Vallalar Universal Mission Trust   ramnad......
10 . ஐயமும் திரிபும் ஐயமும் நீக்கியது

19. ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள்

20. ஐயமு நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) நாம் போற்றிக்கொள்ளுகின்ற நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். நமக்கு உயிரிலும், உடலிலும் உண்டாகின்ற குறைபாடுகளை எல்லாம் தீர்த்து அருள் பாலிக்கின்றவராவார். உயிரின் குறைபாடு யாதெனில், அபக்குவ காலத்தே ஏற்படுகின்ற அறியாமையாம். இவ்வறியாமையினால் உண்மை விளங்காது. ஒன்றை மாறுபாடாகக் கருதிக்கொண்டு இடர்ப்பட நேருகின்றதாம். இவையே முதலடியில் ஐயமும் திருபுமாகக் குறிக்கப்பட்டன ஐயம் என்றால் சந்தேகம். தெளிவின்மை, மருள் உணர்வுமாம். திரிபு என்றால் மாறுபாடு. தெளிவின்மையால் ஒன்றைப் பிறிதொன்றாகக் கொள்ளல். வேறுபாடாகக் காண்டலை திரிசியக் காட்சி என்பர். இவை எல்லாம் ஆன்மாவாகிய உயிரின்கண் அருள் அறிவு ஏற்படாதபோது உள்ள மலபாச மறைப்பு நிலையாம்; இதுவே ஆணவம், மாயை கன்மம், ஆக மொழியப்படும். அருள் ஞானமே ஆணவமாதி மலபாச ஆணிவேரை அறுத்துவிடுகின்றதாம். அவ்வருள் ஞானத்தால் உண்மைக்காட்சி உள்ளபடி விளங்கும் தருணம், ஐயத்திற்கும் திரிபிற்கும் இடமில்லையாம்.

இனி, இரண்டாம் அடியில் குறிக்கப்படும் ஐயம், உடலினுள் தோன்றும் கபம் அல்லது கோழை ஆகும் இக்கப தோசத்தால் இரத்தம் முதலிய ஜீவதாதுக்கள் கெட்டு, உயிர்ப்பு ஆற்றல் தடைப்பட்டு மரணத்தையே வருவித்துவிடும். நம் சுத்த சன்மார்க்க பதி நம் அசுத்த மாயா தேகத்தையே சுத்த நித்திய உடம்பாக ஆக்கி வாழ்விக்க எழுந்தருளுகின்றார் . ஆதலால் இவ்வுடலில் கபம் சேர்ந்து தொல்லை செய்யாவண்ணம் , தன் அருளொளி அமுதால் அக்கபத்தை யொழித்து விடுகின்றார். இவ்வனுபவ சாத்திய முறவே, சன்மார்க்க சாதகர் கரிசலாங்கண்ணியைத் தினமும் உட்கொள்ளவேண்டும் மென்பது நம் வள்ளல் ஆணை.

காறிக் காறிக் கரிசாலையிலேயிடு கபமாறும்” என்பது ஆன்றோர் அனுபவ வாசகம். ஆகவே, உயிரினிடத்தே மெய்யருள் ஒளியைக் காட்டி, அதனை உணர்விலும், உடலியும் நிரப்பி ஐயமெலாம் போக்கிச் சுத்தபிரணவ ஞானதேக சித்தியோடு வாழ வைக்கும் நம் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றுவோமாக.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரை விளக்கம்.

தொடரும்..

vallalarspace.com/vumt