றதாம். இந்த இயல் உண்மையை உள்ளுணர்ந்து வெளியிட்டவன் தமிழன். அவ்வுண்மைக் கருத்தை வெளியிடர்கே, தமிழ் மொழியையே, அகப் புற நிலைக்குத் தக உருவாக்கி வழங்கிவிட்டுள்ளான். ஆகையால், தமிழின் ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், கருத்தும், பொருளும் இறையனுபவத்திற்கு உதவக்கூடியதாய் அமைந்துள்ளனவாம்.

மனிதனுடைய கருத்து அல்லது எண்ணம் உள்ளிருந்து உணர்த்த, அது கொண்டு பொருத்தமாக எழுத்துக்களை உருவாகி, இணைத்து, மொழிந்து வருகின்றான், அந்த அக எண்ணமே ´’’ எண்” குறியீடாகவும், அவ்வெண்ணத்தை வெளியிட வந்த குறியீடே எழுத்தாகவும் கொண்டு மெய்யனுபவம் பெறக்கூடியதாயிருக்கின்றதாம். இம் மனிதனுக்கு உலகும் உடலும் புறமாக விளங்க , உயிரும் உணர்வும் அகமாக இருந்து உதவுகின்றன. இந்தப் புற உடல் தோற்றம் , புற வான்வெளியினின்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த அகண்ட வான்வெளி நிலையே முதலாக உள்ளதாம். அந்ஹ்ட ஆகாச வெளியிற் பிரிவற இருந்து செயல்படுத்தும் வாயு சக்தியால் பிற பூத நிலைகளும், பூதப் பொருள்களும் உண்டாகிப் பின்னர், அக ஆற்றல் உயிராகிடப் புறப் பூதப்பொருட்களால் தேகம் உருவாகி வளர்கின்றதாம். இதனால், புற ஆகாச வண்ணமே அகரமாம் முதல் எழுத்தாய் விளங்க உயிர் உணர்வு உகரமாய் இருந்து ,மகர மெய்யொளியால் முடிவில் அனுபவமுறுகின்றதாம். இதுதான், அகர உகர மகரம்கூடிய ஓமாகி இம் மனித வண்ணமாய்த் திகழ்கின்றதாம். அகரமே புறாவடிவமாக விளங்க , உகரமகரம் இரண்டும் அக எண்ணமாக உள்ளதாம். இவ்வுண்மைக் குறிப்பே, எழுத்துக்களை, ஆனா ஆவன்னா , ஈனா முதலியனவாய் அகர ஈற்றொலியோடு இசைப்பதும், எண்களை , ஒன்று, இரண்டு மூன்று முதலியனவாய் உகர ஈற்றொடு ஒலித்து வந்து ஆயிரம் என்ற நிலை மகர மெய்யொடு கூட்டிக்கொள்ளப்படுகின்றது. எனவே ஓம் என்பது நம் உரு உண்மை கொண்டதாய் அறிவிக்க வந்ததாகும். இவ்வளவும் புற ஆய்வில் கண்டு கொள்ளப்படுவது.

மேல், அகமெய் இறையனுபவம் பெற வேண்டியிருக்கின்றது. அகநிலை, ஞானாகாசக் கடவுள் இயல்போடுள்ளதாம். இந்த ஞானாகாசமே , சிதாகாசமாய் , சிகர எழுத்தாய்க்கொண்டு அங்கிருந்து எழுந்து செயல்படுத்தும் ஜீவசுவாசம் அல்லது வாசியே வகர எழுத்தாகவும் கொள்ளப்படும். இந்த வாசியின் முடிவில் சித்திப்பது சிவம் என அக மெய்யொளி நிலை அனுபவமாகக் குறிக்கப்படுகின்றதுமாம்.

புறநிலையில் ( ம் ) ஓம் என்பதும், அக நிலையில் சிவம் என்பது ம் விளங்குதல் உண்மையாம். இவ்விரு நிலைகளையும் சேர்த்துப் பிரிவற்ற ஒப்பற்ற தனியொடு நிலையாகக் கொண்டு விளங்குவதுதான் நம் அருட்பெருஞ்ஜோதியாகும். இக்குறிப்பு சிகரமும் வகரமும் உகரமும் அகரமும் சேர்தனி அருட்பெருஞ்ஜோதியாகி விளங்குவதாய்க் காட்டப்பெற்றுள்ளதாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்