
137. எப்பாலு மாய்வெளி யெல்லாம் கடந்துமேல்
138. அப்பாலு மாகிய அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) முன் அடிகளில், அவன், அவள், அது, என விளங்குகின்றதெல்லாம், நம் அருட்பெருஞ்ஜோதியே என்று தெளிவு செய்யப்பட்டது. இந்த அருட்ஜோதியைத்தான் பால் என்று கூறுவர். இனம், பாகுபாடு, இடம், தன்மை, ஊழ் முதலியனவும் பால என்ற சொல்லால் சுட்டப்படுதல் உண்டு. இலக்கணம் தரும் இனவகைப்பால் ஐந்தாக உள்ளது. அவை ‘; ஆண் பால், பெண் பால், ஒன்றன்பால், பலர்பால் , பலவின் பால், என்பன, இப்பால், அப்பால் என்று இடத்தையும் காலத்தையும் காட்ட வழங்கப்படும். இவ்விரு சுட்டுநிலையோடு அகத்தை அல்லது அனுபவத்தால் காண்டலாகிய பின்னிலையைக் குறிக்க, உப்பால் அல்லது உப்பக்கம் என்றும் முன்னோர் உணர்த்தியுள்ளனர்.
இங்கு நமது பதி எப்பாலுமாய் விளங்குகின்றார் என்பதற்கு விளக்கம், எவ்வொளியாயும், அவ்வொளிநிறை அகண்டாண்ட பிண்டவெளியிடம் எல்லாமாயும், அவ்வொளியால் உருவாய எவ்வுயிர்ப்பொருளாயும், தோற்றங்களாயும் தத்துவங்களாயும் உள்ளதெனலாம். இவைகளுக்குமேல் இன்னும் அறியப்படாதயாவற்றிற்கும் ஆதாரகாரணமாய் இருப்பதும் நம் அருட்பெருஞ்ஜோதியே ஆம். இதுதான், எல்லாம் கடந்து மேல் அப்பாலுமாகிய அருட்பெருஞ்ஜோதி என ஓதப்படும்.
அறிவுக்கு எட்டக்கூடியவரை, இப்பால், அப்பால் உப்பால் என்று சுட்டியுரைத்தல் கூடும். அந்த அறிவுக்கு விஷயமாகாத, அகத்திற்கு அகமாய உள்ள நிலையும், புறத்தே அகண்டமாய் அதீதமாய் விரிவுற்றிலங்கும் புறநிலையையும் அறியமுடியாதாம். அப்படி அறிவரிய நிலையை எப்படித் தெரிந்துகொள்ளுவது என்றால் , அருள் நிறையுணர்வு பெற்று அதுதானே ஆகிநின்று உணர்கின்றபோதுதான் , அந்த உணர்வுக்கே வெளியாவதாம்,. அந்த எப்பாலுமாய் நின்று அப்பாலுக்கப்பாலுமாய் நிரம்பியுள்ள அருட்பெருஞ்ஜோதியை இப்படித்தான் உணர்ந்து கொள்ளமுடியுமாம். இந்த அருட்பெருஞ்ஜோதிக்கும் முடிவில்லை; இதனையுணர்ந்து கொண்டிருக்கும் இவ்வருள் அனுபவ உணர்வு நிலைக்கும் முடிவேயில்லையாம். அருளால் இவ்வுண்மை கண்டு நின்று தான் “ எல்லாம் கடந்து மேல் அப்பாலுமாகிய அருட்பெருஞ்ஜோதி” ஒன்று ஓதுகின்றார் நம் பெருமானார்.
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா////
vallalarspace.com/vumt
Write a comment