14. தனிவெளி – சிவவெளி –அருள்வெளி
27. திருநிலைத்தனிவெளி சிவவெளி யெனுமோர்
28. அருள் வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) இதற்கு முன் குறிக்கப்பட்ட பன்னிரெண்டு இணை அடிகள் அகரம் முதல் ஒளகாரம் முடியவுள்ள பன்னிரெண்டு உயிர்ரெழுத்துக்களைக் முதலாகக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளன. இவ்வமைப்பு உயிர்வர்க்க முறை எனப்படும். அடுத்த பதின்மூன்றாம் நிலையைச் சுட்ட, திருநிலைத்தனிவெளி என்ற சொற்றொடர் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாம். இவ்வமைப்பு அருள் அனுபவத்தின் பொருட்டாம்.
நம் தமிழ் நெடுங்கணக்கில் பன்னீருயிருக்கு அடுத்துவருவது, ஃ – என்னும் ஆய்த எழுத்தாகும். இது, தனிநிலை என்றும், முப்பாற் புள்ளி என்றும் கூறப்படும்/. உயிர் நிலைக்குப் பின்னும், மெய்ந்நிலைக்கு முன்னும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்தம் , தமிழ்ச் சொற்களில் இந்த ஆய்தமும், மெய்யாம் புள்ளி எழுத்துக்களும் மற்றுஞ் சில உயிர்மெய் எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரமாட்டா. ஆகவே இங்கு இந்தப் பதின்மூன்றாவது இணையடியை ஒரு வேறுபாட்டுத்தோற்றத்தோடு அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். அதாவது, தனிநிலை என்ற ஆய்தத்தைக் குறிக்கும் சொல்லை முதலாகக் கொண்டதோடு திரு என்னும் தெய்வப் பண்பு உணர்த்தும் அடை மொழியுஞ் சேர்த்து ஓதப்பெற்றுள்ளதாம். திருநிலைத்தனி என்றதைத் தனிநிலைத் திரு எனக்கொண்டு பொருள் காணவேண்டும். மேலும் இது பன்னிரெண்டாம் உயிர்நிலைக்குமேல் பதின்மூன்றாவதாகக் கொள்ளப்படுவதின் காரணம் அனுபவக் குறிப்பேயாம். “ உயிரனுபவ முற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருளுனுபவமுறும், “ என்பது வள்ளல் வாசகம். அன்றியும் இவ்வனுபவ நிலைகளைக் குறித்து நம் அடிகளார் விளக்கியுள்ளது இதுவாகும். அனுபவத்திற் பெறப்படும் நிலைகளாவன.
1. பூத நிலை
2. கரண நிலை
3. பிரகிருதி நிலை
4. மோகினி நிலை
5. அசுத்த மாயாநிலை
6. அசுத்தமகா மாயா நிலை
7. சுத்த மாயா நிலை
8. சுத்த மகா மாயா நிலை
9. சர்வ மகாமாயா நிலை
10.குண்டலிநிலை
11. பிரணவநிலை
12. பரிக்கிரக நிலை
இப்பன்னிரு நிலைக்கப்பால் அனுபவப்படுவது பதின் மூன்றாவதாகிய அருள்நிலையாம். இந்த அருள் அனுபவ நிலையில்தான் கடவுள் உண்மை கண்டு அடைதல் கூடும். அக்கடவுள் அனுபவமே சுத்த சிவானுபவமாகக் குறிக்கப்படுகின்றது.
நிறை மனிதனின் அருள் அனுபவத்தில் விளங்கும் கடவுள் “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக உள்ளது” இவ்வருள் விளக்கத் தொடர் வாசகத்தும் ( அ , ரு , ட், பெ, ருஞ், ஜோ, தி, த,னிப்,பெ,ருங்,க,ரு,ணை) பதின்மூன்று நேரசைகள் அமைந்தே விளங்குகின்றதாம். இவ்வனுபவம் வெளிப்படுவது நம் சிரநடுச் சிற்றம்பலத்தின் கண்ணேயாம். இவ்விடம் பகர வடிவக் குழியிடமாகவும்,மேல் லகர மெய்யாம் – ல் – என்னும் பதின்மூன்றாவது மெய்ந்நிலை எழுத்தால் குறிக்கப்படுவதாம். ஆகவே இந்தப் பல் நிலையே அருட்பெருங்கடவுளர் தனிப்பெருங்கருணையுடன் திகழும் உண்மையைச் சுட்ட வந்துள்ள தாம். இப்படி வெளிப்பட்டிலங்கும் இக்கடவுள் உண்மை, இந்த ஆன்ம அணுவுக்கு அகத்தும் புறத்தும் அருட்பெருஞ்ஜோதியாகவே நிலவுகின்றதாம். இவ்வுண்மையைக் குறிக்க ( அம்+பல்+அம்) அம்பலம் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. முதலிலுள்ள அம், ஆன்ம அணுவின் அகத்தே அருவ அருள் உணர்வாய் உள்ளது. ஈற்றிலுள்ள அம் ஆன்மாவின் புறம் சூழ்ந்த ஜோதியுருவாயுள்ளதாம். இவ்விரு நிலைக்கும் நடுவிலே தான் நம்பதி திரயோசாந்த அருள் அனுபவத்தில் “ அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை” யாய் வெளிப்பட்டு , நம்மைப் பேரின்பில் விளங்கச் செய்யப் பேரானந்த நடனம் புரிந்து கொண்டுள்ளார். இந்த அருட்பெருநிலையே , தனி நிலை என்னும் ஆய்த எழுத்தியலால் வெளியாக்கப்பட்டுள்ளதாம்.
இங்கு குறிக்கப்பட்டுள்ள மூன்று வெளிகளின் உண்மை. ஆய்த எழுத்திற் காணும் கீழுள்ள இருவட்டங்கள் கடவுளர் ஈரடிகளையும் மேலுள்ள ஒரு வட்டம் முடிநிலையனுபவத்தையும் சுட்டுகின்றனவாம். வெளி என்பது வெற்றிட நிலையாம். புறத்துள்ள அகண்ட வெளி வட்ட வடிவமாக இருக்கின்றதைக் கொண்டு அதனைச் சுட்டுவதற்கு , வட்டக் குறியீடு அமைத்தனர். இந்த புறவெளியின் உண்மை அனுபவமெல்லாம் ஆன்ம சிற்றணுவில் வெளியாகின்றதால், அவ்வணுவுக்கும் அதனுள் மறைந்துநின்று ஆட்சி புரிகின்ற அருவ அருட்சக்திக்கும் கூட வட்டக்குறி அடையாளமே கொள்ளப் பட்டுள்ளதாம். புறத்தே ஜோதிமயமாயுள்ளது சிவவெளி எனவும், அகத்தே அருள் சக்திமயமாயுள்ளது அருள்வெளி எனவும் , இவ்விரண்டின் மேற்பக்குவ காலத்தே அனுபவப்படும் நித்தியானந்தப் பெருநிலையை தனிவெளி எனவும் உணர்த்தப்படுகின்றோம். இத்தனிநிலை வெளியில் நித்திய வாழ்வு பெற்றுத் திகழ்வதே சுத்த ச்னமார்க்கத் திரிதேக சித்திப் பெருநிலையாம். இதுதான் உண்மையான திருவாழ்வாகும். இந்தத் தனிநிலையுற்றிருந்து கொண்டே நம் வள்ளற்பெருமான் , அகச் சிற்சபையும் பொற்சபையும் உரிமையிற் பெற்றுத்தான், சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு என்கின்றார். இப்பொற்சபையே சுத்த தேகமாகவும் , சிற்சபையே ஞானதேகமாகவும் கொண்டாடுகின்றார் திருவருட் பிரகாசமாம் அருட்பெருவடிவில் விளங்குகின்ற நம் வள்ளலார்.
ஆடும் கருணைத் திருநடத்தீர்
ஆடும் இடந்தான் யாதென்றேன்
பாடும் திருவும் செளந்தரமும்
நாடும் படிநன் கருளுமென்றேன்
நங்காய் முன்பின் ஒன்றேயாய்
ஈடுந் தியபல் நடுவுளதாம்
என்றார் தோழி இவர்வாழி!
என்ற அருட்பாசுரத்தால் அருட்பெருஞ்ஜோதி நடனபதியின் அம்பல உண்மையும் , அந்தப் பல்நிலைப்பதியின் திருவருளின் சேர்ப்பால் , திருவும் –பொன்வடிவச் சுத்த தேகமும், செளந்தரம், அழகு = அம்= அ+ (உ)+ம்=ஓம் என்னும் பிரணவ தேகமும், பலம் = பழம் ஆகிய ஞான தேகமும் பெறப்படும் இடமே கடவுள் ஆடும் அம்பலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்தம் குறிக்கும் முப்பாற் புள்ளியின் உண்மை, பதுமாசனத்திருக்கும் யோகியின் வடிவில், இருகாற் பெருவிரலின்காண் உதித்தொளிர் இடபிங்கலா நிலைச் சூரிய சந்திர வட்டங்களையும் மேற் சிரத்தொளிர் சுழிமுனை ஜோதி வட்டத்தையும் குறிக்கும். மேலும் இவ்விருகலா நாடியின் முடிநிலை தீண்டி நிற்கும் இரு கண்வட்ட நிலையையும், அவற்றின் நடுவுற்று அக்கினிகலா ஞானக்கண்ணாய் அதுவும் ஒரு வட்டமாய் திகழும் நிலையையும் உணர்த்துகின்றனவாம். மேல் உள்ள தனி வெளி சுட்டும் நுதற்கண்ணே மெய்யனுபவத்திற்கு உதவி நிற்கின்றதேபோல், முக்கண் என்று குறிக்கப்படும் தேங்காயின் அந்த மேனிலைக் கண்ணே அதற்கு விளைவுபெறக் காரணமாய் உள்ளதை அறிவோம்.
எனவெ, நாம் நமது உண்மை நிலையாகிய திருவளர் தனி வெளிநிலையுற்று , அருள்வெளி சிவவெளி அனுபவமுண்டாக அருட்பெருஞ்ஜோதியைப் போற்றி செய்வோம்.
தயாநிதி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதிஅகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
தொடரும்.,,,
Write a comment