இசைப்பாடல்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இசைத்தமிழ் வளர்த்த பெரியோர்களுள் தலைசிறந்து விளங்குகின்றார் வள்ள இராமலிங்க அடிகளார்.
“ தமிழில் இசைப்பாடல்கள் இல்லை” என்று சொல்வோர் இன்றுமிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இசைப்பாடல்கள் பலவற்றை அடிகள் தமிழில் இயற்றினா ரென்றால், அதனைத் தமிழ் வளர்ச்சிக்குரிய தொண்டு என்றுதானே கூற வேண்டும்.
இராமலிங்கர், இறைவழிபாட்டின்போது இசைக்கருவி கொண்டு ஒலியெழுப்பி ஆரவாரம் செய்வதை அடியோடு வெறுத்தார். அதனாலேயே, அடிகள் இசைத்தமிழின் எதிரியாக இருந்தாரெனக் கருதிவிடக்கூடாது.
“ நவின்ற சங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்ட அப் போதும்
கலங்கிய கலக்கம் நீ அறிவாய்”
என இறைவனை நோக்கிப் பாடிய அவரே.
“ ஆண்டவரை நமது வாயினால் வாயார வாழ்த்துவது தவிர, பிறரைக்கொண்டு வேறு பாஷைகளில் அர்த்தம் விளங்காமல் அர்ச்சனை முதலியன செய்தல் அவ்வளவு முறையானதல்ல”
என்றும் கூறினார். ஆம்; ஒவ்வொருவரும் தாமே பாடியும் விண்ணப்பித்தும் இறைவனை வழிபடுவதற்கு இசைக்கருவிகள் தடையாக இருக்கின்றன என்பதனாலேயே அவற்றை வெறுத்தார் வள்ளல் இராமலிங்கர், கீர்த்தனைகள் பாடிய பெருமான் இசைக் கருவிகளின் எதிரியாவாரா? பண்ணோடு கலந்து பாடுகின்ற இசை ஞானமும் அடிகளாருக்கு இருந்ததென்று சொல்லப்படுகின்றது. அவர் இயற்றியுள்ள இசைபாடல்களே இதற்குச் சான்றாக இருக்கின்றன.
வள்ளல் இராமலிங்கர் காலத்தில் தமிழ் உரைநடை போதிய அளவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அந்தக் குறையை அகற்றி, அதிலும் தமிழுக்குப் புது வாழ்வு தரப் பணிபுரிந்தார், ஓதாதுணர்ந்த வள்ளற்பெருமான்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலிலிருந்து....
ம.பொ.சிவஞானம்…..