
153. காட்சியும் காணாக் காட்சியும் அது தரும்
154. ஆட்சியு மாகிய அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) ஆன்மா இயற்கையில் இறையுண்மை கொண்டிருந்தாலும் கூட, அது அனுபவப்படாதவரையும் பயனின்றிக் கிடக்கின்றதாம். அவ் ஆன்மானுபவ அடைவின்பொருட்டே ஆன்மாவுக்கு ஜீவகரணேந்திரிய தேகாதி பிரபஞ்சம் வழங்கப்பட்டுள்ளனவாம், மானிடப் பிறப்புத் தேகம்தான் தத்துவநிறைவு கொண்டதாய்ப் பக்கு வசத்தால் அருளடந்து , தத்துவ நிலை கடந்து, அதீதத்தே, விளங்கும் இறையனுபவம் ஏற்று, முத்தேக சித்திநிலை கொண்டு விளங்குவதாயு மிருக்கின்றதாம். ஆன்மாவுக்கு ஏற்படும் அருள் அனுபவமே உண்மைக்காட்சியின் உயர் பயனாக உள்ளதாம். இவ்வருள் நிலை சுத்தமனத்தில் விளங்குவது. சுத்த மன அறிவோ புலன் அவா கடந்த மன உணர்வில்தான் தயாநெகிழ்ச்சி உண்டாகும்போது ஏற்படுவதாம். மனோ எண்ணத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள், முன்னர் கண் முதலிய இந்திரிய வழியில் உட்சென்று பதிவுற்றனவேயாம்.
கண்ணால் காண்பது காட்சி எனப்படும். ஒரு சமயம், ஓரிடத்தில் கண்டகாட்சி மனத்தில் பதிவாகி, உணர்வில் வெளிப்பட்டு விளங்கும்போது அது மனக்கண் காட்சியாகும். புறக்காட்சியாகக் காணப்படுவதில்லை. புறக்காட்சி மறைந்து ஒழிந்தாலும் அகக்காட்சி யொழிகின்றதில்லை. அந்த அகக்காட்சி, கரணக் காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சி, என விரிவற்றிலங்கும். தேகேந்திரியத்தில் உள்ள, கண்ணால் காண்பது இந்திரியக்காட்சியாம். உடலிற்பொருந்தியுள்ள கண் ( கட்பொறியாக இருக்கின்றது) மனத்திற்குக் கண் கற்பனை எண்ணமாக, ஜீவனுக்குக் கண் உயிர் உணர்வாக, ஆன்மாவுக்குக் கண் அருள் ஞானமாக உள்ளதாம். இவற்றில், இந்திரியக் காட்சி, கரணக் காட்சி, ஜீவக்காட்சி, எல்லாம் காணப்படும் காட்சிகளாக இருக்கின்றன. இக்காட்சிகளைக் கண்டு, உட்கொண்டுதான் கலைஞான சாத்திரங்களையும், நுண்கலைப் பொருட்களையும் ஆக்கித்தந்துள்ளனர் ஆன்றோர் பலர். இவைகளை எல்லாம் காணவும், பயின்று முயன்று பயன்பெறவும் முடியும். இவையே காணும் காட்சிப் பயனாகும். இவற்றிற்கு மேற்பட்டது அக அருள் அனுபவத்தில் விளங்குவதாம். அக புறத்திலிருந்து பயனுறக் கொள்ள முடியாது. இதுவே காணாக் காட்சியாகக் குறிக்கப்படும். ஆன்ம இயற்கையாகிய தயவே, அருட்கண், ஞானக் கண், உண்மை உபநயனம் எனப்படுவது.
மேற்குறித்த ஆன்மக்கண்ணால், மெய்யருள் உணர்வால் தான் மெய்ப்பொருளை உண்மையாகக் காணவும், பயன்கொள்ளவும் முடியும். மற்ற கண்கண்ட காட்சியாலும், ஜீவகரணேந்திரியக் கலையறிவுக் காட்சியாலும், உண்மை விளங்காது தடுமாற்றமே ஏற்படும் , சான்று:
“ சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றஞ் சொல்வதன்றி
நேத்திரங்கள் போல்காட்ட நேராவே – நேத்திரங்கள்
சிற்றம் பலவன் திருவருள் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து”
என்று அருட்பாவால், அருளே கண்ணாகக் கொண்டு வாழ்வு பெற வேண்டுவது முக்கியம். அகத்தில் அருள் ஒளியாம் கண்ணைப் பெற்று, உலக வாழ்வில் விளங்கும்போது தான், காட்சியும் காணாக்கட்சியும், அது தரும் ஆட்சியும் ( அனுபவமும்) உடன் விளங்கும். அருளோடு கூடிய சத் விசாரப் பயனால் அருட்பெருஞ்ஜோதிக் காட்சியாம்: அந்நிலையுற்றிருந்துகொண்டு அருட்செயலொடு வாழ்வதே அருளாட்சியாம்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா…..
vallalarspace.com/vumt
Write a comment