Vallalar Universal Mission Trust   ramnad......
71. மெய்ப்பொருள் அருட்பெருஞ்ஜோதி

141. எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்

142. அப்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) பொருள்மயமானது இவ்வுலகு. அப்பொருள் , மண் , நீர், காற்று , வான், இயல்கொண்டு பலப்பலவாக விளங்குவதாம். இந்தப் பன்மைநிலைப் பொருள்களுக் கெல்லாம் முதலாய்த் தோற்றுவாயாக உள்ளது. அகண்ட வெளி நிறை இறைநிலைப் பொருளேயாம். இவ் இறைப் பொருளே அருட்பெருஞ்ஜோதி. இதுவே மெய்ப்பொருளாம். இந்த அருட்பெருஞ்ஜோதியையே மெய்ப்பொருளாயுணர்ந்து போற்றிக்கொள்ளுவர் சுத்தசன்மார்க்கர். வேறு வேறாகக் கண்டு வழுத்துவர் மற்ற மற்ற நெறியாளர்கள். ஏன் அப்படி என்றால், நமதுஇறை பரம்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி அகத்தும், புறத்தும், நிறையருளாகவும், பேரொளியாகவும் விளங்கக் கண்டு கொள்ளப்பட்டுள்ளதோடு, எங்கும் நீக்கமற ( ஒவ்வொரு அணுவிடத்திலும்) இருந்து கொண்டு எப்பொருளாகவும், எவ்வுயிராகவும், தன் ஏக தேச விளக்கத்தைக் காட்டியும் மறைத்தும் கொண்டிருப்பதாகக் காண்கின்றோம். ஆகையால் அந்த அருட்பெருஞ்ஜோதி ஒன்றே மெய்ப்பொருளாக, உண்மைப் பொருளாக உள்ளிருந்து விளங்க ,புறத்தே பலவகைத் தோற்றம் கொண்டு திகழ்கின்றதாம். அகத்தே நாம் கண்டுள்ள அருட்பெருஞ்ஜோதியாம் மெய்ப்பொருள் தானே புறத்தெப் பொருளாயும், அருள் உணர்வாம் கண்ணாரக்கண்டு களித்திருக்கின்றோம்.

நிறையருட்பெருநிலை நின்று நோக்காத ஏனையோர், புறவண்ணங்களையே கண்டும், யூகித்தும், ஆய்ந்தும், கற்பனை செய்தும் பல்வேறு பொருள்களாகவேயாவையும், நினைக்கின்றனர், பக்குவவசத்தால் புறநிலைக் காட்சிகளில், இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம எல்லைவரை சென்றும் தம் காட்சியனுபவத்தைப் பலவாகவே வெளியிடுகின்றனர். இவர்களின் கூற்று, மேற்படிக்குச் செல்லச் செல்லக் காட்சியனுபவம் சிறந்த தாகக் கொள்ளப்படுகின்றது. இவர்களின் முடிந்த மெய்ப்பொருள் அகத்திலங்கும் ஆன்மக்கடவுள் தானாம். அந்த அகமெய்ப் பொருளைத்தான், அவ் ஆன்ம ஞானிகள் ஒருமையிற்கண்டு கற்பனையால் விண்டனர். தனித்தனி ஒவ்வொரு ஞானியும், கற்பனை செய்து மெய்ப்பொருளைக் குறிக்க முயன்றதால், ஒன்றாகிய மெய்ப்பொருளுக்குப் பலவாகிய கற்பனைகள் மலிந்தன. பின்வந்தவர்கள், மெய்யறிவு விளக்கமும், கற்பனைத் திறமும் குன்றியவர்களாய் இருந்த்தால், அவர்கள் கண்ட மெய்ப்பொருல் வேறு வேறாகவே கொள்ளப்பட்டனவாம். அப்படிப் பலவாகக் குறிக்கப்பட்ட மெய்ப்பொருள், உண்மையில் ஒன்றாகத்தான் இருப்பதை இன்று நாம் அருணிலை நின்று காண்கின்றோம்.

உண்மை கண்டவர்கள் எதனை மெய்ப்பொருள் என்கின்றார்களோ. அது உண்மையில் நம் அருட்பெருஞ்ஜோதியாகவே இருகின்றது.

சொல்லுக்குப் பொருள், கல்வி கேள்விகளால் விளங்கும். ஆனால், இந்தப் பொருள் புறத்தேயாம். உண்மைப் பொருளல்ல. புறப்பொருட்கள் எவைக்கும் உள்ளீடாயிருந்து அது அதுவாக விளங்கச் செய்து கொண்டிருக்கும் ஒன்றே மெய்ப்பொருளாகும். அதுவே உண்மைப்பொருள் ஆம். அறிவாராய்ச்சிக்கு வெளியாவன அனந்த வண்ணப் பொருட்களே. மெய்யருள் உணர்ச்சிக்கு அனுபவப்படுவதுதான் ஒன்றான மெய்ப்பொருள். இவ் ஒன்றாம் பரம்பொருளே சச்சிதானந்த வடிவமானது என்ப.எனவே நமது அருட்பெருஞ்ஜோதியாம் மெய்ப்பொருள், ஆராய்ச்சியில் அனந்தமாயும், அருளாட்சியில் ஒன்றாயும் விளங்குகின்றது அனுபவமாம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா

vallalarspace.com/vumt