Vallalar Universal Mission Trust   ramnad......
25.சச்சிதானந்த வெளி

49. சச்சிதானந்தத் தனிப்பர வெளியெனும்

50.அச்சிய லம்பலத் தருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) அச்சு ஆதியான ஆன்மக் கருவாய் இருக்கின்றது. அதுவே கடவுளுக்குரிய சத்திய நித்திய சிற்றம்பலமாகும். இவ்வம்பலத்தேயிருந்து சுத்த சன்மார்க்க ஆட்சி புரிகின்றார் நம் அருட்பெருஞ்ஜோதி அம்பலத்தரசர். உலகம் இந்த அம்பலத்தையும், இதிலிருந்து அருளாட்சி புரிந்து வருகின்ற அருளரசையும் அறிந்துகொள்ளாதிருக்கிறது. ஏனெனில் இதுகாறும் அருள் ஞானம் வெளிப்படாமல், சுத்த சன்மார்க்கம் விளங்காமல், இதற்கெல்லாம் மனித உள்ளம் அருட்பக்குவம் அடையாமல் இருந்ததே காரணமாகும். ஆன்மாலயத்தில் இருக்கும் ஆண்டவர் என்றும் விளங்குவதால் சத்தாகவும், யாவுமாய்த் தோற்றி உண்மையை வெளியாக்கித் தயவுச் செயலோடு விளங்கலால் சித்தாகவும், இச்செயலால் உயிரினுக்கு இன்பம் விளைவித்துக்கொண்டு இருப்பதையும் உணர்த்தித்தான் அதுவாய் விளங்கும் ஒருவனும் அப்படியிருந்துகொண்டு உலகில் தயவுச்செயல் தாங்கிப் பிறருக்குப் பக்குவம் உண்டாக்கிக்கொண்டிருப்பதே முறையாகும்,

அம்பல வாழ்வு சச்சிதானந்தமாய் உள்ளது. இதனையுணராதும், இதனைப் பெற சுத்த சன்மார்க்கத்தை அறியாமலும் , புறத்தலைந்தும், புலனடக்கியும் அகத் தொடுங்கியும், வீண்போயினர் எண்ணிறந்த கோடி ஆன்மாக்கள் புறத்தே கண்ட புலன் இன்பம் பொய்த்துப் போயது; தூங்கிக் கண்ட சுழுத்திச் சுகமும் தொலைந்து போயிற்று; அகத்தே பதிபதத்தொடுங்கிப் பெற்றும் பெறாத ஆன்மானந்தமும் அகன்று போயது; அப்படி அப்படி அவையெல்லாம் ஒழிய இப்போது சச்சிதானந்த வாழ்வு நிலைக்கச் சுத்தநெறி அருட்பூரணத்தால் உதயமாகி யுள்ளதாம்.

தனிப்பரவெளியில்தான் சச்சிதானந்தபதி அருட்பெருஞ்ஜோதியாய்த் திகழ்கின்றார். அந்தப் பரவெளி நிலை நம் அச்சு என்னும் ஆன்மத் தளியில்தான் அருளால் தரிசிக்கவும், அதனோடு கூடிப் பிரிவற்று இருந்துகொண்டு ஆனந்தமாய் வாழவும் அருள் பாலிக்கப்படுகின்றோம். மற்ற எவ்விடத்தும் எவ்வகையிலும் இந்த சச்சிதானந்த அனுபவாழ்வு ஒருவனுக்குக் கிடைக்கப் பெற்று நிலைப்பதாயில்லையாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com.vumt