Vallalar Universal Mission Trust   ramnad......
72. அகிலாண்ட சராசரநிலை


143. தாங்ககி லாண்ட சராசர நிலைநின்

144. றாங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) என்றுமுள்ள இறையருட் பெருஞ்ஜோதியின் பேர் ஆற்றல் என்னே! அனாதிகாலமாக, யாவற்றுக்கும் ஆதாரமாக எங்கும் இருந்துகொண்டிருப்பது நம் அருட்பெருஞ்ஜோதி. இவ் இயற்கையுண்மை ஒளியின் அருள் தன்மைதான் பிரபஞ்சக் காரியப்பாடாய், யாவுமாய்த் தோற்றி விளங்குகின்றதாம். முதலில் ஒவ்வொரு சிற்றணு நிலையிலிருந்து , பூத அணுத்திரள் பொருள்களாய், பெளதிக பிண்ட வடிவங்களாய்க் கூடிப் பெரிய பெரிய அண்டகோளங்களாய் விளங்கினவாம். அந்தப் பெருஞ்ஜோதி அண்டங்களிலிருந்து பூதாண்டங்களும், அவ் வண்டங்களில் பலவாகிய, பொருள்களூம், உயிரினங்களூம் தோற்றியுள்ளன.

தோற்றியுள்ள அண்டகோளங்களிலே சிறந்து விளங்குவன நாம் வசித்துவருகின்ற பூமிபோன்ற நிலவுலகங்களேயாம். ஏனெனில் , இதில்தான் இந்த மெய்யறிவின்பானு பலமுறும் மக்களினமும் தோன்றிப் பண்பாடெய்திடும் காரணத்தாலாம். இங்கு வாழவந்த மனிதனில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை வெளியாகியுள்ளது. இவன் தன்னில் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டடைந்து சூழநோக்கி, எப்பொருளும், எவ்வுயிரும் அந்த அருட்ஜோதியால் தாங்கப்பெற்று விளங்குகின்றதை யுணர்கின்றான். உயிரினங்களில் இங்குமங்கும் சஞ்சரித்துக் கொண்டிருப்பன, இயங்கிக்கொண்டிருப்பன எல்லாம் சரவுயிர்கள் எனப்படும். அப்படி இடம்பெயராது. நிலைநின்று வளர்ந்தோங்கும் தாவரம் முதலியன அசரவுயிர்கள் எனப்படும்.

நம் நிலவுலகில் மட்டும் எத்தனை எத்தனை சராசர உயிர்கள் இருக்கின்றன. இதுபோன்று எத்தனை கோடி நிலக் கோளங்களாகிய அண்டங்கள் உள்ளனவோ, அவைகளில் எல்லாம் எத்தனை எத்தனை கோடி சராசரங்கள் உள்ளனவோ யாரோ நின்று தாங்கி ஆண்டருள்கின்ற அருட்பெரும்பதியின் பேரருள் ஆற்றல் என்னே ! என்னே!

நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஒன்றான தனித் தலைமைப் பெரும்பதியாய், ஒருவரேயாக, ஏகநாயகனென உள்ளவர். அவர்தானே, எங்கும் பரிபூரணராய் இருந்து தனித் கருணையாட்சி புரிந்து கொண்டிருத்தல் உண்மையே, ஆகையால்தான் நம் இறைவர் அணுஅணு தோறும், உயிருயிர் தோறும் இருந்துகொண்டு தனது ஏகதேச விளக்கத்தை அங்கங்கு சிறிது சிறிது காட்டிக்கொண்டிருக்கின்றார். இந்த உண்மைக்காட்சியைத்தான் நமது வள்ளற்பெருமான் உண்ணின்றே கண்டு இப்படித் தாங்ககிலாண்ட சராசரநிலை நின்று ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி” என்று போற்றுகின்றார்.