Vallalar Universal Mission Trust   ramnad......
உணவுப்பிரச்சனையன்று : ஒருமைப்பிரச்சனை

உணவுப்பிரச்சனையன்று : ஒருமைப்பிரச்சனை

இராமலிங்க அடிகளார் புலால் உணவினை வெறுத்துச் சைவ உணவினை வலியுறுத்தினார் என்றால்,. அது வெறும் உணவுப் பிரச்சனை யன்று; உயிர்க்குலத்தின் ஒருமைப்பாட்டுப்பிரச்சினை; ஆன்மநேய ஒருமைப்பாட்டுடைய புது உலகம் காணும் புனிதப் பிரச்சினை;. இதனை மறத்தல் கூடாது.


மருவாணை பெண்ணாக்கி ஒருகணத்திற்

கண்விழித்து வயங்கும் அப்பெண்

உருவானை உருவாக்கி இறந்தவரை

எழுப்புகின்ற உறுவ னேனும்

கருவானை யுற இரங்காது உயிர் உடம்பை

கடித்துண்ணும் கருத்த னேல் எங்

குருவாணை எமது சிவக் கொழுந்தானே

ஞானி எனக் கூறெனாதே.

என்றுபாடுகின்றார் இராமலிங்க அடிகளார் ஒருவர் ஆணைப் பெண்ணாக்கி, செத்தாரை எழுப்பிச் சித்துக்கள் புரிபவராக இருக்கலாம். அவரும் பிறிதொரு ஜீவனைக் கொன்று அதன் உயிரையும் உடம்பையும் உண்ணும் எண்ணுமுடையவராயின், அவரை ஞானியெனக் கூறெணாது, என்கின்றார் இராமலிங்க அடிகளார். அவருக்குள்ள வேதனையில், என் குருவாணை” எனது சிவக்கொழுந்தாணை: என்றெல்லாம் ஆணையிடுகின்றார்.இராமலிங்க அடிகளார் துவக்கிய சன்மார்க்க சங்கம் அவர் காலத்திலேயே வலுப்பெறவில்லை, காரணம் புலாலுண்பவர்களைச் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்பதில் அடிகள் காட்டிய உறுதி என்றே சொல்லலாம்.

இராமலிங்க அடிகளார், புலாலுணவை மறுத்துச் சைவ உணவினை வற்புறுத்தியதற்கான காரணங்களை, ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் தமது அறிக்கையுள் விரிவாகக் கூறுகின்றார். உயிர்கள்பால் இரக்கம் காட்டும் உணர்வு தோன்றினாலன்றி மனித குலத்தவரிடையே ஒற்றுமை ஏற்படுவதோ , இந்தியரிடையே தேசிய ஒருமைப்பாடு தோன்றுவதோ சாத்தியமில்லையென்று கருதினார் இராமலிங்க அடிகளார்.

ஆம்; மனிதனை மனிதன் சுரண்டுவதும் ஒருநாட்டினரை இன்னொருநாட்டினர் அடிமைப்படுத்துவது, ஒரு சாதியினரை அடிமைப்படுத்தி பிறிதொரு சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதும், ஒரு மதத்தினரை மற்றொரு மதத்தினர் பகைப்பதும் உயிர்களனைத்தும் பரம்பொருளின் வடிவங்கள் என்றா உண்மையை உணராமலிருப்பதன் விளைவுகளே என்று அடிகள் நம்பினார். அதனால் , ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வளக்க முயன்றார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, .பொ.சிவஞானம்