
73. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
74. அட்ட மேற் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) முன், துரியாதீத நிலையே கடவுட் பெருநிலையாக விளம்பப்பட்டது. அந்நிலையில் உண்டாகின்ற சுகானுபவம் இப்படிப்பட்டது என்று சொல்லித் தெரிந்துகொள்ள முடியாதாம். இறையுறை பெருவெளிநிலை சுகாதீத வெளி எனப்பட்டுள்ளது. சுகத்திற்கு அதீதமானது சுகாதீதம். இது சுகத்திற்கு அப்பாற்பட்டதாம். சுகம் என்றால் இன்பமயமாகிய அனுபவநிலை. கடவுள் அனுபவமோ ஒருவனுக்கு ஏகதேசம் விளங்கி மின்னல் போலத் தோன்றி மறைகின்றதால் அதன் நிறைவிளக்கத்தைப் பிறர் அறியவொண்ணாது என்பர். ஆகவேதான் கடவுள் நிலையைச் சுகாதீதம் என்றனர். அது சுட்டுதற்கு அரியது என்பதும் உண்மையே. இனிமேல் சன்மார்க்கியின் அனுபவத்தைக் காண்போம்.
சுட்டுதற்கரிதாம் சுகாதீத வெளியில் இயல்பாகவே, உண்மையை அறியாமலே உறைகின்றவன் மனிதன். இவ்வுண்மையை அறிகின்றவன் சன்மார்க்க பரிபாகம் அடைந்தவன் ஆவான். இவன் அருட்பூரண அனுபவம் கொண்டு இறை வண்ணமாய் இலங்கவல்லவன், அல்லது இறைவனே இப்பூரணனின் அருள் ஒளிவடிவினின்று திகழ்கின்றவனாகின்றான் என்னலாம். இதனால் இறைவன் ஒருவனே எங்கும் பூரணமாய் இருந்து கொண்டும், சுத்த சன்மார்க்கியின் அனுபவத்தில் வெளிப்பட்டு அவனேயாகவும் விளங்குகின்றான் என்பதும் உண்மையாம். ஆகவேஇம் மார்க்க நிறை மனிதன் தானே கடவுள்மயமாய் அக அனகநிறைவு கொண்டிருப்பதோடு , மற்ற ஒவ்வொருவரின் அக அனக நிறைவு கொண்டும் விளங்குகின்றானாம். இது அவனது பேரின்ப அனுபவ நிலையாம். இதனால் இவனுடைய சுகானுபவம் சுகாதீதம் என்று சொல்லப்பட்டது. சுகாதீதம் என்றதை அதீதசுகம் என்று அனுவயப்படுத்திக் கொள்ளவேண்டும். அதீதசுகம் என்றால், மேலான, அப்பாலான சுகம் என்று பொருள்படும். இதனையும் சுட்டுதற்கரியதாய்க் கொள்ளுதல் பொருத்தமே.
மேற்படி அதீதசுகம்தான் இப்பொழுது நம் அருட்பெருஞ்ஜோதி சிற்சபையில் வெளியாகியுள்ளதாம். இச் சிற்சபையை எட்டிடவே முடியாது. புறத்திருந்து இச்சபையை அடைய உயர்நிலைக்கு ஏறிச் செல்லச்செல்ல மேலும் மேலும் எட்டாது உயரத்திலேயே தோன்றிக்கொண்டிருக்குமாம். புற வான்வெளியின் முடிவே கூட எட்டப்படுவதாயில்லையே! இப்படித்தான் நமது அருட்சிற்சபையும் தீண்டரிய வெளியில் திகழ்கின்றது உண்மையாம். இப்படி உயர்வற உயர்ந்த மேனிலையிலுள்ளது இச் சிற்சபை என்ற குறிப்பை உணர்த்தவே “ அட்டமேற் சிற்சபை “ என்று அணிந்து கூறியுள்ளார் நமது அருள் அண்ணலார். அட்டம் என்றாலே, மேல் என்ற பொருள் படும். மேல் என்பதற்குமுன் அதேபொருள் கொண்ட பிறிதொரு சொல்லையும் கூட்டி உரைக்கப்பட்டதால் , மேனிலைக்கு மேனிலையாய், மிக மேலான நிலையாய் உணர்த்தப்படுகின்றோம். இவ்வகைச் சொல்லை மீமிசைச் சொல் என்பது இலக்கண வழக்கு.
இப்படி எவ்வகையிலும் எட்டரிய மேலான நிலையிலிருக்கும் அருட்பெருஞ்ஜோதி சிற்சபையை, நம் வள்ளல் அருட்பூரணத்தால் அடைந்து, பெருஞ்சுகத்தையும் அனுபவிக்கின்றார் என்றால் அது உண்மையே. இவருடைய அனுபவவழி புறத்திருந்து அடையப்பட்டதல்ல. இயற்கையிலேயே அம் மேனிலையிலுள்ள சிற்றம்பலத்திலேயே, தான் பதியோடிருப்பதைக் கண்டு நிற்கின்றதுதான் ஆனந்தநடனமாகிய ஐந்தொழிற் செயலால் உலகெலாம் விளங்கச்செய்து கொண்டுள்ளார் நம்பதி. நிறை அருளால் சன்மார்க்கியும் இறைமயமாகி வாழ்கின்றபோது நித்தியானந்தமாகவெ விளங்குகின்றான். ஆண்டவரின் ஐந்தொழிற் செயல் எங்கும் நடந்துகொண்டே இருப்பதியும் கண்டு நிரதிசயானந்தமாய் வாழ்கின்றான் இம்மார்க்கி. எனவே இங்கு குறித்த மேலான நிறை இன்ப மேல்சபை வாழ்வுக்கு நிகர் உலகில் வேறுஇல்லையாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
Write a comment