ஆதிசங்கரர் கண்ட ஒருமை
ஒரு குழுவினருக்கு எதிராக இன்னொரு குழுவினர் ஒன்றுபடுவது ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகாது. அதனைத் தற்காப்புணர்ச்சி என்றே சொல்லவேண்டும். அடிகளார் ஒருமைப்பாட்டினை வற்புறுத்தியது, குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கு மட்டும் தற்காப்புத் தேடவன்று. " ஒரே உலகம்" காண்பதற்கே யாம்.
ஆதிசங்கரர், இந்து சமயத்தின் உட்பிரிவுகளாக இருந்த அறுவகைச் சமயங்களிடையே ஒருமைப்பாடு காண முயன்றார்.,
ஆதி சங்கரரின் சமய ஒருமைப்பாட்டு முயற்சி, அவருடைய வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் இரையான சமண, பெளத்த மதங்களுக்கு எதிராக - அந்த மதங்களின் தாக்குதலிருந்து வேத மதத்திற்குத் தற்காப்புத் தேட - இந்துக்களை எல்லாம் ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சியே யாகும். வள்ளலாரின் குறிக்கோள் அதுவன்று. அவர், மதங்களே இல்லாத மனித சமுதாய ஒருமைப்பாட்டைக் காணவே பாடுபட்டார். ஒன்றுபட்ட அந்த மனித சமுதாயமும், ஒரே தெய்வ நம்பிக்கை கொண்டு, பிளவு-பிரிவினை ஆகிய தீய சக்திகளிடமிருந்து விடுபட்டு, உயிர்கள் அனைத்திடமும் அன்பு செலுத்துவதாக இருக்கவேண்டு மென்றும் கனவு கண்டார். அதனாற்றான், 'இந்து நேய ஒருமைப்பாட்டுரிமை' என்றோ, 'மனித நேய ஒருமைப்பாட்டுரிமை' என்றோ சொல்லாமல், 'ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை' என்று கோஷித்தார். கோஷம் புதிதாயினும், அந்தக் கோஷத்தினுள்ளே அடங்கியிருக்கும் குறிக்கோள் உலகத்திற்குப் புதிதன்று.