
65. துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும்
66. அரியசிற் றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) பொதுவாக மக்களுக்கு, விழிப்பு, கனவு, உறக்கம், ஆகிய மூன்று நிலைகள் தினமும் அனுபவத்தில் தெரிந்துள்ளனவேயாம். இந்நிலைகளே, சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்று கூறப்படும். இவைகளில் ஒன்றனுள்ளொன்றாகச் சிற் சில சமயங்களில் தோன்றுவதுமுண்டாம். மனோ உணர்வு, நினைப்பு மறப்பு நிலையை அடைவதால்தான் இந்த விழிப்பு , கனவு, உறக்கம் உண்டாகின்றன. சுழுத்தியில் சுருங்கிக் கிடக்கும் எண்ணங்கள் சொப்பனத்தில் கற்பனாதோற்ற நிலையில் விளங்கும். அதற்குமேல் விழிப்புநிலை ஏற்படும்போது , கரணக்காட்சியாகிய மனோ கற்பனா நிலை கடந்து இந்திரியக் காட்சியாகிய இயற்கைச் சூழ்நிலை தோன்றி விளங்குகின்றதாம். ஒருவன் நல்ல உறக்கத்தில் கிடக்கும் தருணம், கரண இந்திரியங்கள் நல்ல ஓய்வு கொள்ளுவதால் உயிர் ஆக்கம் அடைந்து, மீண்டும் விழித்தெழும்போது இச்சுகானுபவம் எல்லோருக்கும் புரிகின்றதில்லை. எனினும், உறக்கத்தின் பின் சோர்வு நீங்கி புதுத்தெம்புடன் விளங்குவதுஅனுபவமே.
சுழுத்தி ஆகிய உறக்கத்தில் ஏற்படுகின்ற புத்துணர்ச்சியும் ஆற்றலும், அந்தச் சூனிய நிலையில் அறியப்படுகின்றதில்லை. அந் நிலைவிட்ட சாக்கிரநிலைக்கண் வந்தபின்னர்தான் அச்சுழுத்தியிற் பெற்ற சுகம் அனுபவமாகின்றதாம். இச்சுழுத்தி நிலைக்குமேல் அனுபவப்படும் ஒரு நிலையை துரியநிலை என்று யோகியர் கூருவர். இத்துரியானுபவம், ஒருமையுற்ற சலனமற்றசுத்தமனம், உணர்வு கெடாது, பிற யாவையும் கடந்து தன்மயமாய் விளங்கும் நிலையாம். இந்நிலையிலிருக்கும்போது ஒருவித நிறைவுணர்வு ஏற்படுவதாம். அது சுக நிலை என்பர், இதனால் இந்நிலையைச் சுக நித்திரை, யோகநித்திரை, அறிதுயில்,தூங்காமல் தூங்கும் நிலை என்றெல்லாம் கூறுவர். ஆனால் இந்தச் சுகானுபவம் எப்பொழுதும் நிலைப்பதாய் இல்லை. அந்நிலைவிட்டு இறங்கிவிட்டால் விரைவில் அவ்வனுபவமும் ஒழிந்துவிடுமாம். யோகசித்தர்கள் அத்துரியத்தில் பெற்ற ஆற்றலால்பல அற்புத சித்திகளூம் புரிந்துகொண்டிருக்கின்றனர். முடிவில் அத்துரிய நிலையில் பொருந்தி உடலைவிட்டு அத்துரிய சுகத்தில் மூழ்கி மறைந்து போகின்றார்கள். அந்நிலையைத் துரியாதீத நிறைநிலை என்று கூறுவர். அத்துரியாதீத நிலையைத்தான் சுகபூரணம்தரும் நிலை என்பதும், அது நமது அருட்பெருஞ்ஜோதிச் சிற்றம்பலமாக உள்ளதென்பதும் ஈண்டு அறிவிக்கப்படுகின்றதாம். யோகி புறத்திருந்து சென்று துரியாதீதத்தில் பதிக்கலப்பால் மறைந்துவிடுகின்றதால், அனுபவமும் வழ்வும் அற்றுச் சூனியமாய்ப் போய்விடுகின்றான். ஆனால், நம் சுத்த சன்மார்க்கியோ அம் மேநிலையில் மனத்தால் ஒன்றி நின்றுகொண்டு அருள் அனுபவத்தைப் பெருக்கும் ஜீவகாருண்ய வாழ்வு வாழ, அந்த அகமிருக்கும் நிறையருட்சக்தியே இவனில் பரவிப் படர்ந்து நிரம்பி இன்பானுபவத்தில் நிலவச் செய்துவிடுவதாய் இருக்கின்றதாம். இதனால்தான் நம் வள்ளற்பெருமான் சுகபூரணம்தரும் சிற்றம்பலத்து அருட்பெரும் பதியைப் போற்றுகின்றார்,
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.
vallalarspace.com/vumt
Write a comment