Vallalar Universal Mission Trust   ramnad......
46. எண்ணிய அனைத்தும் தரும் சபை - அகவல் உரைவிளக்கம்


91. எனைத்துந் துன்பிலா இயலளித் தெண்ணிய

92. அனைத்துந் தருஞ்சபை அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) மனிதன் என்றும் அடைய விரும்புவது இன்பமே. துன்பத்தை எக்காலத்தும் எவரும் விரும்புவதில்லை. எனினும் மனிதனுக்கு அவன் விரும்பும் இன்பம் எல்லாம் கிடைக்கின்றதுமில்லை. அவன் விரும்பாத துன்பம் வந்து சேராமல் இருக்கின்றதுமில்லை. நிறையருள்பெறாத மனிதன் எவ்விதத்தும் தன் மதியைக் கொண்டு நிறை இன்ப ஆக்கமும், முழுமையான துன்ப நீக்கமும் பெற்றுவிடமுடியாது. இதற்கு முடிவான ஒரே சான்று, மனிதன் இதுகாறும் துன்பியல் மரணத்தை அடியோடு விலக்கிவிட்டு, அழிவற்ற பேரின்ப வாழ்வு பெறாததேயாம். இத்தருணம் தான், மனிதன் நிறை பேரருளால் அப்படித் துன்பத்தின் நிழல்கூடச் சாராத நிலையான நிறை இன்ப வாழ்வு பெறுகின்றான் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பால்.

எனைத்தும் என்றால், எவ்வளவும், அதாவது, மிகச் சிறிய அளவும், இம்மியளவுமாம். ஆதலின் எனைத்தும் துன்பிலா இயல் என்பது, சிறிதளவும் துன்பமேயில்லாத தன்மையாம், அது நிறையின்ப நிலையே, இவ்வின்ப நிலையை நம் விழைவின்படி நமக்கு அருள்வது நமது அருட்பெருஞ்ஜோதி ஆனந்த சபையே என்று ஈண்டு வலியுறுத்தப்பெறுகின்றது,

உலகில் மெய்யான நிறை இன்ப வாழ்வு பெறுதற்கு, ஜீவ தயாநெறி அடைந்து சத் விசாரத்தால் , சத்துபொருளாகிய அருட்பெருஞ்ஜோதி சபையைச் சார்ந்து நின்று வாழவேண்டியிருக்கின்றது. இவ்வம்பல வாழ்வு சேராமல் , தயவில்லாத் தவமுயற்சி எதனாலும், பிற எவ்வகை மார்க்கத்தாலும் துன்பங் கலவாத இன்ப வாழ்வு பெறமுடியாதாம்.

கடவுள் இயல் இரு தன்மையாயுள்ளது. ஒன்று அகமாய், அழிவற்ற இன்பநிறைவாய் இருக்கிறது. மற்றது புறத்தாய், தோற்றக்கூடும், சிற்றின்ப துன்பமும் கொண்டதாய் இருக்கின்றது. மனிதன் அகநிலை பெறாது புறவாழ்வில் உழன்றுகொண்டிருக்கும்வரை, உலகியல் இன்ப துன்பத்தைத் தவிர்த்துக்கொள்ளவும், மெய்யின்பத்தை அறிந்து அடையவும் இயலாது. இவன் உண்மைத்தயவின்மையால் , சூழுயிர்க்கு இன்பு செய்யாது இருந்து, தானும் மெய்யின்ப நிலை அடையாது போகின்றான். விருப்பு வெறுப்பற்று பற்றற நின்று நிஷ்காமியகர்மமாகத் தயவில்லாச் செயல்புரிகின்றவனும் அக இன்ப நிறைவாழ்வு பெறமாட்டான். ஆகவேதான், ஒருவன் தயவுச்செயல் புரிந்து அகமிருந்து எவர்க்கும் இன்பளித்தல் முறையாகும் சூழ்நர்க்கு உயிர் விளக்கத் தயவு செய்வதே இவன் கடமை. மற்றபடி உயிர்விளக்கத்தைப் போக்கும் தண்டனை அல்லது கொலைச்செயலை எவ்விதத்தும் புரியக்கூடாது. அழிக்கு செயல் கடவுளரின் மறக் கருணை நியதிக்கே விட்டுவிடவேண்டும். அவர் தயவாலே அழிப்பார், ஆக்குவார், பக்குவப்படுத்தி வாழ்விப்பார், பிறா எல்லா உயிர்களும் அருள் நியதிக்கு ஒப்ப வாழ்ந்து வர மக்களினமே நியதி முறைக்கு மேற்சென்று, புற நிலை கடந்து அகமிருந்து இன்பியல் விளைவிக்க வேண்டியவர்களாவர், ஆகையால், சுத்த தயவினால் ஒருவன் அனகவாழ்வு ஏற்று, இன்பமே நிறைந்த சுத்த சுகானந்தத்தில் என்றும் விளங்குவான்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt