Vallalar Universal Mission Trust   ramnad......
59. தநுகரணாதிகள் கடந்த அனுபவம்


117. தநுகரணாதிகள் தாங்கடந் தறியுமோர்

118. அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) தநு என்பது உடல், கரணமாவது மனம். அம் மனத்தின் விளக்கத்துக்குத் துணையான புறக்காயமும், வாக்கும் அக புத்தி சித்த அகங்காரமுமாம். இவையன்றிக் கருவிகளும் சடங்குகளும் கரணம் எனப்படும்.இக்கரணமெல்லாம் காரணத்தின் விளைவேயாம். அடிப்படையாய் இருக்கின்ற இறையுண்மை வெளிப்பட்டு விளங்குவதற்குத் தான் அகண்ட பேருலகத்திற்குள் ன் யாவும் தோற்றுவிக்கப்பட்டுள்ளனவாம். ஆதலின் அந்த இறை உண்மையே யாவும் வெளிப்பட்டிலங்கக் காரணமாயுள்ளது என்பது விளங்கும். மேலும், இறை காரணமாகத் தோற்ற செயல்பட்டு அல்லது காரியப்பட்டு விளங்குகின்றனவே கரணம் என்னலும் தகும். இங்கு தனு கரணாதிகள் என்ப்பட்டுள்ளதால், தேக கரணத்தோடு அவற்றிற்குத் துணையான புவன போகங்களும் கொள்ளப்படும். புவனமாவது உலகங்கள், இவை அண்ட பிண்டங்களில் பலப்பலவாக உள்ளனவாம். போகம் என்பது இன்பவிழைஇவைக் குறிப்பாது இது மனோ கரண எல்லா வரை தோற்றி மறையும்.

மேற்குறித்த தநுகரணாதிகளினால் துய்க்கப்படுகின்றது கடவுளின்பமாகாது. இதனால்தான் மனிதனுடைய பகுத்தறிவுக்குக் கடவுள் உண்மையும் விளங்குவதில்லை. மெய்யின்பமும் இன்னதென்று தெரிகின்றதே இல்லையாம். பகுத்தறிவுவாதிகள் உலகாயத , பொருளாயத அறிவியலார்கள், கடவுள் என்பது ஒன்றில்லை என்னும் நாத்திகர்கள், உண்மை அறியாமலே கடவுள் உண்டென்று நம்புகின்ற ஆத்திகர்கள் உலகில் நிறைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தநுகரணாதிகளைக் கடந்து நின்று, அருள் உணர்வு பெற்று உண்மையை உள்ளவாறு காணாதவர்களேயாவார்கள். எவ்வாற்றாலும் தநுகரணாதிகளுக்குச் சிறிதும் அறியப்படாததாய் உள்ளது நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை. அப்படி அறியப்படாததாயுள்ள கடவுளை மனிதன் காண்பதும் அடைவதும் எப்படி முடியும்? தநுகரணாதிகளுக்குப் புலனாகாதது என்பது உண்மைதான். ஆனால், அத்தநுகரணாதிகளைக் கடந்து சுத்த மனத்தோடு அருள்மயமாகித் தயவு வண்ண்மாகி நிற்கும் சுத்த சன்மார்க்கத்திற்கு அருட்பெருஞ்ஜோதி உண்மை உணரப்படுகின்றதாம். அப்படித் திருவருள் நிறைவால் ஓதாதேயுணர்ந்து , அனுபவத்தில் பெற்று விளங்குகின்றவர், நம் வள்ளல் திருவருட்பிரகாசர் ஆவார். அவரன்றோ இப்படி அருட்பெருஞ்ஜோதிக்கடவுள் உண்மையை அனகமாக வழங்கியுள்ளார். அதனையே புறத்திருந்து உணராதே ஓதிக் கொண்டிருக்கும் நாம் தயாவொருமையுள்ளால் அருளால் அறிந்து அனுபவிக்கலாம் என்பது சத்தியம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.