Vallalar Universal Mission Trust   ramnad......
26. சாகாக்கலை வெளி - அகவல் உரைவிளக்கம்

51. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

52. ஆகாயத்தொளிர் அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) சாகாக் கலையை வழங்குவது சாகாக் கல்வியாம். சாகாக் கல்வியைப் புகட்ட வந்ததுதான் சுத்த சன்மார்க்கம், மற்ற எந்த மார்க்கத்தாலும் இறப்பை நித்தியமாக நீக்கிவிட்டு எஞ்ஞான்றும் சுத்த சுகானந்தவாழ்வில் விளங்கிக் கொண்டிருப்பது கூடாதாம். ஆயையால் இச் சாகாக் கல்வியை நல்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நன்கு அறிந்து தெளிந்து ஏற்றுப் பயன்காண வேண்டும்.

உலகியற்கலை எதனையும் கலாசாலையிலோ ஆராய்ச்சிக் கூடங்களிலோ, ஆசாரிய பீடங்களிலோ, பிறவிடங்களிலோ பிறர் மூலமாய்ப் போதிக்கப்பெற்று, ஆழ்ந்து பயின்று பயன் பெறலாம். அல்லது தனியிடத்திருந்து ஒருமையோடு கூடிய மந்திர உபாசனாமுறையில், தீவிரத் தியானாதி முறையால் அரும் கலையோர்ந்து பெரும்பயம் அடைதல் கூடும். ஆனால், இந்தச் சாகாக்கலா அனுபவம், தயாவொழுக்கத்தோடு கூடிய சுத்த சத்விசாரத்தால் அருள்வெளியில் இருந்துதான் பெறவேண்டியிருக்கின்றதாம். இவ்வருட்பெருஞ் வெளிதான் இங்கு சாகாக்கலை நிலை தழைத்திடுவெளி என்று ஓதப்பட்டிருக்கின்றது. இந்த அருள்வெளியாம் ஆகாயத்தில் நித்திய பரிபூரணமாய்த் தோற்றமும் மறைவும் இன்றி என்றென்றும் ஒளிசெய்து கொண்டுள்ளது நம் அருட்பெருஞ்ஜோதியாம்,

மேற்படி அருள்வெளி நிறை ஆகாச நிலையை அருளாலேதான் கண்டடைய முடியும். அதற்குக் கீழ் உள்ள ஆகாச நிலையைத் தான் இதுவரை உலகம் அறிந்து ஓரளவு பயன்கொண்டுள்ளதாம். அந்நிலைகளையும் அவற்றால் கிடைக்கப்பெறும் பயன்களையும் ஒருவாறு காண்போம். அவ்வாகாச நிலையாவன:

1. பூதாகாசம் இது உடல்நிலையில் நிரம்பியுள்ள இந்திரிய ஆகாசம் எனப்படும்.

2. கரணாகாசம் புறக் கரணமாகிய மனோவாக்கு காயத்துவம், அகக்கரணமாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரத்தும் விளங்கும் ஆகாச நிலையாம்.

3.ஜீவாகாசம் தூல, சூக்கு, காரண தேகத்தில் விளங்கும் சாதாரண அசாதாரண உயிர் ஆற்றல் நிலையாம்.

4. ஆன்மாகாசம் கர்ம, பக்தி, ஞான, யோக சித்திகளுக்கெல்லாம் இடமாக உள்ள நிலையாம்.

இவ்வாகாச நிலைகளில் நின்று முயற்சி மேற்கொள்ளுபவர்கள் சாதாராண, அசாதாரண சக்தி சித்திகளைப் பெற்று அதற்குக் குறிக்கப்பெற்ற காலம்வரை இவ்வுலகில் வாழ்ந்து மறைய நேரும். உலகநெறிகள் இதற்குமேல் மனிதனை வாழ்விக்காவாம். அதீதமாயுள்ள அருள்வெளி ஆகாசநிலையிலிருந்துதான் மனிதன் அருட்பெரும் பதிமயமாகி நித்தியமாய் வாழ முடியும்.

இவ்வருட்பெருவெளி, ஆன்மாகாசத்தில் அதீத நிலையில் அருகிக்கிடப்பது எனினும், அகண்டாண்ட கோடிகள் யாவும் இவ்வெளியில் கண்டுகொள்ளப்படுவதோடு ஆக்கலாதி ஐந்தொழிலால் ஆட்டிவைக்கப்படுவனவாயும் இருக்கின்றனவாம். இவ்விடத்திலிருந்தே நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தம் தனிப்பெருங்கருணையால் பேருலகுயிர்ப் பொருள் யாவற்றையும் தோற்றுவித்து ஆண்டுகொண்டுள்ளார். இந்தப் பரம்பொருள் ஆதியந்த மற்ற சச்சிதானந்த , ஒன்றான கடவுளாவார். இந்தக் கடவுளைத் தான் அருளாற்கண்டு, அதுவே நாமாயிருக்கின்ற உண்மையை உணர்ந்து, அங்கிருந்து அனகவாழ்வு மேற்கொள்ளுதலாலே இயல்பாகவே அவ்விறை வாழ்வு நம்மதாகி நித்தியானந்தமாய் அருட்பெருஞ்சித்தியோடு நிலவும் வெற்றி பெருகின்றோம். இதுவே சாகாக்கல்வியின் முடிந்த பயனாம். இப் பயன் அருள் பதியைத்தான் நம் அருட்பிரகாசனார் சாகாக் கலை நிலை தழைட்திடுவெளியெனும் ஆகாயத்தொளிர் வருட்பெருஞ்ஜோதி என்று போற்றுகின்றார்

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா,.

vallalarspace.com/vumt