
61.சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
62. அமையுந் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) அருபெருஞ்ஜோதி வளர் திருச்சபை சத்திய ஞானத்தால், மெய் அருள் அறிவால் கண்டு அனுபவிக்கப் படுவதாம். மற்றபடி புலன் உணர்வினாலும், மனோ அறிவினாலும் அருட்பெருஞ்ஜோதியின் உண்மையைத் தெரிந்திட முடியாதாம். இக் கடவுளுண்மை வெளிப்பட்டிலங்கும் இடம் அருள் அனுபவம் வெளியாம். இங்கு வெளி என்றால் புறநிலையைக் குறிப்பதல்ல. அக அனுபவநிலையேயாம். இவ் அகவெளியில்தான், அகண்ட பேரூலக உண்மை எல்லாம், இறையருள் உணர்வினால் அறிந்து கொள்ளப்படுவதாம். இவ்வக வெளியில் தனிப் பரம்பொருளாய் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் கோயில்கொண்டு விளங்குகின்றார். இந்தத் தனித்தலைமைப் பெரும்பதி தனிப்பெருங்கருணையுடையவராவார். ஆகையால் இந்த ஆண்டவரைத் தொழுதால் அவர் தயவு பெறலாம். அத் தயவினால்தான் அகப் புற உண்மையெல்லாம் உள்ளவாறு கண்டு இவ்வுலகில் அருள் வாழ்வு பெறலாம். ஆனந்தமாய் விளங்கலாம். அருட்பெருஞ்ஜோதியை உலகம் அறிந்து கொள்ளாததினால்தான் பலவாகிய சமயநெறிகளால் நல்லின்ப வாழ்வு இதுவெனவும், அதனை அடைவதற்கு வழிவகை இவையெனவும் மக்கள் தெரிந்துகொள்ளாதிருக்கின்றனர்.
சமயநெறிகள் மக்களை வாழ்விக்கும் என்றுதான் முன்னோர் கருதி வலியுறுத்தினர். ஆனால், அந்நெறிகளால் இந்நாள்வரை பெருநலவாழ்வுக்கு வழிஉண்டாகவில்லை. ஏன் ? அந்த மார்க்கங்களெல்லாம் புலன் அறிவு எல்லையிலும், மனோ அறிவு எல்லையிலும் முடிவாக ஆன்ம அறிவு எல்லையிலும் கண்டு உணர்ந்து துய்த்த விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றிருந்ததால் அவற்றிடை வேற்றுமையே மலிந்தன. ஒற்றுமை விளங்காததினால் மக்கள் சமுதாயத்திலும் வேற்றுமைகள் புகுந்துவிட்டன. மேலும் புலபோக வேட்கை வளர எல்லாவிதத் துன்பச் சூழல்களும் பெருகிவிட்டுள்ளனவாம். சமயம் என்றால் தெய்வ உணர்ச்சி அறிவாம். மனிதனுக்கு விசேட அறிவு விளக்கம் பகுத்தறிவாக உள்ளதால் அதுகொண்டு தெய்வீகமான வாழ்வு பெற வேண்டியவனாக இருக்கின்றான். மற்ற உயிரினங்களுக்குச் சிறந்த அறிவு விளங்குகின்றதில்லை. ஆகவே மனிதன் மட்டும் அவசியம் இச் சமய வாழ்வு ஏற்க வேண்டியுள்ளதாம். ஆனால் , அச் சமய உண்மை ஒன்றான அருட்பெரும்பதியிடத்திருந்து வெளிப்பட்டு விளங்காததினால் பல சமயக் கொள்கைகள் பர்விக் கேடு விளைவித்தனவாம். ஒன்றே கடவுள், அந்நிலையுறு நெறியாம் பேரருள் அனுபவ மார்க்கமும் ஒன்றே என இன்றே அறிகின்றோம். ஆன்ம எல்லையினுக்கப்பால், எல்லையற்ற பெரு வெளியாயிருக்கும் அருள் வெளியில், வடற் பெருவெளியில் திகழ்வது நம் அருட்பெருஞ்ஜோதி திருச்சபை, இதனையே சமயங்கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி எனப்பட்டுள்ளதாம். சமயங்களில் அடங்காத நம் சமயாதீதப் பரம்பொருளை அதன் நிறை அருளால் அடைந்து வாழலே அமைவதாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
Write a comment