
113. பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
114. அறிவுக் கறிவம் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) முன் அடிகளில், அருட்பெருஞ்ஜோதியானது தன்னை எக்காலத்தும், சிறிதளவும் பிரியாதது என்று கூறினார். என்றேனும் பிரிவுற்றதெனில் அக்கடவுள் நிலைக்கு வேறாக, அயலாக, அன்னியமாகத் தான் இருக்க நேர்ந்துவிடுவதாம், அப்போது , அக் கடவுளின் நிறைநிலையாகிய பூர்ணத்துவம் பொய்த்துவிடும். அதாவது தானும் கடவுளும் பிரிந்து இருப்பதாயின் கடவுள் எங்கும் நிரம்பியுள்ளவர் என்ற கருத்துக்கு ஒவ்வாதுபோம். அப்போது கடவுள் தன்னில் தன்னில் இல்லை என்றே கொள்ளநேரும். ஆனால், உண்மையில் அப்படிக் கடவுள் நிலையில் பிரிவென்பதே யில்லையாம்.
பிரிவு என்ற சொல், ஒன்றிலிருந்து வேறாதலைக் குறிப்பது ஒன்றை இரண்டாகவோ பலவாகவோ பிரித்துப் பகுத்துக் காண்பது பிரிவுநிலையாம். அதுபோல், ஒன்றிலிருந்து அதற்கு அயலாக மற்றொன்று பலவோ தோன்றி விளங்குதலும் பிரிவு நிலையாகவே கொள்ளப்படும் . அப்படியெல்லாம் பிரிவுநிலை என்பது நம் அருட்பெருஞ்ஜோதி பதியிடத்து எப்போதும் ஏற்படுகின்றதேயில்லையாம். அவர் ஒன்றாகவே, ஏகமாக, தனித்தலைமைப் பெரும்பதியாக , எங்கணும் பரிபூரணமாய் இருக்கின்றார் என்பதுவே மெய்ஞ்ஞானியர் அனுபவம். இதனால் பிரிவுநிலை இல்லாது இருக்கின்ற கடவுள், தானே தான் யாவுமாய்த் தோற்றி விளங்குகின்றவர் என்பதும் உண்மையாம். இப்பாடி யாவும் தானேயாய் விளங்குவதால், அவரல்லாது பிற உயிரோ பொருளோ, பிறிதொன்றோ அக்கடவுளுக்கு வேறாய் இல்லாஇ என்பது தெளிவு. இந்த வேறாந்தன்மை , பிறிதென விளங்கும் இயல்பு நம் பரம்பொருளிடத்தே என்றும் இல்லையாம். இதுவே அயலறியா , பிறிதொன்றாகாப் பிறிவு நிலையாகக் குறிக்கப்பட்டுள்ளது ஈண்டு எனவே பிரிவு நிலை செயலால் ஏற்படுத்துவது, பிறிவுநிலை இயல்பாய்ப் பிறவாக விளங்கு நிலையைஉணர்த்துவதாம்.
இரண்டு படாதிருக்கும் இறைபரம்பொருளை, உண்மையாக உள்ளவாறு அறியாமல் தான்மனிதன் இறை ஞானத்தில் குறை பட்டுகிடந்தான் இதுவரை , மனிதன் அறிவு மருள்நிலையில்புறத்தே புலன் வாழ்வில் சென்று கொண்டிருக்கும் வரை, அகத்தில் மெய்ப்பொருள் விளக்கம் உண்டாகவில்லை. அதனால் அவனது கடவுள் ஞானமும் , தான் வேறு அக் கடவுள் வேறு என்ற பிறவாம் நிலையில் இருந்ததாம். உலகில், தாம் கடவுளைப் பிரிந்து அயலாய் இருப்பதாகக் கருதினா, “ அகம் பிரம்மம்” என்றுசொல்லிக்கொண்டிருந்த வேதாந்தியும்கூட தன் அனுபவ விளக்கக் காரண உடலை த் தன்னில் வேறாகவும் , துறக்கப்படவேண்டிய ஒன்றாகவும், அகத்திலங்கும் அக் கடவுளான்மாவே பற்றப்படவேண்டிய ஒன்றாகவும் கருதினான். அவை எல்லாம் சரி அல்ல என்பதை இன்று சுத்த சன்மார்க்கத்தினின்று காண்கிறோம்.
நமது அருட்பெருஞ்ஜோதி இறைவர்தானே, எங்கும் நிறை பரம்பொருளாய் இருந்துகொண்டு, ஆன்மசிற்றணுவில் வெளிப்பட்டு, அருள்ஞான விளக்கத்தோடு நாமாய்த் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். எனத் திருவருளால் உணர்த்தப்படுகின்றோம். அதுவே, அருட்பெருஞ்ஜோதியே, இப்படி இந்த நம் வண்ணமாய் இருந்துகொண்டு, அறிவுக்கறிவாய், நின்று அறிவிக்கின்றாதும், நாமாய் நின்ரு அறிகின்றதும் ஆகவுள்ளதாம். இவ் வுண்மையே இங்கு “ பிறிவுற்றறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக்கறிவாம் அருட்பெருஞோதி” என்று போற்றிக் கொள்ளப்பட்டிருக்கின்றதாம். இதனை அகநின்று அருளால் அறியாது, புறத்திலிருந்து மருளால் புகன்ற அத்துவிதஞானம் குறைவுடைத்தாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.
vallalarspace.com/vumt
Write a comment