
75. நவந்தவிர் நிலைகளும் நண்ணுமோர் நிலையாய்
76. அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) விளங்குகின்ற பேருலகத்தில் யாவும் எப்படித் தோற்றித் திகழ்கின்றன என்பதைச் சுத்த சத் விசாரத்தால் நோக்கும்போது, ஒன்றான அருட்பெருஞ்ஜோதியின் உண்மை அறியப்படுகின்றதாம். அந்த அருட்ஜோதியே என்றும் எங்கணும் போக்குவரவற்ற பரிபூரணப் பரம்பொருளாய் இருந்து கொண்டுள்ள இயற்கையுண்மை என்னும் சத்துநிலை விளங்குகின்றதாம். இச் சத்தொளியினின்றே, அண்டத்தே, அக்கினி, சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகிய நான்கும், பிண்டத்தே, ஆன்மா, ஜீவன், கரணம், இந்திரியம் என்னும் நான்கும், இம்மனிதனின் பிண்டாண்ட நடுவான சிற்றம்பலத்தே அருள் ஒளி என்னும் ஒன்றும் ஆகக்கூடி நவஜோதி நிலைகளாய்க் காரியப்பட்டுள்ளதாம்.
சத்தாம் அருட்பெருஞ்ஜோதி நிறைநிலை நின்று, சித் விளக்கத்தின் பொருட்டு மேற்படி நவஜோதி நிலைகளும் தோற்றியுள்ளன. சித் விளக்கச் செயலால்தான் , அருள் உண்மை வெளிப்படவும், பக்குவமனிதனில் அறிந்து கொள்ளப்படவும், முடிவில் நிறை அருளால் அனுபவிக்கப்படவும் உள்ளனவாம். மனிதன் புற ஆராய்ச்சியில் , உடல்நிலையிலிருந்து தனக்கு உள்ளீடாய்க் கடவுள் ஆன்ம ஜோதியைக் காண்பது விசாரநிலையே ஆகும். இவ்விசாரமுடிவில் கண்ட கடவுட் ஜோதிநிலையையே முதலாய்க் கொண்டு, அது தானாய் நின்றுஅதன் அருள் அல்லது தயவே தன் உணர்வாய், உயிராய், உடலாய்க்கொண்டு அருளின்ப வாழ்வு ஏற்று விளங்குவதே சன்மார்க்க குறிக்கோள் வாழ்வு ஆகும்.
அருட்பெருஞ்ஜோதியொளிர் சிற்சபைதான் மேற்படி ஒன்றான ஜோதிநிலையைக் காட்டிக் கொடுக்க வந்துள்ளது. அங்கிருந்து, ஒருமையுற்று , நிவாததீபம்போல் நின்று சூழ நோக்க , நவநிலை ஜோதியும் ஏசுபரன் ஜோதிமயமாய்த் தோற்றுகின்றதாம். அருளாலே இவ்வுண்மையை அறிந்து இன்பநிறை வாழ்வு ஏற்பட வாழவேண்டியது நம் கடமையாகும். இச் சிற்சபை வாழ்வுதான் அவம்தவிர்ப்பதாம், அவம் என்றால், தீமை, குற்றம், பயனின்னை, வீண் முதலியனவாம். இந்த அவமாகிய அவத்தையால் மேலும் மேலும் இன்பதுன்பநிறை பவமாகிய பிறவி சூழ்ந்துகொண்டேயிருக்கும். இவ் அவநிலை தவிர்க்கவே மேற்படி சிற்சபை வாழ்வு மேற்கொள்ளப்படவேண்டியுள்ளதாம். இச் சிற்சபையே அருட் பெருஞ்ஜோதியாக இருக்கின்றது. இதனால் நமக்கு நித்திய இன்பவாழ்வு சித்திக்கின்றாது சத்தியம்.
மேற்படி அவந்தவிர் சிற்சபை என்பதற்கு இன்னொமொரு அருள்விளக்கம் கொள்ளலாம். சிற்சபையே நம் கடவுளான்ம சிற்றணுவாயிருக்கின்றது. இது அகண்ட பர வெளியின் ஒரு சிறு கூறாக உள்ளது. இதில் அந்த அகர வண்ண முழு உண்மையும் கண்டு, சச்சிதானந்த அனுபவமும் ஏற்பட உள்ளதாம். அகரமுதல்வனாகிய இறைவன் தானே ஓர் அணுநிலை நின்று தன்னைச் சூழ அருட்பேரொளி கொண்டு திகழ்கின்றார். என்றென்றும், இதனால் இச் சிற்சபையாம் ஒளிநிலை, அ – வந்து – அவிர் ( அகரம் வந்து ஒளிர் அல்லது விளங்குகின்ற) சிற்சபை என்றும் கொள்ளப்படும் இந்த் அகர அணுவைச் சூழும் ஒளிநிலையே சடபூத உருவாயும், உயிர் ஆற்றலாயும், புலன் அறிவு உணர்வாயும், மெய்ஞ்ஞான விளக்கமாயும், முடிவில் அருள் உண்மை அனுபவமாயும் விளைவுற்று இன்று அருட்பெருஞ்ஜோதிமயமாய் விளங்குகின்றதாம். இதுதான் அ வந்து அவர் சிற்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி எனக் கண்டு கொள்வோமாக.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்/.....