
37. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
38. அமலசிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) போதாந்தம் என்பது மெய்யுணர்வின் முடிவு நிலையாம். போது என்ற சொல் மலர்ந்து விரிந்த பூவைக்குறிப்பதாம். ஒரு பூவானது மலர்ச்சி பெறாதபோது அரும்பாக இருக்கும்; அப்போது அதனிடத்தே மறைந்து கிடக்கும் நிறமும், மணமும், இன்சுவைதேனும் விளங்குவதில்லை. இதுபோலத்தான் ஓர் ஆன்மாவானது பக்குவமுறாத காலையில் அரும்பென அருகிப் புறவண்ணத்தோற்றமும், உயிர் உணர்வும், அறிவானந்த அனுபவமும் பெறாது கிடக்கின்றதாம். இப்படி அரும்பு நிலையிலுள்ள ஆன்மாகட்டவிழாது தளையுண்டு கிடக்கும் நிலையை மலம் என்கின்றனர். ‘ ம் ‘ என்ற எழுத்து உச்சரிக்கப்படும்பொழுது உதடுகள் மூடிக்கொள்ளுவதும் ‘ ர் ‘ என்று ஒலிக்கும்போது இதழ் விரிந்து உட்காற்று வெளிப்படுவதும் அறிவோம். இவ்வுண்மையே மலம் மலர் என்றதன் கருத்துக்கொண்டு விளங்குவதாம்.
விமலம் என்ற சொல் கடவுணிலையைக் குறிப்பது, எவ்வாறெனில் , ‘ வி ‘ என்பது இன்மைப்பொருளையுணர்த்தலின், கடவுள் இயல்பாகவே மலம் ஒன்றுமில்லாத அனாதிமுத்துசித்துரு உள்ளவர் என்ற கருத்தைச் சுட்டவந்ததாம். மேலும். ‘ வி ‘ என்ற எழுத்து , வகர அருள் மெய்யும், இகர அருட்பிரணவ உயிரும் கொண்டு அருள் வண்ணமாய்த் திகழ்வது. இதனால் இந்த நிறை அருள் உண்மையோடு மறை யுற்றுக்கிடக்கும் இறைநிலையை விமல நிலையாக விளம்பினது உண்மைக்காரணமேயாம். அப்படியுள்ள விண்வெளி நிறை விமல பதியின் ஒரு சிற்றணுவான ஆன்மா பக்குவமுறும்போது மலபாசக் கட்டவிழ்ந்து அருள் மணத்தோடு ஆன்மானுபவம் ஏற்படுகின்றதாம். ஆன்மாவுக்கு இதுகாறும் மல மறைப்பு இருந்து நீங்கினதாக அறியப்படுகின்றது. பின்னர் சுத்தமுறுவதால் இது அமலநிலைஎன்று குறிப்பிடுவர். ஓர் ஆன்மாவுக்கு இம்மல நீக்க அருள் அனுபவம் இம்மனிதப் பிறப்பில் சிற்சபையில் விளங்குவதாம். ஆகவே,விமலம் என்பதற்கும், அமலம் என்பதற்கும் பொருள், இயற்கையில் மலமேயில்லாத அருட்பெரும்பதி நிலையைக் குறிப்பது விமலமாம். ஆன்மாவுக்கு அபக்குவத்தில் மலம் இருந்து , பக்குவத்தில் அம்மல நீக்கம் பெறப்பட்டு அமல நிலை ஏற்படுவது அனுபவம்.
விமல மெய்ப்பொருளாகிய கடவுளை அடைய , ஆன்மாவுக்கு அமல நிலையுண்டாக வேண்டுமாம். ஆனால் இவ் அமல நிலை சிற்சபையின் கண்ணின்று அருட்பெருஞ்ஜோதி மயமானலன்றி வேறு வழியில் பாசநீக்க, , போதநாசமும், இறையனுபவ வாழ்வுமுண்டாகா. முன் சுத்த நெறியின்மையால் விமல நிலை அடைய முனைந்த மனிதன், அமல நிலை பெறற்கு தேகாதியையே துறக்க வேண்டுமெனக் கொண்டது தவறாம். அருட்பெருஞ்ஜோதிச் சிற்சபையில் இருந்து வாழ முனைவது தான் விமலமூர்த்தியோடு கலவாதே ஒன்றி அதுவாகி வழும் முறை என்பது இன்றைய அனுபவமாம். உண்மையில் உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஒன்றே அந்த அருளே பெருஞ்ஜோதியைப் பசுபாசமாய், தேகாதியாவுமாய் ஆகிக் கொண்டிருப்பதுதான் உண்மை. இவ்வருள் உண்மைக் காரியப்பாட்டையுணராத மனிதன் தான் அவ்வருளை, இருள் மாயா மலமாம நினைத்து ஒழிக்க, முயன்று , தேகாதியை இழந்து ஒழிந்தே போகின்றான். நிறை அருள் கொண்டு அமல சிற்சபையிலிருந்தே அருட் பெருஞ்ஜோதியைப் போற்றி வாழ்வு பெறுகின்றவனே , போதாந்த நிலைக்கு மேல் விளங்கும் விமலானந்த வாழ்வு கொண்டு நிலவுவான் என்பது உண்மையாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment