Vallalar Universal Mission Trust   ramnad......
51. வாடுதல் நீக்கிய மணி மன்று


101. வாடுதல் நீக்கிய மணிமன்றிடையே

102. ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) நமது அருட்பெருங்கடவுள், எப்பொருளுக்கும் எவ்வுயிருக்கும் உள்ளீடாய் இருந்துகொண்டு அருள் ஆடல்புரிகின்றார். ஆடல் என்றால் உலகில் மக்கள் இயற்றுகின்ற புறக்கூத்து போன்றதல்ல. ஆண்டவரது அருட்பெருநடனம்யாதெனில், அவருடைய அருள் உண்மை வெளிப்பட, இடையறாது புரியப்படுகின்ற அருள் ஐந்தொழிற் செயலே யாம். இந்த ஆடல் உண்மை, பக்குவ மனிதனில், உடற்படைப்பு ஆக்கலாகவும், வளர்ப்பு காத்தலாகவும், உடற்பற்று ஒழித்தலை அழித்தற் செயலாகவும் பக்குஅம் வருவித்தலை அல்லது உட்கனிவித்தலை மறைத்தற் செயலாகவும், முடிவில் பேரின்பசித்தி வாழ்வு வழங்கு தலை அருளற்செயலாகவும் அறியலாகும். பக்குவம் உண்டாகாத வரை, ஆக்கல், காத்தல், அழித்தல் மூன்றும் புற உடலிடத்தும், மறைத்தல் , அருளல் ஆகிய இரண்டும் அக உயிராகிய ஆன்மாவிடத்தும், சதா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த ஐந்தொழில் நடனம் தோற்றரிய சிற்சபையின் கண்ணின்று என்றும் இயற்றப்படுகின்றது. அந்த சிற்சபை அகண்டவெளி நிறைபொற்சபையின் ஒரு சிற்றணுவே எனினும், அந்த ஒன்றான அருட்பெரும்பதியின் முழு விளக்க அனுபவமும் தன்னுட்கொண்டு விளங்குவதாம். எனவே இந்தக் கடவுட் சிற்சபை நித்தியமாய் உள்விளங்க, புறத்தே இந்தத் திருநடனச் செயலால் பக்குவம் ஏற்பட்டுக் கொண்டேயிருப்பது உண்மையாம்.

மேற்சொன்ன சிற்சபைதான் மணிமன்றம் எனப்படுவது. இது சுயம்பிரகாசமான , மாசில்லாத மணியொளி கொண்டதாயும், அருள் அற்புத நவமணி சித்தி சக்தியைத் தன்னுட்கொண்டதாயும், மனிதனைத் தன்நிலையிலிருத்தித் தன்மயமாய் விளங்கச் செய்யவல்ல அருட்பெருஞ்ஜோதிமணியாயும் இருக்கின்றதாம். இந்த மணிமன்றிடைதான் நம்பதி அருட்பெருஞ்ஜோதி நடராஜபதியாக ஆடிக்கொண்டேயிருக்கின்றார். திருவருளால், மனிதன் இம்மணிமன்றை அடைந்து அருள் வண்ணமாய்த் திகழும்போதுவாடுதல் அற்று அழியாமை பெற்று விளங்குகின்றவனாகி விடுகின்றான்.

மனிதன், மணிமன்றம் அடையாது , மண், பெண், பொன்னுக்காக மன்றாடிக்கொண்டிருக்கும்வரை வாட்டமே அடைவான், வாடியே போவான், ஆனால் மூவாசையை துறந்துவிட்டு மணிமன்றில் புகுந்தும் வாழ்வடைந்திட முடியாது. திருவருள் அனுபவத்தால் மணிமன்றவாணருடன் இரண்டற இருந்துகொண்டு, உலகியலைத் துறவாது, சுத்த தயா இயற்செயல், சூழ்நர்க்குப் பக்குவம் வருவிக்கப் புரிந்து கொண்டிருத்தலே அம்பலவ்வாழ்வாகும். இப்படித்தான் நம்பதி மணி மன்றில் நித்தமும் இருந்து கொண்டு அருளாடல் புரிகின்றார் அவரே நம்மையும் அம்பலத்திற் கலந்து கொண்டு வாழ்விக்கின்றார். வாடாமலர் போல் விளங்கவும் செய்கின்றார். இவ்வுண்மை எல்லாம் இவ்விரண்டு அடிகளில் ஒளி செய்து கொண்டிருக்கக் காண்கின்றோம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt