Vallalar Universal Mission Trust   ramnad......
12. ஓதாது உணர்தல்

23. ஒதா துணர்ந்திட ஒளியளித் தெனக்கே

24. ஆதாராமாகிய அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) கடவுள் உண்மையை அறிந்து அடையும் உயர் சிறப்பு கொண்டு விளங்குவது இம்மனிதப் பிறப்பு, ஆனால், உண்மை அறிவு, சாதாராண பொறிபுலன் அறிவுக்கும், மனோகரண அறிவுக்கும், ஜீவபோதப் பகுத்தறிவுக்கும் வெளிப்படாது. அவற்றிற்கெல்லாம் மேற்பட்டு உள்ளதொருமையில் ஆன்மபோதத்தில் ஒருவாறு வெளிப்பட்டு, மேல்தயவினால் , அன்பினால் நெகிழ்ந்து உருகுகின்ற தருணம் தான் அவ் இறையருள் ஒளி சிறிது சிறிதாக வெளிப்படவுள்ளதாம். இதனால் தான் இதுகாறும் மக்கள் அறிவு பல துறைகளிலும் எவ்வளவோ தூரம் கடந்து சென்றும் கூட , இன்றளவும் இறையுண்மையைக் கண்டு கொள்ளவில்லையாம்.

ஓதுவது ஒழியேல் என்றும் , ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றும் முன்னோர் கூறிவைத்தனர். ஓதல் என்றால் படித்தல் என்பர். அதாவது பிறர் உள்ளக் கருத்தைப் புரிந்து கொள்ளற்கு உபாயமாக ஏற்பட்ட மொழியைப் பயின்று அறிந்து கொள்ளலாம். அப்படிப் பயின்று பெறும் அறிவு, படித்தறியும் விளக்கம் மேற்குறித்த அருள் உண்மையை எவ்விதத்தும் எவ்வளவும் உணர்த்தக்கூடியதாயில்லை. பன்னெடுங்காலம் முயன்று பயின்றும் அறிதற்கரியது அருட்பெரும்பதி உண்மை. படித்தறியக் கூடியதெல்லாம் வாச்சியப் பொருளேயன்றி இலட்சியப் படுவது. இலட்சியம் என்பது முடிந்த குறிக்கோள் அனுபவப் பொருளாய் விளங்குவது. கடவுளின் அருட்பேருண்மையைக் கருவி கரண இந்திரியங்களால், வாயுரையால், சொற்பொருளால் வெளிப்படுத்த முடியாதாம். ஆகையால்தான் அவ்வுண்மை வாச்சியப் பொருளல்ல எனப்பட்டது. வாச்சியமே ஓதப்படுவது; இலட்சியம் ஓதப்படாதது. ஆனால் அந்த ஓதப்படாத மெய்ப்பொருளிலிருந்துதான் ஓதப்படுபொருள் யாவும் தோன்றுகின்றன. ஓதப்படாத அம்மெய்ப்பொருள்தான் உள்ளிருக்கும் அருட்ஜோதியாய், ஊமை எழுத்தாய், ஓங்காரத் துட் பொருளாய் விளங்குகின்றதாம். ஓங்காரத்துள்ளிருக்கும் இறையருட் சக்தியின் நாத ஒலி வெளிப்பட்டு ஓதல் செயலாய் விளங்குகின்றது. இப்போது ஓதல் என்றால் உள்வளர் ஊமை எழுத்தாம் ஓங்கார ஜோதியின் புறக் காரியப்பாடான ஒலிமொழியாக அறிவோம். இதனால் அவ்வோங்கார உண்மை கொண்டு விளங்கும் நூலுக்கு ஓத்து என்ற சொல் வழங்கப்பட்டுள்ளதாம். ஒத்து என்றால் வேதம் என்பர். இதனை ஓதல், ஓதுவித்தல் முறையால் கர்ண் பரம்பரையாக செவி வழி புகட்டப்பட வேண்டுமென்பது ஆன்றோர் கொள்கையாகும்.

மேற்குறித்த ஓதல் முறையால் மட்டும் அருள் இறை உண்மையைக் கண்டுகொள்ள முடியாது என்பது அனுபவம் ஆகையால் வேதங்களும் இறைவனை அறியமாட்டா என மொழிந்துள்ளனர். அருள் ஒளி ஒன்றினால் தான் அவ் இறைவனை அறியவும் அடையவும் முடியும். இதனைத்தான் நம் வள்ளற் பெருமான் உள்ளொளியாகப் பெற்று விளங்கினார் என்று உணர்த்தப் பெறுகின்றோம்.

தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்

சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை

இவறாஅத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்

இருந்து அருளாம் பெருஞ்ஜோதி கொண்டறிதல் கூடும்

எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடாது

என்னாணை என்மகனே அருட்பெருஞ் ஜோதியைத்தான்

தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே

சபையினைத் தரசேயென் சாற்றுமணிந்தருளே.

என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தால், அகம் ஓங்கு சுத்த சிவ சன்மார்க்க நிலையிலிருந்து. அருட்பெருஞ் ஜோதியைக் கொண்டு தான் கடவுள் உண்மையைக் கண்டடைய கூடும் என்பது குறிப்பு,

ஓதாதுணர்தல் என்றால் இப்படித் திருவருள் சார்பால் உள்ளொளி கண்டு ஒருமையின் திகழ்வதேயாகும். அப்படி நிற்பவர்களுக்கு, கலையறிவுக்கு எட்டாத இறையுண்மை உள்ளபடி வெளிப்பட்டிலங்குவதாம். உள்ளொளி நிலைபெறாத வெற்று மனோ ஒருமை கொண்ட கன்ம சித்தர்களும் , தற்கால மேனாட்டு விசேட உள நூல் விற்பன்னர்களும் ( para-psychologists)கூட எவ்வளவோ மறைபொருள்களைக் கண்டு வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்கின்றனர் என்றால் , நம் வள்ளல் பெற்ற கடவுள் ஆன்ம அருட்ஜோதி நிலையினின்று எம்மறை பொருளைத்தான் உள்ளவாறு கண்டு வெளியிடலாகாதோ எதையும் ஓதாது உணர்ந்து உரைத்தல் சாத்தியமே என்பது தெளிவாம். ஆகவே நம் பெருமானார் அருள் ஒளி அனுபவத்தில் காணாதவெல்லாம் கண்டும். கேளாதவெல்லாம் கேட்டும், அறியாதனவெல்லாம் அறிந்தும் வெளியாக்கினதூண்மையே, முன்னர் இருந்த ஆன்ம ஞானிகளின் அனுபவங்களும் கூட வெளியாயினவாம். மறைபொருள் உண்மையைக் காத்து வந்த மகான்கள், சூக்கும வடிவினராய் இருக்கின்றவர்கள் கூட வள்ளலாரை அணுகிவந்து தம் அனுபவங்களை வெளிப்படுத்தினார்கள் என்பதும் மெய்யே, மேலும் இந்த அருட்பெருங் கடவுட் ஜோதி நிலையில் தாமே பூரணமாய்த் திகழ்வதைக் கண்டதோடு, தாமே ஒவ்வொருவரின் உள்ளொளியாயிருந்து அவரவர் வண்ணமாய் விளங்குவதையும் உணர்ந்திருந்தார். ஆகையினால் எவர் உள்ளத்தினையும் ஓதா துணரும் மாண்பு பெற்றிருந்தார் என்பதும் உண்மையே. இந்த உள்ளொளியை வழங்கி முழு ஆதரவாய் நிரம்பி நின்ற உண்மையை , எனக்கே ஆதாராமாகிய அருட்பெருஞ்ஜோதி என்று குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் முழு முதற்காரணமாயிருக்கின்றா அருள் ஒளியைக் கொண்டதோடு அதுவே தானாக, தானே அதுவாக ஆக்கப்பெற்ற பெருநிலையே இங்கு தமது ஆதாரமாகப் பேசப்படுகின்றதாம். இம்மனித உடலில் அருட்பெருஞ்ஜோதி இறையொளி முழுமையாக, சிரநடுவுள் நிராதர நிலையில் திகழ்வது. அதுவே முழு ஆதாரமாய் உள்ளது. அனுபவத்தின் பொருட்டு அதுவே ஆறாய்ப்பிரிந்து கீழ் ஆதாரங்கல் ஆறில் கிளர்ந்து ஒளிவீசி விளங்கலை யோகியார் அறிவர். அன்னார் கீழிருந்து மேனிலைக்கு ஏறிச்சென்று ஒடுங்கி விடுதல் கூடுமேயல்லாது அம்மேனிலை நின்று வாழ்வது அமையாததாம். நம் சுத்த சன்மார்க்கமாம். அருள் நெறியில் அந்த மேலாதரத்தே நிலை கொண்டு வாழ அருள் ஒளியே ஆதாரமாகி விளங்குகின்றதாம். ஆகவே அந்த அருட்பெருஞ்ஜோதிஆதராத்தின் பேரில் நம் பெருமான் நித்தியானந்த வாழ்வு கொண்டுவிளங்குகின்றார் என்பது தெளிவாம். எனவே இவ்வருள் ஒளியைப் போற்றி ஏற்று உண்மையினை ஓதாதுணர்ந்து ஆதாரமாய்க் கொண்டு அருள் இயல்பில் ஓங்குவோமாக.

அகவல் உரை விளக்கம்

தயாநிதி சரவணானந்தா

vallalarspace.com/vumt