45. தகரமெய்ஞ்ஞான தனிப்பெரு வெளியெனும்
46. அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) அகண்டமாய் விரிந்துள்ள பேருலகப் பெரு வெளியே கடவுளரின் நிறைநிலைப் புறவடிவமாகக் கொள்ளுவர் உண்மை கண்டோர். அவ் அகல் வான்வெளியில் நின்றே யாவும் தோன்றியிருக்கின்றனவாம்; இந்த அகண்டவெளியில் அனாதியாயுள்ளது அருள் இறையுண்மையாகும். இவ்வருள் உண்மை, அணுவுக்கு அணுவாய் எங்கும் என்றும் இருந்துகொண்டு , மெய்யறிவு விளைவில் வெளிப்பட்டு விளங்கி அனுபவப்பட்டு உள்ளதாம். ஆகாச வெளியே அகர எழுத்தால் சுட்டப்படும், வெளி என்றால் வெற்றிடம், பரந்து விரிந்த அகலிடம். இவ் வெளியிடத்தில் தோற்றரிய இறையொளி மய ஆகாசம் நிரம்பியுள்ளது. இந்த் ஒளிவெளி ஆகாச நிலையைத்தான் இறைவன் நிறை வடிவமாகக் கொள்ளப்படும். இவ்வாகாச பூதநிலையை ‘ ஈதர்’ (ether)என்று கூறுவர் மேனாட்டர். ஆனால், அக உண்மை அறியா மேனாட்டர் ஆகாச பூதவிளக்கத்தைப் புரிந்து கொள்ளாது, இதனை வெற்று யூகமென நினைக்கின்றனர். இக் கருத்தே அன்னோர் குறித்துள்ள பொருளாம். (ether is the subtle medium supposed to fill all space.) யாதெனில் ஆகாசம் என்பது, வெளிமுழுவதும் நிரம்பியுள்ளதாகக் கருதப்படும் ஒரு மிக நுண்ணிய ஊடகம் என்பதாம். உண்மையில் இந்நிறை பொருள் நிலையான் இறை இயற்பொருளேயாம். இறு என்னும் பகுதிப் பொருளால் குறிக்கப்படும் இறைவன், என்றும் இருப்பவன் என்பது உட்கோள். இந்த இறை பரம்பொருளின் அணு நிலையே நம் ஆன்ம சிற்றணுவாய் இருந்துகொண்டு தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ள ஜீவ தேகாதி பிரபஞ்ச வடிவங்கள் எல்லாம் ஆக்குவதும் அழிப்பதும் ஆக இருந்து வருகின்றதாம்.
பரமாகாச சொரூபியான கடவுள், வெளிமுற்றும் நிரம்பி இருந்து கொண்டுள்ளார். அக்கடவுள்தானே ஆன்ம சிற்றணுவில் கூட அகர ஆகாச வண்ணமாய்த் திகழ்கின்றார். அந்த ஆன்மக் கடவுள் அணு சடபூதப் பொருளில் பிரித்தறிய முடி யாத நிலையில் கிடந்து , பின்னர் ஓரறிவு முதல் புல்லாதி ஜீவவடிவைப் பெறும்போது உயிர் உணர்வாகிய அறிவுகொண்டு விளங்குகின்றதாம். உயிர் உணர்விலே ஐம்புலன் அறிவுக்கு அப்பாலான மனோ அறிவு விளைவுண்டாகும்போது பக்குவ மனிதப் பிறப்பு தேகம் கொண்டு விளங்குகின்றது அக்குறிப்பிட்ட ஆன்மா. இந்த ஆறாவதாகிய மனோ அறிவுக்கு மேல்தான் அருள் அறிவு ஏழாம் நிலையில் தோன்றுகின்றதாம். இந்த அருள் அறிவால்தான் அந்த ஆன்மா தன்னைத்தான் அறிந்துகொள்கின்றது.
