39. பெரியநாதாந்தப் பெருநிலை வெளியெனும்
40. அரியசிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) நாதம் என்பது ஒலி, ஓசையாகும், இவ்வுலகில் சிற்றணு முதல் பேரண்ட கோடிகள் வரை யாவும் அரிய ஓர் ஆர்றலால் இயங்கிக் கொண்டேயிருக்கின்றனவாம். அந்த இயக்கத்தால் சிற்றசைவு முதல் பெருஞ் சுழற்சி வேகம் வரை காணப்படுகின்றன. இவ்வியக்க சக்தியால் மிக நுண்ணிய ஒலி முதல் அளவரிய பேரோசைவரை யுண்டாகின்றனவாம். செவிப்புலனாய்க் கேட்கப்படும் ஒலியோ மிகச் சிற்றெல்லை கொண்டதே யாகும். அவ்வெல்லைக்கு அப்பாலுள்ள ஒலியைக் காதால் சாதாரணமாய்க் கேட்க முடியாது. வானொலிக் கருவி முதலியவற்றால் கேட்டறிதல் கூடும். சாதாரண நாதவொலியையே ஏழிசைப் பண்ணொலியாய் ஆக்கிக் கொண்டு இசைத்து இசையமுதம் பருகி மகிழ்கின்றான் மனிதன் நாத சங்கீத ஒலியிலே மனம் லயித்து பரவசம் அடைவது தெய்வீக நிலை எனக் கொண்டாடப் படுகின்றது. அத்தெய்வ நிலைப்பேற்றை நாதப் பிரம்மானுபவம் என்கின்றனர் அம்மேதையர். இதைவிட யோக சித்தர்கள் மன ஒடுக்க நிலையில் நாத அந்தத்திலே ஜோதிக் காட்சியைக் கண்டு அதனாலே அற்புத சித்திகளும் எய்திவிடுகின்றனர். இவற்றை எல்லாம்விட நம் ஞானசித்தராகிய வள்ளற்பெருமானோ திரு வருளாலே உள்ளுருகி ஒருமையுற்று நின்று பரநாத நிலைக்கு அப்பால் விளங்கும்பெருஞ்ஜோதி மலையைக் கண்டார். அந்தப் பெருஞ்ஜோதிக்கு நடுவே மாற்றறியாப் பொன் ஒளி அம்பலத்தைக் கண்டார். அவ் அம்பல நடுவிலே வள்ளற் பெருஞ்ஜோதிக் கடவுளையே கண்டார் கண்டு கலந்து அதுவாகி விளங்கி விடுகின்றார். இதுவன்றோ நாதாந்த வெளியில் ஒவ்வொருவரும் பெற வேண்டிய பெருநிலை! ஜோதியுட் ஜோதியுட் ஜோதியாய் உள்ள கடவுட்காட்சியைத்தான் நாதாந்தப் பெருவெளியில் கண்டு கொள்ளவேண்டியிருக்கின்றதாம். அருள் விசாரத்தால் அறிவரிய சிற்றம்பலத்துற்று அருளனுபவத்தால் நித்தியானந்த முறாவேண்டுவது நம் கடமையாகும். மற்றபடி நாதகீதத்தில் மயங்கிப் பெறும் சுகமும், நாதாந்த ஜோதிக் காட்சியில் பெறப்படும் நவநாத சித்தர்களின் கருமசித்திகள் தரும் இன்பமும் பெரியன வல்லவாம். நம் வள்ளல் அனுபவம் தரும் இன்பமும் சான்றும் இவை;
ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
என்கின்றார் நீ எனைவிட் டேகுதொறு நான் தான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடுமத் தருணம்
கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்ஜோதி மலைபரநாதத்தே
தோன்றியதாங் கதனடுவே தோன்றியதொன் றதுதான்
மாற்றறியாப் பொன்னொளியோ அவ்வொளிக்கும் ஆடும்
வள்ளலருள் ஒளியோஈ ததிசபிக்கும் வகையே
சிற்றம்பல வாழ்வு பெற்று அருள் ஒளிவண்ணமாய்த் திகழ்பவர் பெரிய நாதந்தப் பிரபஞ்சமும் கண்டு அருட்சித்து விளைத்துக்கொண்டிருப்பர். இது வள்ளல் அனுபவம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்…
vallalarspace.com/vumt
Write a comment