தியானத்தில் ஒருவகை, தெய்வ நினைப்போடு தன்னை மறந்து சமாதி கூடுவதாகும். அதனை யோகமென்றும் சொல்லுவது உண்டு. இராமலிங்க அடிகளார் சாதாரண மக்கள் அத்தகையா யோகத்தை விரும்பவேண்டா வென்கின்றார்.
“ இந்தக் கடையுக மாகிய கலியுகத்தில் உங்களால் யோகம் முதலிய சாதனங்களை இயற்ற முடியாது. ஆதலால், நீங்கள் தோத்திரத்தையே ஈடேறும் மார்க்கமெனக் கொள்ளுங்கள்.”
“ ஓம் சிவாயநம வென்று சதா சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுலகம் அருட் சக்தி, பொருட்சத்தி, கிரியாசத்தி, யோக சத்தி, ஞான சத்திமயமாய் இருப்பதாகப் பார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும். யோகம் செய்ய வேண்டியதில்லை. அதில் அழுந்திவிட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவ கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை, மூடம் உண்டாகும் உண்மை.
என்று சித்திவளாகத்தில் தம் எதிரே குழுமிய பக்தர்களுக்கு உபதேசித்தார். மற்றும், “ சமாதிப் பழக்கம் பழக்கமல்ல, சகசப் பழக்கமே பழக்கம், என்கிறார்.
நெற்றிக்கண் திறந்து ஞானியாக விரும்பாதவரும் அன்றாட வாழ்க்கையில் சிவபக்தியோடு இருப்பது அவசியமென்பது அடிகளாரின் உபதேசம்.
‘’ மலஜல சங்கல்ப காலத்தில் தவிர, மற்றக் காலங்களில் கடவுளிடத்தில் அன்பும், ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். பத்தி என்பது மன நெகிழ்ச்சி, மன வுருக்கம், எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபிருத்தலை அறிதலே ஈசுவர பக்தியாகும்.”
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்.