Vallalar Universal Mission Trust   ramnad......
32.முச்சுடர்களுக்கு முதற் சுடர்

63. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்

64. அச்சுட ராஞ்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) முன் 59 ஆம் அடியில் என்றாதிய சுடர் என்று வந்து, அண்டாதித்தனைக் குறித்ததுடன் மற்றப் புற ஜோதிகளையும் சுட்டினவாம். இங்கு முச்சுடர்கள் நம் பிண்ட தேக உயிர்நிலை விளக்க வந்துள்ளனவாம். சுடர் என்றாலே சுடுந்தன்மையை உணர்த்தி நிற்பதால் இங்கு உடல் உயிர்க்கு உரித்தாயதாகக் கொள்ளப்படுவதாம். இந்த உடலில் உயிர்ச் சக்தி சூடாய் உணரப்படுவது யாவரும் அறிந்ததே. இச் சுடுதற் குணத்தைக் காரணமாய்க்கொண்டே, உடல், தேகம், காயம் என்ற சொற்கள் ஆக்கிக்கொள்ளப்பட்டனவாம். இச் சொற்களில் உடற்றுதல், தகித்தல், காய்தல் என்றவை எல்லாம் ஒரு பொருட்பன் மொழியேயாம்.

கடவுட்ஜோதியின் சிற்றணுதான் நம் உள் அருள் விளங்கு ஆன்ம சிற்சபையாயிருக்கின்றது. அதிலிருந்தே உயிர் சக்தி விரிந்து செயல்படுகின்றதாம். அந்த ஆன்ம சிற்சபையில் விளங்கும் கடவுள் ஒளியை விளக்கு எனவும்; அதன் விரிநிலை உடல் நிறைவில் சுடர் எனவும், அதன் புறத்தோங்கிய அகண்ட நிறை நிலையே ஜோதி எனவும் உள்ளனவாம், இதனையே அருள் விளக்கமாலையின் ஆரம்பத்தில் அருள் விளக்கே, அருட்சுடரே. அருட்ஜோதி சிவமே” என்று குறிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலை முற்றும் அருளனுபவத்தில் விளங்குவது . அருள் விளங்காத அபக்குவநிலையில் இந்த விளக்கு, சுடர், ஜோதி மூன்றும், உயிர், உடல், உலகு எனத் திகழ்வனவாம். அருள் விளக்க மாலையில் அருள் விளக்க உரையில் கண்க (. .2-6)

இம் மனித வடிவில் காரியப்பட்டுள்ள உயிராற்றல், உயிர்ப்பாக , ஜீவசுவாசமாக , மூச்சாக உள்ளதாம், இம் மூச்சுக் காற்றில், சூரிய, சந்திர, அக்கினியாம் முச்சுடர் இயல்பும் காணப்படுகின்றன. இவற்றின் பிங்கலை, இடகலை, சுழிமுனை,யின் காரியப்பாடாய் யோக நூல்கள் புகலும். மூச்சடக்கி உயிர்வாழ வழிகூறும் பிராணாயாம முறை எல்லாம் திருவருள் நெறிக்கு முக்கியமல்ல. ஜீவதயவால் கடவுள் தயவைப் பெற்று சுத்த மாதி திரிதேக சித்தி பெறுதல்கள் நம் குறிக்கோளாய் கொள்ளப்படும்.

நமது கடவுட் ஜோதி அருட்பெருஞ்ஜொதியாக, ஆன்மாவுக்குள்ளிருந்து திருவருளால் உயிர் இயக்கத்திற்கு உதவிக்கொண்டிருக்கின்றதாம். உயிரில் விளங்குகின்ற சோம, சூரிய, அக்கினி, ஆகிய முச்சுடர்களும், கூடிய ஒளியோ நம் அருள் ஒளிக்கு நிகராகாது. அவ்வருள் ஒளியே சுத்த சன்மார்க்க அனுபவத்தில், அருட்சுடராக விளங்குகின்றதாம். இதுதான், நம் திருவருட்பிரகாசரின் சுத்த சுகானந்த வடிவமாம். அருட்சுடர் வடிவில் திரிசுடர் உண்மையே சுத்த பிரணவ ஞான தேகமாம விளங்குகின்றது. முச்சுடர்களுக்கு ஒளியளித்து அவற்றை விளங்கச் செய்துகொண்டு விளங்குகின்றதுதான் இந்த் அருட்சுடராகிய அருட்பெருஞ்ஜோதியாம்.

அருட்சுடர்கொண்டு அருள் உடல் பெற்ரு அழியாது பேரின்ப சித்தியோடு வாழ்வதுதா நம்பதி ஆணை, இதுவல்லாது, யோக சித்தி மார்க்கத்தால் காயசித்தி பெற்று விளங்கினும் பயனில்லை வாழ்வுமில்லையாம்.

மூன்று மடக்குடை பாம்பிரண்டெ ட்டுள

வேன்ற னியந்திரம் பன்னிரண்டங்குலம்

நான்றவிழ் முட்டை யிரண்டையும் கட்டிட்(டு)

ஊன்றியிருக்க உடம்பழி யாதே”

என்றும்

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை

மேலத் துவாரத்து மேலுற நோக்கிமுக்

காலுற்றக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே”

என்னும் திருமந்திரக் கருத்தால் பெறப்படும் உடல் அழியாமையால் வாழ்வு நிலைப்பதாயில்லை, ஆகையால் உடல் வாழ்வுக்கு அருள் ஒளியே துணையாய்க் கொள்ள வேண்டியிருக்கிறது. அருட்சிவபதியைத் திருப்பெருந்துறை எனும் அகப்பெரு வெளியில் கண்டொன்றி நின்று, உலகும் உயிரும் அவருடைய அருள் வடிவே எனக்கொண்டு வாழ்தலால், அருளின்பானுபவத்தோடு திகழலாம் என்பது திருமூலரின் திருவுள்ளம், அவருடடயசான்று””

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்

கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி

தேட லரியவன் சிறப்பிலி எம்மிறை

ஓடும் உலகுயிர் ஆகிநின்றானே”

என்பதால், இறைவனே, உலகும் உயிர்களுமாகி யுள்ளதை யோர்ந்து, அவ்விறையோ டுறையும் அருட் பக்குவியும் இறையனுபவம் நீங்காது வாழவேண்டியவனே எனத் தெளிவாக்கப்படுகிறது. திருமந்திரத்திலும் திருவாசகத்திலும் புதைந்து கிடக்கும் இக்குறிப்பே சுத்த சன்மார்க்கத்திற்கு வித்தாக இருந்து திருவருட்பாவில் விளைவு கொண்டுள்ளதாம். இதனால்தான் நம் வள்ளல் பெருமான் இச் சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை அறிய வேண்டின் திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் ஊன்றி நோக்கும்படி கூறியிருக்கின்றார். எல்லா உண்மையையும் வழங்க வந்துள்ளது நம் அருட்பெருஞ்ஜோதியே, அதனை இவ் அகவலில் கண்டு தெளிகின்றோம்

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்...

vallalarspace.com/vumt