4. இக பர நிலை
7. இக நிலைப் பொருளாய்ப் பரநிலைப்பொருளாய்
8. அகமறப்பொருந்திய அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) இகநிலை என்பது, இவ்வுலக அமைப்பு, இம்மை வாழ்வு, இப்பிறப்புமாம், பர நிலை என்பது, மேலுலக அமைப்பு. மறுமை வாழ்வு, வரும் பிறவியுமாம். இன்று விளங்கிக்கொண்டிருக்கிற இந்த அகண்ட பெரும் பிரபஞ்சமானது எண்ணற்ற பொருள்களைக்கொண்டு திகழ்கின்றதைக் காண்கின்றோம். இவ்வளவு பொருள்களும், தோற்றமும் மாற்றமும் மறைவும் கொண்டனவாய் அறிகின்றோம். இவை எல்லாம் இப்படி வெளிப்பட்டுத் தோற்ற நிலைக்கு வருவதற்கு முன் எப்படி என்னவாய் இருந்தன என்றும், இவற்றின் மறைவு நிலைக்குப்பின் எங்ஙனமிருக்கும், என்றும் ஆழ்ந்து சிந்தித்து நோக்கும்போது வெளியாவது இது யாதெனில், இப்பேருலகப் பொருள்கள் யாவும் தோற்ற நிலைக்கு முன்னும், மறைவு நிலைக்குப் பின்னும் மிக நுண்ணிய சூக்கும நிலையில் அருகிக் கிடப்பதாய் உணர்த்தப்படுகின்றோம். இந் நுண்ணிலையே பரநிலையாகப் பகரப்படுகின்றதாம்.
மேற்குறித்த பருப்பொருள் தோற்ற நிலையும் , நுண்பொருள் சூக்கும நிலையும் , மனிதனின் அனுபவத்தில் , சூழுலக அமைப்பாயும், இம்மை வாழ்வு இயலாயும், இப்பிறப்பின், விளையபனாகவும் உள்ளனவாம். இவைகளை எல்லாம் கண்டு துய்க்கின்ற இவன் புற நிலையிலிருந்து காண்பதை விட்டு , சுத்த சத் விசாரத்தால் அக நிலையுற்று அறியத் தொடங்கினால் தான் உண்மை வெளியாம் . ஆம், அவ்வக நிலைதான், மனிதனின் ஆன்மக்கடவுள், நிலையாக இருக்கின்றது. இவ்வக நிலைக் கண்ணின்றே யாவும் வெளியாகியுள்ளனவாம். இந்த அக ஆன்மக் கடவுள் நிலையையே அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டு போற்றிக் கொள்ளப்படும். இவை எல்லாம் அகம் அறப் பொருந்தியுள்ளனவாம். ‘ அற ‘ என்ற சொற் பகுதி மிக நன்றாக என்ற பொருள் தருவதாகையால், யாவும் இந்த அக அருட்பெருஞ்ஜோதியில் மிக நன்றாகப் பொருந்தி நின்று காலத்தே வெளியாகி விளங்குகின்றனவாய்த் திருவருளால் உணர்த்தப்படுகின்றோம். மேலும் இவ்வருளனுபவமுறும் போது, அந்த அருட்பெருஞ்ஜோதியே யாவுமாய் , நாம் ஒவ்வொருவொருமாய்க் கூட விளங்குவதாய் உணரப்படுவதால், உண்மையில் உள்ளது அவ்வருட்பெருஞ்ஜோதியே ‘ நாம் ‘ என்ற வேறு இல்லையாம், இதனால் இந்த அருட்பெரும் பதி உண்மை மனிதனுக்கு அகம் அற, அதாவது அகங்காரமாகிய தற்போதம் ஒழிய வெளிபடுகின்றதாம். ஆகவே, ‘ அற ‘ என்றதற்கு நீங்குதல் அல்லது ஒழிதல் என்ற பொருளும் பொருந்தும்.
எனவே, நம் அருட்பெருஞ்ஜோதியே இகநிலைப் பொருளுக்கும், பரநிலைப் பொருளுக்கும் நிலைக்களனாய் நம்முடைய அன்மாலயமாம் சத்திய ஞான சபையின் கண் அகமறப் பொருந்தியுள்ளதை அருளாற் கண்டு போற்றிக் கொள்வோமாக.
அகவல் உரைவிளக்கம்,\சுவாமி சரவணானந்தா.. …..தொடரும்…
vallalarspace.com/vumt
Write a comment