Vallalar Universal Mission Trust   ramnad......
49. பரஞான சிதம்பரம்

97. தம்பர ஞான சிதம்பர மெனுமோர்

98. அம்பரத்தோங்கிய அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) இங்கு அம்பரம் என்ற சொல் ஆகாசம் என்ற பொருளைச் சுட்ட வந்ததோடு அகவுண்மை விளக்கவும் வந்துள்ளதாம். சித்து என்ற சொல் ஞானம் எனப் பொருளாம். ஆகவே, சித்து அம்பரம் சிதம்பரம், அதாவாது ஞானாகாசம் ஆம். புறவெளி நிறைந்துள்ள ஆகாசம் பூதாகாசம் எனப்படும். அகமாகிய ஞான நிலையம்தான் சிதாகாசம் அல்லது சிதம்பரம் எனப்படுவது.

மேற்படி சிதம்பரம்தான் நம் சிற்றம்பலமாகவும் கூறப்படுவதாம். சிற்றம்பலம், அணுத்துவமாயுள்ள சிறிய அளவு இயல்பைக் குறிப்பது. ஆனால் சிதம்பரம் அறிவாகாச உண்மையை விளக்குவது. அம்பரம், அம்பலம், என்ற இரண்டில் முன்னதிலுள்ள ரகரம் 12 வது உயிர்மெய் வரிசையில் வந்து துவாதச அகவான் வெளியைக் குறிப்பதாயும், பின்னதிலுள்ல லகரம் 13 வது நிலை பெற்றுத் திரயோதச அருள் அனுபவ நிலையையுணர்த்துவதாயும் உள்ளனவாம். சிதம்பரம் அடைந்து திருவருள் வேண்டுவது நம் கடமை. ஆதலின் திருச்சந்நிதியில் நின்று திருச்சிற்றம்பலம்” என்று போற்ற ஆணை செய்யப்பட்டுள்ளோம். அப்படிப் போற்றினால் அம்பலம் நம்பலமாகி அருள் பாலிக்கும் என்பது ஆன்றோர் கருத்து , இதனால் தான் சிவனருள் வேண்டும் சைவப்பெருமக்கள் “திருச்சிற்றம்பலம்” என்று எதையும் தொடங்குவதும்முடிப்பதும் காண்கின்றோம். இச்சைவ அடிப்படையின்மீது எழுப்பப்பட்டுள்ள சுத்த சன்மார்க்கம் எல்லோருக்கும் உரிய அருட் பெரு நெறியாக இருக்கின்றது. இதில் சிவம் அருட்பெருஞ்ஜோதி ஆகிய நம் அக ஞானாகாசத்தே கண்டு அருளாற் கலந்து நிற்கும் உண்மை விளங்குகின்றதாம். இது முன்னோர் கண்ட , கொண்ட ஞானாகாச சிதம்பரநிலை அல்ல. அதற்கு மேற்பட்ட அருள் உண்மை கொண்ட முடிவான உத்தரஞான சிதம்பர நிலையாம்.

மேற்குறித்த உத்தரஞான சிதம்பர நிலையே தம்பரஞான சிதம்பரமாகக் குறித்துள்ளார் நம் வள்ளற்பெருமான். தம் பரஞானம் என்பது, தற்பரஞானம் எனவும் படும். முன் ஞானத்தில் அவ் வாகாசநிலையைப் பரமாகாச சொரூபி ஆகிய கடவுள் வடிவாகக் கண்டிருந்தனர். அதுவே இன்றைய சுத்த சன்மார்க்க உத்தர ஞானத்தால் தன் உண்மை நிலையாகவே கண்டுகொண்டுள்ளான் சுத்த சன்மார்க்கி, இந்த உத்தரஞான சிதம்பரத்தில்தான் யாவரும் போற்றிப் பெரும் பயன்பெறும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குகின்றார். இந்த உத்தர ஞான சிதம்பரம் நமது வடலூர் சத்திய ஞானசபா நிலையமே ஆகும்.

இன்று இந்தச் சத்திய ஞான சபையும் இதில் திகழும் அருட்பெருஞ்ஜோதியும் கற்பனை கடந்த அருட்பெருங்கடவுள் உண்மையை, மக்கள் சமுதாயம் முழுமைக்கும் அறிவித்து, அருள் நெறியில் ஒத்து வாழ்ந்து உய்ய உதவ வந்துள்ளனவாம். பழையதாகிய பூர்வஞான சிதம்பரம், அதன் சிவநடனபதி மூலமாய் மக்களின் ஒரு பிரிவினராகிய சைவர்களுக்குத்தான் இன்பளிக்கத் தோற்றுவிக்கப்பட்டதாம். அன்றியும், அச் சிதம்பராலயமும் சிவ மூர்த்தியும் யோக ஞான சித்தர்களின் தந்திர மந்திர யந்திர சக்தியால் தோற்றுவிக்கப்பட்டு உலகியல் வாழ்வுக்கு ஓரளவே உதவினதாகும். ஆனால் இன்றைய நம் உத்தரஞான சிதம்பரமாம் வடலூர் ஞான சபையும் அருட்பெருஞ்ஜோதிபதியும் பழ நெறி எதனாலும் அறிந்து அடையப்பெறாது சுத்த தயவோடு கூடிய சத் விசார பரோபகார வாழ்வால்தான் பெறக்கூடியதாய் இருக்கின்றதாம். இதனால் இப்பதியில் கற்பனா நெறிமுறை களுக்குச் சிறிதும் இடமில்லை. சன்மார்க்க உண்மையைப் புரிந்து கொள்ளாது பிற கோயில் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் , விழா வைபவம், முதலியவைபோல் செய்தல் கூடாது. ஜீவதயா விளக்கச் செயலும் கடவுள் உண்மை விளக்கக் குறிப்புக்களுமே என்றும் வழங்கப்படவேண்டும்.

தம்பர ஞான சிதம்பரம் என்னுமோர் அம்பரம் எதுவெனில் நம் உத்தரஞான சிதம்பரமேயாம். இந்த அம்பரத்து ஓங்குகின்றதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார் நம் அடிகளார். இத் தெளிவு நிலையைத்தான் ஒவ்வொருவரும் போற்றிப் பயன்கொள்ளவேண்டுமே யல்லாது சைவச்சார்புடன் போற்றிப் பெறும் சக்தி, சித்தி, அனுபவங்களில் இலட்சியம் வைக்கவேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் நம் பெருமானார். இந்த உண்மை வாசகத்தை ஏற்று ஒழுகிப் பயன்பெற வேண்டும் நாம். இதனையுணர்ந்து கொள்ளாமல், அலட்சியப்படுத்துவதும், பழைய வழிகளையே நம்பிப் பின்பற்றிச் சென்று பயனுறாது ஒழிவதும் திருவருட் சம்மதமல்லவாம்.

வள்ளலார், சிவம், சிவம் என்று குறித்துள்ளது பழைய கற்பனா சொற்பொருளைக் குறிப்பதாகக் கொள்வது கூடாது, உண்மையில் எல்லோரும் போற்றிக்கொள்ளும் அருட்பெருஞ்ஜோதியையே சிவமாக உளம் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மையாகும். இவ்வுண்மையைத் தெளிவு செய்விப்பது அருட்பெருஞ்ஜோதி அகவலின் ஆரம்ப அடிகளிலேயே காண்கின்றோம் அருட்சிவ நெறிசார் அருட்பெருநிலை வாழ் அருட் சிவபதியாம் அருட்பெருஞ்ஜோதி” என்பதில் அருட்பெருஞ்ஜோதியே அந்தச் சிவபதி என்பது அனுபவ விளக்கமாம். சிவமும் அருட்பெருஞ்ஜோதியும் ஒன்றையே குறிப்பதாயினும், இந்த அருட்பெருஞ்ஜோதியிஒ அனுபவகாரண சிறப்பு காணப்படுகின்றதாம். சிவம் என்பதில் , சி கடவுட் ஜோதி வடிவத்தையும், அருட்சக்தியையும் சுட்டுவதால் சிகரமுதற்கொண்டு ஓதி அவ்வொளியில் நிலைத்து நிற்பதால் அதில் மறையவே முடிகின்ற தாம். ஆனால், அருட்பெருஞ்ஜோதியில் அருளே முதலாய்க் கொண்டு அவ்வருளோடு வாழ்வதால் , முடிவில் அருட்ஜோதி வடிவோடு என்றும் விளங்கச் செய்வதைக் குறிக்கின்றதாம். ஆகையால், பழைய சிவானுபவ நிலை கடந்து அருள் நிலை வாழ்வு பெற அச் சிவத்திற்கும் அருள் என்னும் அடைமொழி கொடுத்து, அருட்சிவபதியாக்கி நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை யுணர்த்தியுள்ளார். எனவே, அவர் கொண்ட சிவமும் அம் மார்க்கமும், சுத்த சிவமாகவும் , சுத்த சிவ சன்மார்க்கமாகவும் அறிந்து சுத்தசன்மார்க்கி சுத்த சுகானந்த வாழ்வு பெற உள்ளான். உத்தரஞான சிதம்பரமே சித்தியெலாம் தரும் அம்பரமாம். இதனால் உலகமெல்லாம் நல்வாழ்வு பெறும்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt