
87. இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
88. அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) உலகில், இன்பதுன்பம், உயர்வு தாழ்வு, நன்மை தீமை, முதலிய இருநிலைச் சூழல் மனிதனின் அறம்பாவச் செயலால் தொடர்ந்து நடந்துகொண்டே யிருத்தல் கடவுளர் விதித்துள்ள நியதிமுறையாக இருக்கின்றது. இவ்விதிச் செயலால்தான் அகமும்புறமும் பண்பாடடைகின்றான் மனிதன். துன்பியல் வாழ்வைத் தவிர்த்து இன்பியல் வாழ்வில் ஓங்கக் கருதியவன் , அதற்காகப் புறவொழுக்க நெறிகள் பல வகுத்தும் ஒழுகியும் அடைந்த இன்பம் மிகக் குறைவுடையதாயும், நிலையற்றதாயும், இருக்கக்கண்டான். பின்னர் அகநெறியாகிய யோகஞான மார்க்கத்தைக் கொண்டு முயன்று முடிவில் அடைந்த சித்தி இன்பங்களும், முதலில் வியந்துகொள்ளப்படினும் ஈற்றில் அழிந்து ஒழியக் கண்டு குறைபட்டுக் கொண்டான்.
இன்று திருவருளாலே சுத்தசன்மார்க்கத்தால் நிறை இன்ப வாழ்வு நிலையாகக் கொண்டு என்றும் விளங்கச் செய்யத் தோற்றுவிக்கப்படுகின்றது. இந்நெறி வாழ்வு அருட்பெருஞ்ஜோதி வளர் அழியாச் சிற்சபையின் கண்ணின்று வெளியாகின்றதாம். மனிதன் உண்மைநெறி ஒழுக்கம் பூண்டு, சுத்த சத்விசாரத்தால் அருட்பெருஞ்ஜோதியை அகஞான சபையிலே கண்டு கலந்து , அருள் இன்பம் பெருக வாழவேண்டியவனாய் இருக்கின்றான்,
மனிதன் உண்மையில் வேண்டுவது துன்பக்கலப்பில்லாத நிறையின்ப வாழ்வேயாம், ஆனால் இந்த உலகில் , விதிச் சட்டப்படி அறம்பாவச் செயலால் இன்ப துன்பம் இரண்டும் ஒவ்வொரு ஆன்மாவையும் சூழ்ந்துகொண்டே யிருக்கின்றன. இந்த விதி முறையை எவராலும், எக்காலத்தும், மாற்றமுடியாது. ஏன் அப்படி விதிக்கப்பட்டுள்ளது என்றால், உலகியல் வாழ்வில் இன்ப துன்ப அனுபவத்தால் விருப்பு வெறுப்பு அடைந்து அடைந்து பக்குவமுற்றபோது அவ்விரண்டும் நிலையற்றனவாய்க் காண்கின்றான். ஆதலின் அவற்றைக் கடந்து மேற்சென்று நிலையான சச்சிதானந்த வாழ்வுபெற வேண்டி, சுத்த விசாரத்தால் இப்போது அருட்பெருஞ்ஜோதி அம்பலத்தை அடைந்துள்ளான். இவ் அம்பல வாழ்வே மனிதனுக்கு இழியாப் பெரு நலம் எல்லாம் வழங்குவதாம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இந்த அழியாச் சிற்சபையில் இருந்துகொண்டுதான் உலகியலை அருட்பேரியலால் விதிமுறைப்படி ஆண்டுவருகின்றார். மனிதன் அகநிலை அருள் வாழ்வு மேற்கொள்ளாதவரைதான் உலகியல் விதிச்சட்டத்தால் பாதிக்கப்பட்டு அவத்தைப்பட்டுக்கொண்டிருக்கின்றான். இவன் இறைமயமாகி அருள்வாழ்வு ஏற்றதும் விதியைக்கொண்டு ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தும் அருட்செயல் புரிகின்றான். அதனால் மிக விரைவில் இழியாப் பெருநல வாழ்வு உலகில் வெளிப்பட்டு விளங்கமுடியும்.
ஜீவ தயவால் கடவுள் தயவு பெற்று அகமிருந்து அனக வாழ்வு வாழவேண்டிய மனிதன், மற்ற எந்த வகையிலும் ( ஞானத்தால், பக்தியால், கர்மத்தால், யோகத்தால், தியானத்தால், பிற தந்திர தவமுயற்சிகளால் எல்லாம்) பெருநல வாழ்வு பெற முடியாது என்பது சத்தியமாம். ஆகையால், அருள் ஒழுக்கம் பூண்டு அருட்பெருஞ்ஜோதிபதிச் சார்புற்று அழியாப் பெருநலம் காண்போமாக.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்..
vallalarspace.com/vumt
Write a comment