எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணுதல்
எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே” எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணுந் தபோதனர்கள் செவ்வறிவை நாடி மிகச் சிந்தை வைப்ப தெந்நாளோ; எனத் தாயுமானவர் பாடுவர்.
எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் உத்தமர்களின் அடிக்கு ஏவல் செய்ய என் சிந்தை விழைந்தத்து என்பர் நமது அடிகள். எவ்வுயிரும் தம் உயிர்போல் காண்பவர் வாய்ச்சொல்லே வேதாகமத்தின் வாக்கு என்பர்.
எவ்வுயிரும் பொது எனக்கண்டிரங்கி உப
கரிக்கின்றார் யாவர் அந்தர்
செவ்வியர் தம் செயல் அனைத்தும் திரு அருளின்
செயல் எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வை இலாத் திருநெறி அத் திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர் சீர் ஓதிடா என்
வாய் மிகவும் ஊர்வ தாலோ.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடைவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தை மிக விழைந் தாலோ
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
தம் உயிர்போல் கண்டு ஞானத்
தெருள் நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநெறி செலுத்தா நின்ற
பொருள் நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
வார்த்தைகள் என் றறைவராலோ
எவ்வுயிரும் தம்முயிர்போல் கருதுவதே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையாம், இதனை வள்ளல் பெருமானின் பேருபதேசத்திற்காண்க.