அகண்டாகாச நிறைவிலே சிற்றணுவான ஆன்மா, சிதாகாச வண்ணமாய், மனிதனின் ஏழாவதாம் நிராதார நிலையில் வெளிப்பட்டுத் தன்னைத்தான் அறிந்து கொள்ளுகின்றது, இந்த நிராதார நிலையம் அருள் ஞானபீடம், பகரவிடிவக் குழியும் அதன் மேலிருக்கும் லகரமெய்யால் சுட்டப்படும் திரயோதச அருள்வெளி நிலையையும் குறிப்பதாம். இதனையே அக அனுபவத்தில் “ த் “ என்னும் மெய்ந்நிலையாகப் பகரப்படும். எவ்வாறெனில் “ த் “ என்று உச்சரிக்கும்போது நுனிநா மேற்பல் அடியைத் தீண்டி நிற்கின்றதேபோல் அருள்ஞான உணர்வாகிய நாவினால் அகநிலையில் உணர்த்தப்பெறும் இடம் நம் கடவுளான்மப் பல் நிலைத்தானமாக இருக்கின்றதாம். இதனை அறிந்தே இந்தத் தகர மெய்யெழுத்தைத் தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் வைத்துள்ளனர் நம் தமிழ் ஞானச் சித்தர்கள், இதனாலேயே நம் கடவுளைத் தகராகாச வடிவினர் என்றும், தகரகன நடனபதி என்றும், தகராலய மூர்த்தி என்றும் கூறினர். சித்தாந்த தசகாரியத்தும் ஏழாவது விளங்குவது சிவரூபமாம் கடவுள் வடிவேயாம். அன்றியும் அருட்பதி வண்ண ஓங்காரத்தின் – அகரம், பதியுருவாயும், உகரம் – அப்பதியை யுணர உள்ள ஆன்மாவின் உயிர் வடிவாயும், மகரம் – அவ்வுயிர் சென்றடையும் நிலையாயும் இருக்கின்றனவாம். இவற்றில் அகரத்தை எழுத்துடன் கொண்டும். உகர மகர மெய்யை எண்ணுடன் கொண்டும் முடிந்த அனுபவத்தை அ+உ+ம்= ஓம் என்னும் ஒன்றாய்க் கொண்டுள்ளனர். தொடக்க எண்களின் ஈற்றில் உகரம் வந்து வந்து ஆயிரம் என்னும் எல்லையுறும்போது “ ம் “ என ஒலித்து நிற்கிறதாம். இதனாலேதான் ஆயிரம் என்ற எண்ணைக் கூட தகர எழுத்து வடிவமாய்க் குறிக்கப்படுகின்றது. நம் தமிழில் இது கொண்டு நம் பதியை ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்குபவராகவும், அகர ஆகாச வடிவ மனித தேகப் பிரமாணம் எட்டு சாண் உள்ளது கொண்டு, பரமாகாசப் பதிவடிவுக்கும் எட்டு என்ற அகர எழுத்து எண் கொள்ளப்படுவதால் தகராகாசம் ( 1000+8) ஆயிரத்தெட்டின் வண்ணமாகக் கடவுள் தத்துவம் ஆக்கப்பட்டுள்ளதாம். ஆகவேதகரமெய்ஞ்ஞானத் தனிப்பெரு வெளி வண்ணக் கடவுளை நமது அக அகரநிலைப் பதியில் அருட்பெருஞ்ஜ் ஜோதியாகக் கண்டு, போற்றிக் கொள்ள நேருகின்றது. இந்த ஜோதி பதியை அருட்பெருஞ்ஜோதி அகண்ட தீபமாகத் திகழ வைத்துள்ளார் நம் அடிகளார். இத் தெய்வீக தீபமே தகரவிளக்கு எனக் குறிக்க நேர்ந்ததாம்.
மேற்படி தகர மெய்ப் பொருளை ஆதாரமாய்க் கொண்டு வழங்கப்பட்டதுதான் தயவு என்றா சொல். இது தகராகாச நிலையில் யகர ஆன்மா வரவுகர அருட்பெருஞ் சித்தியோடிலங்கும் அனுபவ நிலையையுணத்திக் கூட்டிவைப்பதாம். இச் சித்தி நிலையைத்தான் தகரவித்தை என்றும் , வகரவித்தை என்றும் சித்தர்கள் குறிப்பதுfட். தகர வித்தையால் காயசித்தியும் வகர வித்தையால் வாதசித்தியும் அல்லது சுவர்ணைசித்தியும் பெறுவது அச் சித்தர்களின் குறிக்கோள். சுத்த சன்மார்க்கடததில் சுத்தமாதி முத்தேக சித்தி பெறுவதற்குத் துணையாகக் கிடைக்கப்பெற்றுள்ளது இத்தயவு என்று அறியலாகும். இன்னும் தகர உண்மையை விரிகிற் பெருகும் ஆதலின் பிற இடத்திற் குறிப்பாம்.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா
vallalarspace.com/vumt
Write a comment
