Vallalar Universal Mission Trust   ramnad......
22. சித்தாந்த வெளி..அகவல் உரைவிளக்கம்

43. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்

44. அத்தனி சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) வேதாந்தி, கடவுளை அறிவால் கண்டடையவே முயன்றான், அறிவால் அறிந்து, அது நான்” என்ற பாவனையிலிருந்து பெற்றுவிடக்கூடுமென்று இறுமாந்து போனான். அப்படி முடியாது என்று மறுத்தெழுந்தான் சித்தாந்தி, இவன் தன்னைத் தற்சுதந்தரமற்ற , பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மப் பசுவாக எண்ணினான். அப்பாச நாசமுற்றுப் பதிபதம் அடைய, அப்பதியின் அருளை வேண்டிட முனைந்தான். அவ்வருள் பெறற்கான உபாய நெறி, ஆக சிற்பகலாந்தமாகவும், பண்ணிசைத் துதிமுறை நாதாந்தமாகவும் விரிவு செய்யப்பட்டதாம். இதனால் இந்தச் சித்தாந்தத்தில் , கலாந்தமும் நாதாந்தமும் அடங்கும் என்ப. இம்முறையால் தான் சிவானுபவ சித்தி பெற முடியுமே அல்லாதுவேதாந்தத்தால் பெற முடியாது என்று வலியுறுத்தவே,. வேதாந்த முடிவாம் சித்தாந்தம்” எனச் சிறப்பித்துக் கூறுகின்றனர் சைவசித்தாந்திகள்.

சித்தாந்த முறைப்படி ஆகமெநெறி வழுவாது ஆலய வ் அழிபாடியற்றித் திருவருளைப் பூரணமாய்ப் பெற்றுவிடமுடியுமா? மேலும் அந்நெறிமுடிவு ஒருவனுக்குச் சிவானந்த வாழ்வுடன் இவ்வுலகில் நிலவச் செய்வாதியில்லையே! அப்படி நிலவச் செய்யத்தான் இப்பொழுது சுத்த சித்தாந்தமாகிய சன்மார்க்க நெறி திருவருளால் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாம்.

சுத்த சித்தாந்தத்தில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி பதியைத் தனிச் சிறப்புற்றிலங்கும் நம் அருள் ஞானசபையின் கண்ணே சுத்த சத் விசாரத்தால் காண்கின்றோம். தயாவொருமையினால் இரண்டற்று அதுவாகி நிற்கும் பேரருட் பெருநிலையை எய்துகின்றோம். இது சுத்தசன்மார்க்கம் வழங்கும் சுத்த சித்தாந்த சுகப் பெருவெளி அனுபவமாகும். இந்தப் பெருஞ் சுக வாழ்வே ஓரான்மாவுக்குரிய உண்மையானந்த வாழ்வாகும். ஈதல்லாது பதி ஐக்கியமுற்று தனி இன்ப வாழ்வற்றுக் கிடக்கும் நிலை ஓர் ஆன்மாவுக்கு முடிவு நிலை எனக் கொள்ளக்கூடாது. தொகுத்துக் கூறல்; அருள் அனுபவ நிலையில் இன்கு குறிக்கப்பட்ட ஆறந்த முடி பொருளாகக் கண்டுகொள்ளப்பட்ட நம் அருட்பெருஞ்ஜோதிபதியைப் போற்றி அடையவே துதி முறையில் , அருட்பாவைத் தொகுத்துள்ளார் நம் பெருமானார். மற்றபடி சாத்திரத் கலையை விளம்பரப்படுத்தவும், விரித்துக் கூறவும், அவற்றில் அனுபவத்தை அடைவிக்கவும் அல்லவாம். ஆகையால் அருள் உண்மையைக் கூட்டி வைப்பதே இவ் அகவல் அடிகளின் கருத்தாகும். நம் அருட்பெருஞ்ஜோதி வெளி நிலையை, அருள் வெளிமுதலான பதின்மூன்று நிலைகளிற் குறிக்க வந்து இதுவரை ஒன்பது நிலை விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாம் மேலும் வரும் நான்கு நிலைகளும் அருள் அனுபவத்தின் விளக்கங்களேயாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்


vallalarspace.com/vumt