Vallalar Universal Mission Trust   ramnad......
43.அழியா வரம் தரு அமுதசபை


85. வாரமும் அழியா வரமுந் தருந்திரு

86. அரமுதாஞ்சபை அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) நமது அருட்பெருஞ்ஜோதி சபையே திருவாரமுத வண்ணமானதாகும். உலகம் கண்டுள்ள எந்த ஒரு சபையும் அல்லது ஆலயமும் அமுதாலயமாக இல்லை. யோகஞானியர் தம் அகத்தே அறிவாற்கண்ட ஆன்மாலாயமே. அதன் அழிவற்ற தன்மை கருதியும், அந்நிலையுறுவோர் பெறும் அவ் இயற்கை இயல்கருதியும் அதனை அமுதாலயமாக அணிந்து கூறியுள்ளனர். அகண்ட வெளிநிறை இறை ஒளி நிலையே பாற்கடல் எனவும். அதில் செயல்பட்ட பிரபஞ்சக் காரியப்பாட்டில் மனிதவடிவம் தோன்றிக், மிருந்து என்னும் மரணத்தைக் கடந்து அமிருத்து அல்லது அமிர்தம் என்ற அமுதத்தையே கண்ணுற்ற ஆன்றோர் அதனைப் பலவாறு கற்பனை செய்து வெளியிட்டனர். திருவாரமுது என்பது, அகம் ஒளிர் ஆன்மஜோதி வடிவேயாம். இத்திருவாரமுதே, பாற்கடலிற் பள்ளிகொண்ட திருமாலாகவும் கற்பித்தனர்.

நிரவி யழுலுருவாய் நீண்ட வெளிகாணில்

அரவணையா னாகும் உடம்பு”

அறிவாற்கண்ட அகஜோதி, மனிதனுக்கு அற்புதச் சித்திவல்லபம் நல்கி, சிலகாலம், ஆடி மகிழச் செய்தது, பின்னர் அடங்கிக் கிடக்கச் செய்துவிட்டது. அவ்வமுத ஜோதி தேவப்பதவியை வழங்கிச் சிலரை நெடுங்காலம் விளங்கச்செய்தது. எனினும், அருட்பெருஞ்ஜோதியின் இயல் வெளிப்பட்டு மனிதனுக்கு என்றும் அழியாது ஆனந்தவாழ்வில் நிலவச்செய்யவில்லை முன்பு எக்காலமும்.

இத்தருணம் நமது அகப்பெரும்பதியே அருட்பெருஞ்ஜோதி அம்பலமாகித் திருவாரமுதமாய்த் திகழ்கின்றது. இதனை, நாம் அடைய, நிறையருள் வழங்கா முன்னெறி ஏது பயன்படாதெனக் கண்ட நம் வள்ளல் நிறைவருட் சுத்தசன்மார்க்கத்தை வழங்கி யுள்ளார். இந்நெறி சுத்த அன்பு அடிப்படையில் கிடைக்கப்பெற்றதாம். இம்மார்க்கிக்கு முதலில் வேண்டுவது சுத்தம். சுத்தமாவது, சத்விசாரத்தல் அகவடிவமுற்று இலங்கிநிற்பது. இந் நிலை நின்று மெய் அன்பு பெருகப்பெருக உலகில் வாழ்வதால் உள்ளொளியின் அருட்சக்தி வெளிப்பாடு, அழியாமைஹோடுட் நிறையின்ப வாழ்வும் ஆணை செய்கின்றதாம். இதனையே இங்கு வாரம் ( அன்பு) அழியாவரம் ஆகியவை தந்து நித்தியானந்த அமுதவாழ்வில் விளங்கச்செய்வது என்றார்.

குறிப்பு: பழநெறிகளில் , தீட்சை, குரு உபதேசம், உபநயனம், ஞானஸ்தானம், முத்திராதானம் முதலியன முதற்கண் பெற்றே அந்தந்த நெறிக்கு உரியவர்களாகி முழுப்பயன் அடையலாம் என்பது. அருள் உண்மை விளங்காத காலத்துக் கற்பிக்கப்பட்ட வையாம். இப்பொழுது அருட்ஜோதி வெளிப்பட்டுள்ளதால், எவரும் சுத்த நிலையுற்று, அகம்பொருந்தி, அன்பு நிறைவால், அனக வாழ்வு ஏற்பதே வேண்டப்படுவது. இந்தச் சுத்த சன்மார்க்கமே மனிதனை மரணமில்லாப் பெருவாழ்வில்நிறை இன்போடு விளங்கச் செய்வதாம்.

சுத்த சன்மார்க்க உண்மை கொண்டுதான் திருவருட்பாவில் ( முக்கியமாக ஆறாந்திருமுறையில்) பொருள்விளக்கம் காணவேண்டும். மற்று பழநெறிப்பற்றொடு பொஅலகால் பயின்றாலும் உண்மை விளங்காது , சுத்த சன்மார்க்கியின் உண்மையும் அறியமுடியாது.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt