Vallalar Universal Mission Trust   ramnad......
85.அங்கங்கிருந்து அருள்வது


169. எங்கெங்கிருந்துயிர் ஏதேது வேண்டினும்

170. அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) நமது அருட்பெருஞ்ஜோதி எங்கும், என்றும் பரிபூரணமாகவே இருந்துகொண்டிருக்கின்றது. இப்படி இருக்கின்றது என்று எவர் சொன்னாலும் தீர்க்க விசாரித்துத் தெளியுமுன், நம்பி ( மெய்யுணராது மூடமாக) ஏற்றுக்கொள்ளக்கூடாது கடவுட் ஜோதி இருப்பை, மெய்யறிவாற் காண , அருள்ஞானத்தால் உணரவேண்டும். அந்த மெய்யறிவு அல்லது அருள் ஞானமே கடவுள் விளக்கம் கொண்டு திகழ்கின்றதாம். இம் மெய்யறிவுப் பீடம் சிரநடுச் சிற்ஜோதி நிலையமாக இருக்கின்றது. அறிஞர் எவர்க்கும் அனுபவமேயாம். இந்தச் சிற்ஜோதி யணுவே முதல் முதலில், கருச்சிருஷ்டித் தொடக்கத்தில் நுண்ணிய வடிவிலிருந்து பெருகிக் கருப்பிண்டமாய்ச் சிசுவாய்ப்பின் உலகிடை பிறந்து வளர்ந்து அறிவனுபவங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றதாம். அந்த முதல் ஒளி அணுவே இத்தேகத்தில், எல்லா அறிவுக்கும், உயிருக்கும் , வாழ்வுக்கும், அனுபவத்திற்கும் ஆதாரமாய் இருக்கின்றதாம், இவ்வளவு ஆற்றல் கொண்ட அந்த ஒளி அணுநிலையில் மனம் ஒன்றிச் சலமின்றி , முழு உண்மையைத் தெரிந்துகொள்ள முயலும் ஒருவனுக்குப் பக்குவ காலத்தே அருள் அறிவாக வெளியாகிக் கண்டு கொள்ளச் செய்கின்றதாம். அந்த அருள் ஞானத்தால் உணர்ந்துகொண்டது. எல்லா ஆற்றலுக்கும் அனுபவத்திற்கும் உரியது. இப்படித் தனிச் சிறப்போடு திகழும் இயல்பு இந்த ஓர் அணுவில் வெளியாகின்றது உண்மை அனுபவமேயாம்.

மேற்படி தனிச்சிறப்போடு திகழும் அற்புத ஜோதி அணுவை ஒவ்வொரு மனிதனுமே தனித்தனி கண்டு கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. இதனால் ஒருவனில் உள்ளது போன்ற அவ்வொளி அணு யாவருள்ளும் வேறு வேறாக இருப்பதாய்த் தோற்றுகின்றது. உண்மை அப்படி அல்ல அந்த ஒளி யணுவில் விளங்கும் சிறப்புப் பொருள் தன்னேரில்லாத ஒன்றாகவே இருந்துகொண்டு, ஒவ்வொரு அணுவிலும் தானே பூரணமாய் விளங்குதல் உண்மை என அருளறிவால் உணர்கின்றோம். இந்தமெய்யறியுணர்வே தன்னுண்மை அருள்ஞானமாகத் தனி ஒருவன் அறிகின்றான் என்னலாம். இதுதான் நான் என்பதன் அனுபவப் பொருள் விளக்கமாக இருக்கின்றது. கடவுளே இந்த ஆன்ம சிற்றணு வடிவில், அருள்விளக்கத்தோடு வெளிப்பட்டுத் தானே இவனாய், அல்லது நானாய், எங்கும் நானாய் இருப்பதாக அறியப்படுகின்றது.

நமது அகம் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஒன்றே ஏக தனிபரம்பொருளாய் இருந்துகொண்டு, எங்கெங்கும் , தாயாய் விளங்குவதை யுணர்த்துகின்றது.இது அருள் அறிவாற்காணும் உண்மை இப்படி அருள் ஒளிப்பரம்பொருள் எங்கணும் விளங்குதல் உண்மை என்னும்போது, அப் பரம்பொருள்தானே ஒவ்வொரு உயிரிலும் அகம் பொருந்தியிருந்து கொண்டும், புறஞ்சூழ்ந்து ஏந்திக்கொண்டும் இருப்பனும் உண்மையே ஆம். இதனால் எங்கெங்கும் உள்ள தனித்தனி ஒவ்வொரு உயிருக்கும் எது எது எந்த அளவுக்குத் தேவையோ , அதையதை அந்த அளவுக்கு உருவாகி வழங்கி வழங்கி வாழ்வித்து வாழ்வித்து மேனிலைக்கு ஏற்றிகொண்டே இருக்கின்றார் நம்பதி என்பது மெய்யாம். இவ்வுண்மையை உள்ளபடி தெளிகின்றபோதுதான் இந்த எங்கெங்கிருந்துயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்தருள் அருட்பெருஞ்ஜோதி என்பதன் மெய்பொருள் விளங்கும்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt