Vallalar Universal Mission Trust   ramnad......
உயிர்ப்பலிக்கு எதிர்ப்பு

திரு அருட்பிரகாச வள்ளலார், தெய்வங்கட்கு உயிர்ப்பலி கொடுப்பதையும் வெறுத்தார். தெய்வங்களின் பேரால் உயிர்களைக் கொல்லும்கொடிய வழக்கம் சங்க காலந்தொட்டே தமிழர்களிடை இருந்து வருகிறது. உயிர்க்கொலையை வெறுத்து, ஊனுணவை மறுத்துப் பாடிய வள்ளுவர் கூடப் பலியிடும் வழக்கத்தைக் கண்டித்தாரல்லர்.

வள்ளலார் காலத்தில், வங்க மாநிலத் தலைநகரான கல்கத்தாவிலுள்ள காளி கோவிலில், நாள்தோறும் கணக்கற்ற உயிர்கள் பலியிடப்பட்டன. இன்றுங்கூட அங்கு அந்த வழக்கம் உண்டு. கருணை வள்ளலான இராமகிருஷ்ண பரமஹம்சர் கூடக் காளி கோயிலில் பலியிடும் வழக்கத்தைக் கண்டித்ததாகத் தகவலில்லை. தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் கொடுமையை முதன்முதலாக ஒளிவு மறைவின்றிக் கண்டித்த பெருமை நம் வள்ளலாருக்கே உரியது. இத் துறையில்நம் அடிகளார் புத்தபெருமானின் வாரிசாக விளங்குகின்றார்.

அவர் வாழ்ந்த காலத்திலும் காடன், மாடன், வீரன், காளி, கூளி, காட்டேரி என்னும் சிறு தெய்வங்கள் ஊர்தோறும் கோயில் கொண்டிருந்தன. அந்தத் தெய்வங்கள் மக்களூக்கு நோய்களைத் தருமென்ற மூட நம்பிக்கையும் நிலவி வந்தது. நோய்கள் வராமலிருக்கவும், வந்த நோய்களைத் தீர்க்கவும் வேண்டிக்கொண்டு அந்தச் சிறு தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வந்தனர் மக்கள். இரக்கமே வடிவமான அடிகளார் அந்தக் கொடுமைகளைக் கண்டு குமுறினார்.

நலிதரு சிறிய தெய்வமென் றையோ

நாட்டிலே பல பெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்

பலிக்கடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவுங் கண்டே

புந்திநொந் துள நடுக்குற்றேனே

கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்

கண்டகா லத்திலும் பயந்தேன்”

என்று அடிகள் பாடியுள்ள பாடல், உயிர்ப்பலியின் பால் அவருக்கு இருந்த வெறுப்பை விளக்குவதாகும். வள்ளலாருக்கும் வள்ளுவருக்கும் இடையிலுள்ள 2,000 ஆண்டுக் காலத்தில் உயிர்க்கொலை பஞ்சமாபாதகங்களுள் ஒன்றாக வைத்து மதவாதிகளால் கண்டிக்கப்பட்டதென்றாலும், உயிர்ப்பலி மட்டும் வெறுக்கப்படவில்லை. தெய்வங்களைத் திருப்திப்படுத்த அந்தக் கொடிய பழக்கம் தேவையென்று போதிக்கும் மதவாதிகளும் மக்கள் மத்தியில் நடமாடினர். அந்தச் சூழ்நிலையில் அடிகளார் தன்னந்தனியாக நின்று உயிர்ப்பலியை எதிர்த்தாரென்றால் அவருடைய புரட்சி உள்ளத்தை என்ன சொல்லிப்புகழ்வது.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்,

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர் மற்று

அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே. …………………தாயுமானவர்

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

ம. பொ. சி .

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன்மார்க்கம் அவர் அடையாளவும் இதுதான்

நம் ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே

மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்

மாநடத்தென் அரசே என் மாலையணிந் தருளே"

vallalarspace.com/vumt