
77. உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய
78. அபயசிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) பொதுவாகக் கண்ணாற் காண்பது காட்சி எனப்படும். மிக நுண் பொருளையும் அதி தொலைப்பொருளையும் காண, நுண்ணோக்கு ஆடி ( microscope) தொலைநோக்கு அடி (telescope) உதவுகின்றன. உடலின் தசையுட் பொருளையும் , உள் எலும்பின் வடிவங்களையும் காண மர்ம ஒளிக்கதிர் ( x – ray) பயன் படுகின்றது. இதுபோன்ற புறக் கருவிகளே அல்லாது, மனோ கற்பனையாலும், ஆழ்ந்த ஓர்மை எண்ணத்தாலும் பலவாகிய காட்சியகள் காணப்படுகின்றனவாம். ஆனால், இந்தக் காட்சிகள் எல்லாம் முழுமையானவை அல்லவாம். இக் காட்சிகள் குறைவுடையனவாயும், சிற்றெல்லையினதாயும், நிலையற்ற மாயா இயல்பினதாயும், இயற்கையுண்மையை யுணர்த்தாதனவாயும் இருக்கின்றன. இதனால் இவைகளால் மனிதன் நிறை இன்பப்பயன் பெறக் கூடாதுபோம்.
மனிதனுக்கு மெய்யின்பானுபவம் வழங்குவது. ஜீவ, கரண, இந்திரியக் காட்சிகளுக்கு மேற்பட்ட ஆன்ம ஞான அருள் விளக்கத்தால் மட்டும் என்று அறியப்படும். அருள் ஞானமாகிய கண்ணைக்கொண்டு நோக்கும்போதுதான் ஒன்றன் அகம், புறம், முன், பின், ஆதி, அந்தம் முதலான இருநிலைத் தோற்றங்களும் உள்ளவாறு ஒரு படித்தாய் விளங்கும். அருளால் மறைப்பு நீங்கி விடுவதால் இரு பக்கத்து உண்மையும் மறைப்பற்றுக் காணாலகின்றது. மேலான நிலையுற்ற ஞானிக்கு முக்கால உண்மையும் விளங்குவது இதனால்தான்.
நமது அருட்பெருஞ்ஜோதி ஞான சபையில் , திருவருளால் அடையப்பெற்று விளங்குகின்றவர்கள் எங்கும் என்றும் அருட்பேரொளியையே கண்டுகொண்டிருக்கின்றனர். இந்த உபயம் ஆகிய இரு பக்கக் காட்சியால் உளநிறைவெய்தி நிற்கின்றவர்களுக்குப் பயம் பூஜ்யம்தானே! இந்நிலையுற்றிருந்து கொண்டுதான் நம் வள்ளற்பெருந்தகை இந்த “ உபய பக்கங்களு ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி” என்ற அகவல் அடிகளைப்பாடி மகின்கின்றார். இக் காட்சியனுபவத்தினால் உண்டான மகிழ்ச்சியில் மட்டும் பரவசப்பட்டு நின்றுவிடாது, முடிவில் நிறை இன்பானுபவத்தோடு நித்தமும் வாழும்போது பெற்றுக்கொண்டதை ‘ சபை எனது உளமெனத்தான் அமர்ந்தெனக்கே அபயமளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி “ என்று மேலும் போற்றியுள்ளார்.
மேற்படி அருட்பெருஞ்ஜோதி ஒன்ரே ஒருவனுக்கு எவ்வகையிலும் மரணமில்லாப் பெருவாழ்வில் பேரன்பில் விளங்கவைப்பதாய் இருக்கின்றதால் இவ்வாழ்வு நிலையே முழுமையாகப் பயமற்றதாயுள்ளதாம். இவ்வபயநிலை யுறாதவர்கள், அச்சம் இல்லை, அச்சம் இல்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்க்கைப் போரில் தோல்வியுற்று மடிந்து, அறிவனுபவம் இழந்து சூனியமாய்ப் போய்விடுகின்றார்கள்! இதற்கு முற்றிலும் மாறானது நம் அருட்பெருஞ்ஜோதி அருள்கின்ற அபயநிலை.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.
vallalarspace.com/vumt
Write a comment