
129. படியடி வான்முடி பற்றினும் தோற்றா
130. அடிமுடி யெனுமோர் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) அளப்பரியிஅ அகண்டாகாரப் பெருவெளி முற்ரும் நிரம்பியுள்ள கடவுளுக்குத் திருவடி எங்கே? திருமுடி எங்கே? எத்திசையில் எவ்வளவு காலம் தேடிச்சென்றாலும் கடவுளர் அடிமுடி காண முடியாது. அவர் அனாதியானவர். அகண்டமானவர். ஆதலின், காலத்திற்கும், இடத்திற்கும் கட்டுப்படாதவர். மனிதன் இந்நிலவுலகிலிருந்து விரிந்து விளங்கும் வான்வெளியைப்பார்க்கின்றான். அவனுக்கு இம்மண்ணுலகம் அடியாகவும், விண்வெளி முடியாகவும் தோற்றுகின்றன. இவ்வுலகத்திலிருந்து மட்டுமல்ல, நிலா அல்லது பிற கோள்கல், விண் மீன்கள் ஆகிய எவ்விடத்திலிருந்து நோக்கினும்கூட இருப்பிடம் அடியாகவும், மேல் வானிடம் முடியாகவுமே தோற்றும். இதுபோல் வான் வெளியில் மேலே மேலே செல்லச்செல்ல, அதற்கு மேலே முடிய்வற்ற வானம் தோற்றிக் கொண்டேதான் இருக்கும்! ஆகவே கடவுளின் அல்லது அண்டவெளியின் அடிநிலையிது, முடிநிலையிது என்று கண்டுரைக்க முடியாதாம்!
மேற்படி ஆண்டவரின் அடிமுடிநிலையைக் கண்டு கொள்ளமுடியாது என்ற கருத்தையே , திருவடிகள் பாதாளம் கடந்து அறியவொண்ணாதிருபதாகவும், திருமுடி விண்வெளி கடந்து மேலிருப்பதாயும் கூறியான் முன்னோர், திருமால் வராகமாய் நிலத்தைக்குடைந்து கீழே கீழே சென்றும் காணாது மீண்டதாகவும், பிரமன் அன்னப்பறாவையாய், வான்வெளியிற் பறந்து பறந்து அலுத்து முடி காணமுடியாது திரும்பினதாகவும் கற்பனை செய்துள்ளனர். இவற்றால், அக்கடவுளர் திருவடியும் முடியும், மனிதராலும் தேவராலும் புறமுயற்சி எவ்வளவு செய்தும் காணமுடியாது என்பது குறிப்பாம்.
இதுகாறும் காண்பரிதாய் இருந்த கடவுளர் அடிமுடி, இப்பொழுது தனிப்பெருங்கருணையோடு அருட்பெருஞ்ஜோதியாய் வெளியாகியுள்ளதாம். இந்த அருட்பெருஞ்ஜோதிதான் அந்தக் கடவுளுக்கு அடியும் முடியும் ஆகும். “ அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி” என்ற இந்த அகவல் அடியில், ஆண்டவரின் அடிமுடி உண்மையை விளக்கித் தந்து விட்டார் நம் அருட்பிரகாச அடிகளார், எங்கும் பரிபூரணமாய் நிரம்பியுள்ள கடவுள், இந்த அருள்விளக்க மனிதனில், ஆன்மசிற்றணுவில் வெளியாகி அருளனுபத்தில் பூரணமாகவே திகழ்கின்றதாம். ஆகையால் அகமுற்று, அருள் உணர்வு பெற்று நிற்கும் மனிதன் , அக்கடவுள் நிலையில் இருக்கின்றவனாகவே அறிகின்றான். அப்போது அந்த அருள் உணர்வே, ஆண்டவரின் ஒரு திருவடியாகவும், சூழ உள்ள அகண்ட பெருஞ்ஜோதியே மற்றொரு திருவடியாகவும், காண்கின்றான். இவ்வுண்மையே அருட்பிரகாசமாலையில் முதற்கண் வழங்கப்பட்டுள்ளது. அது, உலகமெல்லாம் உதிக்கின்ற ஒளிநிலை, மெய்யின்பம் உறுகின்ற வெளிநிலை என்று உபயநிலை ஆகி இலக்கிய நின் சேவடிகள் என்றதால் விளங்கும்.
மேற்படி உபயபதநிலை விளக்கம், சிற்றம்பலத்தில் அருள் உணர்வுடன் இருந்து அறியப்படுவதாம். இத்திருவடி ஞானம் மட்டும் மனிதனுக்கு நிலையான பேரின்ப வாழ்வு வழங்கிவிடாது, மனிதனுக்கு கால் கால்பங்குதான், மேலுள்ள உடலும் தலையும் சேர்ந்தால்தான் முழுமைபெற்றவனாவான். கடவுளரின் முடிநிலைஎன்பது முழுமையான சச்சிதானந்த நிறைவண்ணமே ஆகும். இந் நிலையனுபவம் சிற்சபையினின்றே ஏற்றுத் திகழ்பவம். முத்தேக சித்தி கொண்டு மூவா இன்பில் நிலவும் சுத்த சன்மார்க்கி ஆவான் ஆகவே நம்பதியின் திருவடியும் திருமுடியும் நமது அம்பலத்தில் அனுபவப்படுவனவே எனத் தெளியலாம். சைவ தெய்வக் கற்பனையில், சிவனது தாமரைத் திருவடியும், நிலவும், கங்கையும், பாம்பும் விளங்கும் திருமுடியும் மதாதீதத்தில், நம் அருட்பெருஞ்ஜோதியாய்த் திகழ்கின்றதாம். “ அடியும் முடியும் உனக்குள்ளே காண்” என்பர்.
தேவராலும், பிற யாவராலும் எக்காலத்தும் கண்டுகொள்ள முடியாத கடவுளர் அடிமுடியை இந்தச் சிறுமாமனிதன் கண்டு கொண்டதோடு, அடையப் பெற்று அழியா வாழ்வில் கழியா இன்பில் விளங்கவும் முடிகின்றது என்னில், என்ன வியப்பு! இது ஒன்றும் வியப்பேயில்லை. இது இயல்பே என்பது உண்மை, எவ்வாறெனில், அருட்பெருஞ்ஜோதிக் கடவுள், உவமையில்லாராய், எங்கும் பரிபூரணராய் இருப்பதால், அவரையன்றி, வேற்று தேவரோ, மனிதரோ யாருமில்லை. மக்கள், தேவர், நரகர் பலராகத் தோற்றும் நிலை, நிலையற்ற புறத்தோற்றங்களேயாம். ஆனால், புறந்தோற்றாத அருட்பெருஞ்ஜோதி ஒன்றே, புறந்தோன்றும் யாவுமாய் விளங்கி நிற்கின்றதாகும். இந்த அருப்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை மனித வடிவில் வெளியாகி நிலை கொள்ளுகின்றபோது, இதுவரை கடவுள் அருட்பெருஞ்ஜோதியாய் அகநிலையில் இருந்து வந்தார் என்றும், உலக வாழ்வில் வெளிப்படாதிருந்தார் என்றும், இப் பொழுதே அகமிருந்து அனகமாய் மனித வடிவில் அழிவின்றி நிலைத்து வாழ வந்துவிட்டுள்ளார் என்றும் அறிகின்றோம். இந்த சுத்த நெறியில்தான் மனிதன் அழியா இன்பில் வாழ வந்துள்ளது உண்மை உண்மை!
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment