
167. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழில்
168. ஐந்தையு மெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) சிவம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் உலகம் கற்பித்துக்கொண்டுள்ள சைவசமயத் தெய்வ வடிவமாகப் பலரும் கருதுகின்றனர். அகநின்று உண்மை காண்பார்களே, அன்பு, அருள், இன்பம், அல்லது சத்து, சித்து, ஆனந்தமே தன் இயற்கைப் பெருங்குண்மாய்ச் செயலாய், எங்கும் நிரம்பியுள்ள இறைஜோதியே என உள்ளவாறு உணர்ந்துகொண்டிருக்கின்றனர். அகவுண்மையேயார்ந்து, அதனை வெளியிடற்கென்றே ஆக்கப்பட்டது தமிழ், இத்தமிழின் உண்மையே சிவானுபவ நிலை யாக இருக்கின்றது. எனவே, சமயாதீத, மதாதீத அன்பருளின்ப அருட்பெருஞ்ஜோதியே முன்னர் சிவம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது என்று தெரிந்து யாவரும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். இத்தமிழ் சிவகற்பனா விளக்கமே அக உண்மை நிரம்பியதாய், அனுபவசித்திக்கு எளியதாய், அருள் உணர்வே யன்றி பிறதுணை ஏதும்வேண்டாததாய் இருக்கின்றதால் நம் அருட்பிரகாசர் அச்சிவானுபவ அடிப்படையில் சுத்த சிவ சன்மார்க்கத்தை வழங்கியுள்ளார். ஆகையால், சுத்த சன்மார்க்கத்தை அருட்பெரு நோக்கோடு ஆழ்ந்து பயின்று எவரும் பெரும்பயன் அடைதலே திருவருட்சம்மதம்.
மனத்தில் கவலையொழிய வேண்டுமானால், அம்மனத்தில், தனக்குவமையிலாதான் தாளுக்கு இடம் அளிக்கவேண்டும். இக்கருத்தே இந்தச் சிந்தையிலே துன்பொழிய அச் சிந்தையில் சிவம் திகழ வேண்டும் எனக் குறிக்கப்படுகின்றாது. அகம் வளர் அருட்பெருஞ்ஜோதியே இப்படி ( “ நீ) சிந்தையில் துன்பொழி “ என்றது. எப்படி துன்பொழிப்பது என்றால், அதற்கு உபாயம் “ சிவம் பெறுக “ என்று அருள்கின்றதாம். சித்தம் சிவமாக்கிக் கொள்ளுதல் வெற்றுச்சிந்தனையால் ஆகக்கூடியதாயில்லை. புலன் இச்சை தவிர்த்து ஜீவ தயவால் உள்ளிருந்து பரோபகாரச் செயல் புரியும்போதுதான் சித்த மகிழ நித்த அருட்பெருஞ் ஜோதி உதவுகின்றதாம்.
அருட்பெருஞ்ஜோதிபதி ஆனந்த நடனம் புரிகின்றவராய்க் கொள்ளப்படும் அனந்தநடனமாவது ஆன்மாவுக்கு மெய்யின்பானுபவம் சிந்திதற்பொருட்டு இடையறாது என்றும் நிகழ்த்தப்படுகின்றா ஆக்கலாதி ஐந்தொழிற் காரியப்பாடாம், இதனால் தன்பால் முற்றும் புகலடைந்த புண்ணியனுக்குத் தன்னையே தந்தருளும் அருட்பெருஞ்ஜோதி, தன் ஐந்தொழிற் செயலையும் கூட அப் புண்ணியன் மூலமாக வெளிப்படச் செய்துவிடுகின்றதாம். இதனால் இந்தப் புண்ணிய சுத்த சன்மார்க்கிக்கு ஐந்தொழிற் செயல் சிந்தித்ததாக விளங்குகின்றது. உண்மையில் அந்த ஒன்றான அருட்பெருஞ்ஜோதிபதியே இவனில் இவனாக அருளால் விளங்கிக்கொண்டு ஐந்தொழில் இயற்றுகின்றார் என்பஹ்டு சத்தியமாம் ஒன்றான கடவுளே ஒவ்வொருவரின் உள்ளிருந்தும் விளங்கலால், சன்மார்க்க சித்தி பெற்றோர் எண்ணில் பலவாய்த் தோற்றினும் , அக அனுபவத்தில் ஒருவராகவே இருந்து அருள் இன்பம் விளைவிக்கின்றாஅர் ஆம்.
ஆனந்த அருட்பெருஞ்ஜோதியே நம் பெருமானுக்குச் சிந்தையில் துன்பொழிய ஆசித்து அருள்பாலித்து, ஐந்தொழிலையும் செய்ய வைத்துவிட்டிருக்கின்றதாம். இதனால், இவரது உள்ளத்தில் சுத்த ஆனந்தம் என்றும் நிலவக்கூடியதாய் இருக்கின்றதாம். இந்த ஆனந்தபூர்த்தியான உள்ளத்தில் எக்காலத்தும் சிற்றளவுத் துன்பத்திற்கும் கொஞ்சமும் இடமில்லையாம். இப்படித்தான் சிந்தையில் துன்பொழித்தல் சரியான முறையாகும். மற்றெந்த வகையாலும் துன்பத்தை அடியோடு ஒழித்துக்கட்ட முடியாதாம். ஆதலின், அருட்பெருஞ்ஜோதியைப் பெற்று ஆனந்த வாழ்வில் ஓங்குவோமாக.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.