Vallalar Universal Mission Trust   ramnad......
அருட்சிவம் 3. அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ் 4. அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி

அருட்சிவம்

3. அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்

4. அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) பழந்தமிழ் மக்கள் கண்டு வழிபட்ட கடவுட் ஜோதியே கந்தழியே, பின்னர் சிவம் என்னும் செம்பொருளாகக் கற்பிக்கப்பட்டதாகும். சிவம்தானே செங்கதிர்ச் சோதியாம் வான் ஞாயிறு இதனை மேனாட்டார் சன்” (sun) எனவும் கீழ்நாட்டார் சியீன் எனவும் குறிக்கின்றனர். தமிழான் வான் ஜோதியைப்புறத்தே கண்டு வணங்கினது அபக்குவ அறிவு நிலையாம், பக்குவத்தே அகத்தில் கடவுட் ஜோதியை ஞான சூரியனாகக் கண்டு போற்றினான். இவ் இறை ஒளியும் அது விளங்கும் இடமும் சிவக்குறியாம் இலிங்கமும் ஆவிடையும் போன்று இருக்கக் கண்டவன், புற ஞாயிற்றையும் அதன் கோட்பரிவாரத்தையும் கூட இலிங்க ஆவிடை வண்ணமாகவே கண்டு கொண்டான்.

கடவுட் ஜோதியால் உருவாகியுள்ள உலகை, ஐம்பூதச் சேர்க்கையால் தோன்றி ஐவண்ணமாய்விளங்கக் கண்டு பஞ்ச பூத இலிங்க வடிவம் கடவுளுக்கு அமைந்துள்ளதாய்க் கொண்டு நமசிவய எனுந் தூல ஐந்தெழுத்துருவம் சிவஜோதிபதிக்குப் புனைந்து கொள்ளப்பட்டதாம். அப்படியுள்ள அக்கடவுட் ஜோதிபதியை உள் ஒளிர் சிவமாக உணர்ந்தவன், அதனைச் சிவாயநம எனப் போற்றிக் கொள்ளலால் சார்ந்து ஒன்றி அதுவாகி விடலாம் என்று உணர்ந்தான். இச் சிவாயநம என்பதுதான் சிவபதியின் சூக்குமத் திருவைந்தெழுத்து எனவும், அதுவே மந்திரமாய் விளங்கி கடவுட் சார்பைக்கூட்டி வைக்குங் காரணத்தால் அதுவே கடவுளை அடையும் நெறியாகவும் கருதிக் கொண்டான். இந்தச் சிவ நெறி விளக்கமாகவே சைவச் சாத்திர தோத்திரங்களும் , மறை ஆகமங்களூம், மூர்த்திதல் தீர்த்தங்களூம் ஆக்கிக் கொடுத்தனர் சைவப் பெருமக்கள்.

இன்று நாம் அந்தச் சிவபரம் பொருளை அருட்பெருஞ்ஜோதியாக உள்ளவாறு காண்கின்றோம். அருள் உண்மை விளக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி நம் மெய்யறிவுத் தலத்தில் வெளிப்பட்டிலங்கும் நிலையையும், அதனை அருள் விசாரத்தால் கலந்து நிற்கும் உபாயத்தையும், அப்படிக் கலந்தொன்றிக் கொண்டு இவ்வுலகில் அருளின்ப வாழ்வில் ஓங்கும் முறையையும் அறிந்து கொள்ளுகின்றோம். இவ்வுண்மையைக் குறிக்கவே நம் பெருமான் இவ்விரண்டு அடிகளை அருளியுள்ளார்.

அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்

அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி

என்ற இதனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாழ்த்தாகக் கொள்ள வேண்டுவது முக்கியம். அருட்பெருஞ்ஜோதி பதியையே சமய மகாதீதச் சுத்த அருள் நிலை நின்று போற்றிக் கொண்டதாகும். சிவமும், சிவநெறியாம் மார்க்கமும் ஏன் சிறப்பித்துக்கொள்ளப்பட்டன என்றால், கடவுள் உண்மையை அடிநிலையாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் அச்சிவானுபவமாய் கற்பனா இயல்பால் தமிழ் குறிக்கும் சிவானுபவக் கடவுள் நிலை யைக் கொண்டு உண்மை கண்டு, தத்துவ கற்பனாதீத நிலையில் உலகெல்லாம் உய்யத்தருவது இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கமாகும்.

அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா

vallalarspace.com/vumt

தொடரும்/.....