Vallalar Universal Mission Trust   ramnad......
58. சாதி மதம் சமயம் காணாதது


115. சாதியும் மதமுஞ் சமயமுங் காணா

116. ஆதிய நாதியாம் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) ஏகமாய்ப் பிறிதற்றுத் தானேயாய் என்றும் விளங்கிக்கொண்டிருக்கும் உண்மைப்பரம்பொருளே நம் அருட்பெருஞ்ஜோதியாகும். அந்த ஒன்றான இறை பேரொளியே இந்த அகண்ட பெரு வெளிமுற்றும் இயற்கையுண்மை நிறைவாகி விளங்கிக் கொண்டிருப்பதாம் . இந் நிறையொளி நிலை இயல்பாகவே என்றும் உள்ளதாகையால் , இது ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி எனப்படும். ஆனால் இந்த இயல் ஒளியையோ முதலாய்க்கொண்டு இப்பிரபஞ்சம் முழுமையும் தோன்றியுள்ள காரணத்தால் நம் அருட்பெருஞ்ஜோதிய் இவற்றிற்கெல்லாம் ஆதியானதாய்க் கொள்ளப்படுகின்றது. இவையே நம் அருட்பெருஞ்ஜோதியின் அநாதியும், ஆதியுமான உண்மையாகும்.

இப்பாடி ஆதியந்தமில்லா அருட்பெருஞ்ஜோதிக்கடவுளை உள்ளவாறு கண்டு, போற்றி உய்வது எப்படி? எப்படியென்றால் , தயவு நிரம்பிய சுத்தசன்மார்க்க சத்விசாரத்தால் உள்ளவாறு காணவும், அந்நெறி நின்று தயவுச் செயலோடு வாழ்வு நடத்துவதால் அக்கடவுள் அனுபவம் பெற்று உய்வதும் சாத்தியமாம். இப்படித்தான் நாம் கடவுளைக் கண்டடையக்கூடுமே யல்லாது மற்ற எந்த வழியாலும் கூடாதாம். முன்னோர் வகுத்தளித்த, சாதி, மதம், சமயம் எல்லாம் மக்களுக்கு நல்லின்ப வாழ்வை வழங்கும் எனவே கருதிவந்தனர் பலரும். ஆனால் அந்நெறிகள் எல்லாம் சத்து உண்மையாகிய அருள் இறையை அடிப்படையாய் ஏற்று வழங்கப்படாதடால் சுத்த சத்து நெறியாக, சுத்த சன்மார்க்கமாக விளங்கவில்லை. அவர்களுடைய மார்க்கங்கள் பலவாகவும், சாதி மத சமயம் அவற்றிற்கான கொள்கை கோட்பாடு, விழா வைபவங்கள் வேறுவேறாகவும் வழங்கப்பட்டன. அன்றியும் அந்நெறிகள் புறத்தனவாக விளங்கி , மக்கள் சமுதாயத்தை உண்மை கொண்டொழுகி, ஒன்றுபட்டு வாழ வகை செய்யாது, பிரிவுபட்டு, குலைவுற்று, ஒழியவே செய்து வருகின்றனவாம். ஆனால் அவர்களும் தத்தம் நெறியே தெய்வீக வாழ்வு தரும் சன்மார்க்கம் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். அநேகமாக அவர்கள் கடவுள் நிலையைவிட்டுப் பிரிந்துள்ளதாகவும், அந்நிலைக்குள் சென்று அடையப் போவதாகவும் கூறிக்கொள்ளுகின்றனர். அவைகளால் உலகுக்கு நல்வாழ்வு வாராது என்பது தெளிவு.

சத்தாகிய அருட்பெருஞ்ஜோதியிடத்திலிருந்து நேரடியாகச் செயல்படும் நெறிமுறையே சுத்த சன்மார்க்கமாக இருக்கின்றது. இறை அருள் ஒளி ஒன்றே யாவற்றின் அகநிலையுமாம், புற வண்ணம், வேறு வேறான பொருளாய், உயிராய், ஆற்றலாய், தோற்றமாய், அறிவாய், அனுபவமாய் விளங்குகின்றதாம். ஆதலின் அந்த ஒன்றான அகம் பொருந்தி நின்று, அருள்மயமாய் யாவையும் கண்டு, அன்பாலே தயவாலே, ஒத்துவாழ்ந்து நல்லின்பம் பெறவேண்டியதே நம் கடமையாம். அஃதே கடவுளர் திருவுள்ளமுமாகும். இவ்வாழ்வு முறையே சன்மார்க்கமாம் பிறப் புற நெறிகள், அக ஒருமையும், உரிமையும் உணர்ந்து ஒத்து வாழத் தடையாயிருக்கின்றனவாம். சாதி, மதம், சமயம் எல்லாம் இயற்கையல்ல, மக்கள் கற்பித்துக்கொண்டவையே, அகத்தில் ஒன்றான அருள் விளக்கமில்லாது மருள் மனோ கற்பனையில் , அல்லது ஏகதேச விளக்கங்கொண்ட தற்போத உணர்வில் எழுந்த அச்சாதி சமயங்கள் தடையாய்த் தோற்றியுள்ளது வியப்பல்ல. உள்ளொளி பெற்று ஒன்றி வாழும் வண்ணம், மக்கள் சமுதாட்யத்தை அமைத்துகொள்ளுதல் பொருத்தமாம். புறவண்ணத் தோற்றங்களில் புலன் இச்சையும் வெறுப்பும், கொள்ளாது, சுத்த தயா இன்பப் பெருக்குக்காக ஒத்து வாழ்தல் வேண்டும், சாதியும் மதமும், சமயமும் காணா ஆதியும் அநாதியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதியை கண்டு வாழும் முறை இந்த அகவல் விளக்கத்தால் அறியப்படுகின்றதாம். அநாதி, அனாதி என்பன , வட தென்மொழி வழக்கு. அன் + ஆதி அனாதியாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt