Vallalar Universal Mission Trust   ramnad......
67. அவளுக்கு அவளான உண்மை

133. திவளுற்ற வண்டத் திரளினெங் கெங்கும்

134. அவளுக் கவளாம் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) இந்த நிலவுலகம் ஞாயிற்றுஜோதியினின்று பிரிந்து, பேர் அழல் வெள்ளமாய்ப் பாய்ந்து, திரண்டு, உருண்டு, பக்குவப்பட்டு சுழன்று விளங்கிக்கொண்டுள்ளதாம். உண்மையில் ஞாயிறே கூட நிறை ஒளி நிலையான நிபுலத்தின் ( nebula) கண்ணின்றே தோன்றியுள்ளதாம். இவ்வுண்மை எல்லாம் சுட்டும்படி அமைந்த சொற்றொடர், திவள் உற்ற அண்டத் திரள்” ஆக இருக்கின்றது. திவம் என்பது வானம், ஒளி, விளக்கம் என்ற பொருள் கொண்டது. திவாகரன் என்பது சூரியனைக் குறிப்பது, இதனால், திவளுற்ற அண்டத்திரள் என்பதற்கு அகண்டாண்ட வெளியில் பேரொளியால் உருவாகித் திகழும் பலவாகிய அண்டகோளங்கள் என்றாம் உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலை” என அருட்பிரகாசமாலையில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே உலகமெல்லாம் உருவாகித் திகழ உதவியுள்ளது நம் அருட்பெருஞ்ஜோதியே என்று அறிந்து கொள்ளலாம்.

பலவாகிய ஒளிசெய்யுலகில் பிறிது எதிலும் இல்லாத வசதி இந்தப் பூவுலகில்தான் அமைந்திருக்கிறதுபோலும்! அவ்வொளியே இவ்வுலகில், எப்பொருள் வடிவாயும், எவ்வுயிரின் உருவமாயும் தோற்றி விளங்குகின்றதாம். அப்படி உருவாகிய உயிரின் வடிவங்களிலே சிறந்தது இம்மனிதப்பிறப்பு உடலேயாம். இந்த உடல், பெண் சத்தாம் சுரோணிதத்தின் விளைவாம். இதற்குள்ளீடாய் இருந்து உயிருக்குயிராய்த் திகழும் நித்திய ஆன்ம ஒளி ஆணின் சத்தம் சமாயிருக்கின்றதாம். உள்ளிருந்தொளிரும் அருட்பெருஞ்ஜோதி யுண்மையே, அகத்தே அருள் ஞாவிளக்கமாயும், புறத்தே ஜோதிசெய் யுடலாயும் இருக்கின்றதாம். இறைவனின் உண்மையை நாம் அருட்பெருஞ்ஜோதியாக உணர்த்தப்பட்டுள்ளோம். இந்த அருட்ஜோதி என்பது, அருளும் ஜோதியுமான இரண்டல்ல, பிரிவற்ற ஒன்றேயாம். எதுபோல், எனில், சர்க்கரையும் அதன் சுவையும் போன்றாம். சர்க்கரையைவிட்டு அதன் சுவையைப் பிரிக்கமுடியாது . இப்படித்தான் நம் அருட்ஜோதிக்கடவுளும். இக் கடவுள் உண்மையைத்தான் நாம் நம் அகத்தும் புறத்தும் ஆன்மாவாயும் தேகமாயும் கொண்டுள்ளோம். இந்த அருட்ஜோதி இறையனுபவத்துடன் விளங்க வேண்டுமானால், அகமும் புறமும் பிரிவற்ற ஒன்றாகவேண்டும். அப்படி, ஆக, அக நின்று அருளோடு அனம நிறைவுற்று வாழ்வதே வழியாம். இது சுத்த சன்மார்க்க சாத்தியம்.

அருட்பெருஞ்ஜோதியே முன்னிரண்டு அடிகளில் அவனுக்கவனாய் இருக்கக் கண்டோம். இவ்விரண்டு அடிகளிலோ அந்த அருட்பெருஞ்ஜோதியே பெண்ணியல் கொண்ட உடல் வண்ண வடிவாய் இருத்தலின் அவளுக்கவளாய் இருப்பதாக மொழியப் பட்டுள்ளதென அறிகின்றோம். அக ஆன்ம இயல் ஆண், புறத்தேக அம்சம் பெண், அகம் நித்தியம், புறம் மாற்றமும் மறைவும் கொண்டது. நித்திய வாழ்வுக்கு நித்தியமாகிய உள்ளொளி நிலை நின்று உடலின்பத்தில் பற்றில்லாது அன்பும் அருளும் பெருக வாழ்வது முறையாகும். இந்த உடற்பற்றாகிய பெண்ணாசையைத்தான் மறக்கவே வேண்டும் என்பது ஆண் பெண் இருபாலர்க்குமே ஆணை செய்யப்பட்டதாம். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல்தான் மருவு பெண்ணாசை மறக்கவேவேண்டும் . என்ற அடியை மாற்றவும், தவிர்க்கவும் செய்கின்றனர் சில பாடகர்கள், இது முற்றும் அறியாமை . நமது அருட்ஜோதியே யாவுமாய் உள்ளவர் ஆதலின், அவனுக்கவனாயும், அவளுக்கவளாயும், பிறஎதற்கும் அது அதுவாயும் இருக்கின்றது உண்மையாம்.

vallalarspace.com/vumt