Vallalar Universal Mission Trust   ramnad......
18.யோகாந்த வெளி

35. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்

36. ஆனியில் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) யோகம் என்றால் கூடுதல் அல்லது ஒன்றுதல் எனப் பொருள் படும். ஞானத்தால் உண்மையைக் கண்டு உள்ளொன்றுதல் ஞானயோகமாக நவிலப்படும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றில் ஈற்றிலுள்ளது ஞானம். இந்த ஞானத்திலும், சரிபாதி நான்குநிலையுளவாம். ஞானத்தில் ஞானமாகவுள்ள முடிநிலையே கடவுள் மயமான பெருநிலையாகும். இம்முடிவு எய்துவதற்கு முன்னுள்ள சுத்த விசார நன்னிலையே ஞானத்தில் யோகநிலை எனலாகும். இந்த ஞானயோக அந்தத்தேதான் நம் அருட்பெருஞ்ஜோதி நடனபதி, ஆனியில், அதாவது கேடும் அழிவும் அற்ற ஆன்ம சிற் சபையில் திருநடனம் புரிந்து கொண்டுள்ளார். நமது அருட்பெருஞ்ஜோதி ஆனந்த நடனபதி திரு நடனம் புரிந்து கொண்டுள்ள அருளம்பலம் எவராலும், எதனாலும் தீண்டப்படாத அகவெளியுள்ளதாம். அப்படியானால் அந்த நடராஜபதியை ஒருவன் ஞானயோகத்தால் முடியாதுதான்! இங்கு அந்த ஞானயோகத்தால் அப்பதி நிலை சித்திப்பதாகச் சொல்ல வில்லையே நம் வள்ளற் பெருமான் !ஞானயோகத்தின் அந்தத்தே, அப்பாலே, அதீதத்திலேயல்லவா நம் அம்பலத்தரசர், ஆடிக் கொண்டுள்ளார் எனக் குறித்திருக்கின்றார், எனவே, ஞான யோகாந்தத்தே விளங்கு பதிநிலையை ஒன்றுவதற்குப் புறத்திருந்து சென்றடைதல் கூடாதாம். ஆகையால், சுத்த அருள் ஞானத்தால், நாமே அந்தப் பதியோடு இரண்டற இருக்கும் உண்மையையோர்ந்து , அங்கு உடனின்று வாழக்கூடும் என்பது குறிப்பு, இதுகாறும் சுத்தசன்மார்க்கம் வெளிப்படாதிருந்ததால், ஞானயோகாந்தத்தே கடவுள் மயமான வாழ்வு சித்திக்காதிருந்தது. இப்பொழுது நம் வள்ளல் பெற்ற சுத்தசன்மார்க்கத்தால் அவ் யோகாந்தத்திலங்கும் பதியோடு ஒன்றி வாழ்தல் சாத்தியமாகின்றதாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt