இறைவனருளைப் பெற்றுத் தாம் அவனாக மாறிய பின்னர் வள்ளலாருடைய கவிதைகளிலேயே, அருள் ஒளி வீசக் காண்கின்றோம். அவனைத் தாம் பாடிய பாடல்களூக்கும் தானே அவனாகிப் பாடிய பாடல்களுக்கும் வேற்றுமையுண்டென்பதைச் சொல்லாமல் சொல்லுவார் போலக் கீழ்வரும் பாடல்களைப் பாடியுள்ளார்.
திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரையொளி யோங்கிற்றென் றுந்தீபற!
பலித்தது பூசையென் றுந்தீ பற!
தந்தையைக் கண்டேனான் சாகாவரம் பெற்றேன்
சிந்தை களித்தேனென் றுந்தீபற
சித்தெலாம் வல்லேனென் றுந்தீ பற!
அடக்கமே உருவான இராமலிங்க அடிகளார், தாம் சாவரம் பெற்ற பின்னர், முன்பு தம் சொற்கேளாதவர்களாய்த் தம்மை இழித்தும் பழித்தும் பேசியவர்களெல்லாம் தம்மை வாழ்த்தியதாகப் பாடுகின்றார்.
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமி நீ என்றனர்
சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்.
புறங்கூறி னாரெலாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
மறங்கூறி னோம் என் செய் வோமென்று கூயினர்
வாழிய வென்றுசொல் வாயினராயினர்
வடலூர் முனிவர், அறிவால் கடவுளை அறிந்து கடவுள் மயம் ஆனவர்- ஜீவன் முத்தர், முதலில், தாம் வேறு அது வேறு என்ற துவைத நிலையிருந்தனர், பின் அறிவால் கடவுளை அறிந்து , ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் அத்வைதமாகிக் கடவுள் மயமானார். இது, அருட்பா தரும் செய்தி, தாம் வேறு அதுவேறாக இருந்த துவைத நிலையில்,
தருவகை இத் தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே
தனித்த அருட்பெருஞ்ஜோதி தந்தருள்க இதுதான்
ஒருவகைஈ(து) இலையெனில்வே றொருவகைஎன் னுடைய
உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந் ததுவே
அருவகையோ உருவகையும் ஆகி என்னுள் அமர்ந்தாய்
அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே!
திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் தவிர்த்தே
திரு அருளாம் பெருஞ்ஜோதித் திருவுருக்காட் டாயோ
உருக்கி அமுதூற்றெடுத்தென் உடம்புயிரோடுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சி அருளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட் கலந்தே
கங்குல்பல இன்றி என்றுங் களித்திடச் செய் யாயோ
செருக்கருத தவர்க்கருளுஞ் சித்திபுரத் தரசே
சித்திசிகா மணியே என் திருநடநாயகனே!
என்று இறைவனிடம் முறையிட்டார்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்
vallalarspace.com/vumt
உள்ளது நன்றாகத் தெரிகின்றது.
நல்ல விளக்கம்.