17. ஏறா நிலைமிசை ஏற்றியென் றனக்கே
18. ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) கடவுள் விளங்கும் நிலையை நேரடியாகக் காண்பது என்பது மனித தரத்திற்கு அப்பாற்பட்டதாம். சாதார்ண மனிதனின் அறிவாராய்ச்சிகளும், தவஞான பண்டிதர்களின் அறிவானுபவமும் சென்றடையப் பெறாத உயர்நிலையே அருட்பெருங் கடவுள் உண்மை ஓங்கும் இடமாம். அருமறைக்கும் எட்டாதது பரம்பொருள் எனப்படுவது உண்மையே. ஏனெனில் அந்த மறையாகமம் எல்லாம் மனித மனமாகிய நிலத்தில் அற்புதமாக விளைந்த விளைச்சலேயாம். அந்த மனநிலைக்கு வெளிப்படாதது பேரருள் இறையுண்மையாம். அம்மனோ எல்லை மேற் செல்ல வகையறியாது மோனமாகி விடுகின்றான் மெளன ஞானயோகி! இந்த மனோ வெளிக்கு அப்பால் விரிவுற்றுக் கிடக்கும் பெருவெளி நிலையைக் கடவுள் விளங்கிடமாய்க் கொண்டு அதிற் புகுந்து மறைந்தனர் கடவுளைக்கான முனைந்தோர் பலர். மற்றும் பலர் பலவான வழிமுறைகளைக் கற்பனைசெய்து கொண்டு , அக்கடவுணிலையை எய்த முயன்றுள்ளனர். அப்படி முயற்சித்த எவரும் அவ்விறை நிலையுற்று, கடவுள் மயமாய் வாழ்ந்துகொண்டு தாமே சான்றுதர விளங்காது போயினர்.
இப்பொழுது நம் மாண்புறு வள்ளற் பெருமானே அருட்பெருஞ்ஜோதிக் கடவுளைக் சுத்த அருள் ஞானத்தால் உள்ளவாறு கண்டுகொண்டுள்ளார். இவர் கண்டுகொண்டுள்ள கடவுள் நிலை உயர்வற உயர்ந்த அரும்பெரும் நிலையாகும் இவ்வுயர் நிலைக்கு ஏறிச்செல்ல எவராலும் எக்காலும் இயலாதாம். எவராலும் எக்காலும் இவ்வுயர் நிலைக்கு ஏறிச் செல்லவே முடியாது என்றால், பின்னர் இவர் மட்டும் எப்படி அந்நிலையை அடையமுடியும்? ஆம், இவராலும் அந்நிலைமிசை ஏறிவிட முடியாதுதான்! அனினும் அத்தீண்டரிய உயர்நிலைமிசையொளிரும் அருட்பெருஞ்ஜோதிபதியே, தன் அருளையே உலகத்துற்ற யாவ்ய்மாய் விளங்கச் செய்துள்ள உண்மையை இவரது மெய்யறிவில் கண்டபோது , இவர் உள்ளுற்ற அருளிறைஉண்மையை, அவ் அக, நிலையிலேயே இருந்து காண்பதாக உணர்ந்து கொண்டார். அதாவது, கடவுளே அகநிலையிலிருந்து, தன் அருளை வள்ளலாரின் அறிவுணர்வாக்கி இந் நிலையை உணர்ந்து கொள்ள செய்திருக்கின்றார். என்பதாம். எனவே தீண்டரிய கடவுள் நிலையில் விளங்கும் அருள் உணர்வு மயமான வள்ளலும் அவ்வுயர் நிலையிலிருந்துதான் விளங்குகின்றார் என்பது உண்மையாம். இதனால் இவர் அம்மேனிலையில் திகழ்கின்றது பழமையான இயல் உண்மையே ஆம். ஆகையால், இவரும் புறத்திருந்து அந்த மேனிலைக்கு ஏறவில்லை என்பதும், இயற்கையாக அந் நிலையிற்றானே இருந்து தன்னைக் கண்டு கொண்டிருக்கிறார். எனப்தும் மெய்யே இதனால், ஏறாநிலை மிசை ஏற்றி என்றனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி என்கின்றார்.
இனி, அம்மேனிலை நின்று கண்ட ஆறாறுஎன்பது, பூத முதல் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்கள் என்று கூறுவர் ஒரு சாரார் ஆறு, ஆறு அல்லது ஆறு மார்க்கம், ஆறு அத்துவா, ஆறு அந்தம், ஆறு ஆதாரம், ஷண் மதம் என்றெல்லாம் கூறுவர் புறநெறியாளர் எல்லாம், இவைகள் யாவும் மக்களுக்கு உலகியிலைஒரு ஒரு வகையில் சிறிது சிறிது பயன்பட்டொழிவனவேயாம். நம் சுத்த நெறியோ, மேனிலை நின்று வாழ்விப்பதா யுள்ளதாம். ஆகையால் இந்த ஆறாறுக் குரிய மெய்ப்பொருள் அம்மேனிலை நின்றே கண்டடைய வேண்டி யுள்ளதாம். ஆகவே இங்கு விளங்குகின்ற “ அருட்பெருஞ்ஜோதியே” நமக்கு அருள் விளக்க ஆறெழுத்து மந்திர மொழியாகத் தோற்றி, அதுவே அதனை அடையும் பெரும் நெறியாம் ஆறாகவும் உள்ளதை யுணர்த்துவதாம். எனவே, இந்த உயர்நிலைநின்று அருள் வாழ்வு பெற அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிக் கொள்வோம்.
அகவல் உரை விளக்கம்
சுவாமி சரவணானந்தா…
vallalarspace.com/vumt
Write a comment