
139. வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
140. அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) நமதுதனித்தலைமப் பெரும்பதி ஆகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயல் உண்மை நிலை விளக்கம். என்னே! என்னே! அவர் அல்லது அது ( அருட்பெருஞ்ஜோதிக் கடவுள்) எல்லாம் வல்லவராயும் , எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் உள்ளாராம். இங்கு மூன்று நிலையில் குறிப்பு தரப்பெற்றுள்ளது. ஒவ்வொன்றையும் ஆய்ந்து விரிந்திலங்கக் காண்போம்,
எல்லாம் வல்லவர்; நம் இறை அருட்பெருஞ்ஜோதியைஎல்லாம் வல்லவர் என்று உரைக்கின்றனர். சர்வவல்லமையுள்ளவர் என்றால் அவரால் ஆகாதது ஒன்றுமில்லை ( Omnipotence) என்பர். இப்படி எல்லாம் வல்ல பேராற்றல் படைத்த இறைவரின் செய்கைதான் எங்கும் என்றும் நம்மைச் சூழ்ந்து கொண்டே யிருக்கின்றது. அந்தப் பெருஞ்செயலால்தான் இந்த அளப்பரும் பிரபஞ்சத்து அனைத்துக்காரியப்பாடுகளும் நிகழ்ந்துகொண்டுள்ளனவாம். இக் காரியப்பாட்டால், எப்பொருளும் , எவ்வுயிரும் , எவ்வாற்றலும், எத்தோற்றமும், எவ்விளைவும் ஆவதும் அழிவதுமாய் இருக்கின்றனவாம். ஆனால் அந்த அருள் இறை உண்மையைத்தான் உள்ளவாறு அறியமுடியாதிருக்கின்றதாம். இவ்வுலகில் காணப்படுகின்ற அல்லது அறியப்படுகின்ற எல்லாமும் அந்த அருட்பெருஞ்ஜோதியை அல்லாமல் இல்லை, எல்லாம் அதன் வெளியீடே எனினும், தோற்றுகின்ற எதுவும் அதுவாய் இல்லை. இவ்வுலகில் எதனை அருட்பெருஞ்ஜோதி என்று சொல்வது. குறிப்பிட்ட எதனையும் அருட்பெருஞ்ஜோதியாகக் கூறிச் சுட்டிக் காட்டிட முடியாது. ஆகவேதான் அவரை, எல்லாம் ஆனவர், என்றும், அதே சமயம் ஒன்றும் அல்லாதவர் என்றும் கூறப்படுகின்றது.
அருட்ஜோதி எல்லாம் வல்லதுதான், எல்லார்க்கும் நல்லின்பமே என்றும் விளங்கச்செய்யும் ஆற்றல் கொண்டதுதான், அப்படியானால், ஏன் இந்த உலகில் கொடுஞ் செயல்களும், துன்பங்களுமே, பெருகிக் கொண்டிருக்கின்றன? இவற்றையெல்லாம் ஏன் தடுக்கவோ, மாற்றவோ ஏற்படாமலே இருக்கச் செய்யவோ திருவருள் பாலிக்கின்றாரில்லை அந்தச் சர்வ வல்லமை படைத்த சர்வேஸ்வரர்! உண்மை இதுதான், அவர் சர்வ வல்லமையுடைய தயாபரர்தான், அவர் தமது உண்மையைத் தான் வெளியிடப் பெருந்தயவோடு இந்த மகாபிரபஞ்சக்காரியப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றார். அந்த இறையருள் ஞானம் வெளிப்படுமிடம் மனிதனின் அக ஆன்மபீடமாயிருக்கின்றது. இங்குதான் எல்லாம் வல்ல அருள் ஒளி மிளிர்கின்றது. புறப்புல போக வாழ்வில் அறியாமையாம் இருளாலும், மருளாலும் தயவில்லாச் செயலால் இன்னலிலே உழன்று கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த புலனின்பத்தில் இச்சையொழித்து தயாவொருமை பூண்டு நல்வாழ்வு வாழத்தொடங்கினால், எங்கும் இன்பமே பெருகும். இவன் உடற்பற்று நீங்கி உள்ளொளிர் அருட்ஜோதி வண்ணமாய் இருந்து வாழவேண்டிய வனாய் இருக்க அதனையுணராது மருள்வாழ்வால் துன்பத்தைப் பிணித்துக்கொண்டிருப்பது அறியாமைதானே, கடவுள், கருணை யோடு அருட்ஜோதியுலகில் இஅனை வாழ்விக்க எந்த வேளையிலும் எதிர்பார்த்துத் தயாராகவேதான் இருக்கின்றார். ஆனால், இவனோ புலன் இன்பத்தை மிக விரும்பிப் புறத்தே யுழன்று கொண்டு , பிழைப்பதுவே வாழ்வென மயங்கிக் கிடக்கின்றான். இந்த மயக்கம் தெளியவும்,அருள் ஒளியில் நாட்டமுண்டாகவும்தான் இவனுக்கு வன்மையான விதிச்சட்டமாகிய நியதிமுறை செய்திருக்கின்றார். அவ்விதிப்படி இயக்கிப் பக்குவப்படுத்தி நலம் காணச்செய்யும் செயலே உலகில் நடந்து கொண்டிருக்கின்றது. புலன் இன்ப அவாவொழிய அருளின்ப நாட்டமுண்டாக இந்த உலக இன்ப துன்பானுபவங்களிலிருந்து தேறுவதுதான் முறையாக இருக்கின்றது. அபக்குவத்தால் தயாவாழ்வு ஏற்காததால் மனிதன் தீமையில் குமைந்து கொண்டிருப்பது யார் குற்றம்? எவர் குற்றமுமில்லை. எல்லாம் வல்லானின் அருட்பெருஞ்செய்லேயாம் . மனிதன் ( மன் இதன்) நிலைத்த இன்ப வடிவினனாக அகத்திருந்து வாழவேண்டியவன், அறியாமையால் துன்பத்தில் பிழைத்துப் பிழைத்து மடிந்துகொண்டிருப்பதுஎன்ன பரிதாபம்! அருட்பெருஞ்ஜோதி கொண்டு அனகவாழ்வு வாழ அழைக்கின்ரார் அருட்பிரகாச வள்ளலார்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா
vallalarspace.com/vumt
Write a comment