Vallalar Universal Mission Trust   ramnad......
ஆண்டவன் வருவார்!!

ஆண்டவன் வருவார்!!

வடலூர்ச்சித்தர், தாம் ஆண்டவனுடன் அத்துவிதமானதோடு அமைதி பெறவில்லை; தாம் பெற்ற இன்பம் ஒவ்வொரு ஆன்மாவும் பெறவேண்டுமென்று விரும்பினார்; அதனால் தமக்குக் காட்சியளித்துத் தம்மிற் கலந்த அருட்ஜோதிக் கடவுள், அனைத்துயிர்களுக்கும் காட்சியளிக்க வல்லது என்றும் கூறினார். அடிகளாரைப் போன்று ஒவ்வொருவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஆன்மநேய ஒருமைப்பட்டுரிமை நெறி நின்று, ஆண்டவனை வழிபட்டால், அவர்களுக்கு அருட்ஜோதி கடவுள் காட்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த உண்மையையே இராமலிங்க அடிகளார் உபதேசித்தார். இதனை உணராத மக்களுள் சிலர், சமரச சுத்த சன்மார்க்க நெறியைச் சாராதாரும் ஆண்டவனை நேரிற் காணும் தருணம் வந்துவிட்டதென்று அவர் கூறுவதாக எண்ணி அதனை நம்ப மறுத்தனர். அதனால்,

ஆய் உரைத்த அருட்ஜோதி வருகின்ற

தருணம் இதே அறிமின் என்றே

வாய் உரைத்த வார்த்தை என் றன் வார்த்தைகள் என்

கின்றார் இம் மனிதர் அந்தோ

தாய் உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்

உளங்கலந்த தலைவ இங்கே

நீ உரைத்த திருவார்த்தை என அறியார்

இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே!

என்று பாடினார் இராமலிங்கர், ஆண்டவன் வருந்தருணத்தில் அதுவரைச் செத்தவர்களை யெல்லாம் எழுப்பி, சமரச சுத்த சன்மார்க்கத்தைச் சாரும்படி செய்வார் என்றும் அடிகள் கூறினார். இதுபற்றி, 30/02/1871 ல் சாலை சம்பந்திகளுக்கு இட்டசமாதிக் கட்டளை, என்னும் தலைப்பிட்டு , அடிகள் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் காணப்படுவதாவது;

கர்ம கால முதலிய பேதங்களால் யார்க்காயினும் தேக ஆனி நேரிட்டல் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம் பலக் கடவுள் சிந்தையுடன் இருக்க வேண்டும்.

புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கலியாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டா. கர்ம காரியங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களூக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயஞ் செய்யவேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள்.

…….எனது தந்தையராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேத சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சிகொடுக்கும் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக இருக்கின்றது. அந்தத்தருணத்தைல் சாலைக்கு உரியவர்களாகியிருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார், இது சத்தியம், இது சத்தியம்.

இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளுமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்தபின் தகனஞ் செய்தல் கூடாது. அது சன்மார்க்கத்திற்குத் தக்கதல்ல.

நம்பிக்கையுடன் இருங்கள், பெரிய களிப்பை அடைவீர்கள். இது சத்தியம், இது சத்தியம்..

இராமலிங்க அடிகள்

vallalarspace.com/vumt

nandakumar_90
இறந்து தகனமானவர்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுப்பி அருளுவார் என வள்ளல் பெருமான் தெரிவித்துச் சென்றுள்ளார்.
ஆக, யாரையும் அவர் விட்டு விடாமல், பேரின்ப சித்திப் பெருவாழ்வு அனைவருக்கும் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதனை நன்கு தெரிவித்ததற்கு நன்றி.\
Thursday, December 3, 2009 at 04:56 am by nandakumar_90