திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 19
(19) பரோட்சஞா னாதீதம் அபரோட்ச ஞானானு
பவவிலா சப்பிர காசம்
(ப-ரை) பரோட்ச ஞான அதீதம் – ( கற்ற கலைகளால் ஆன) செயற்கை அறிவிற்கு எட்டாச் சேய்மையது: அபரோட்ச ஞான அனுபவ விலாசப் பிரகாசம் – இயற்கைஞான அனுபவ விளக்கப் பேரொளியாகிப் பிரகாசிப்பது(எ-று)
( வி-ரை) பிரஹ்மம் என ஒரு பொருள் உளது; இது, கற்ற கலையறிவிற்கு எட்டாதது. ( பரோட்சம் என்பது மறைவு)
“” பரோஷப்ரியா இவஹி தேவா” என்பது ஐதரே யாரண்யம் தேவசொரூபம் மறைந்து நிற்றலில் பிரியமுளது.
இது ரகசியப் பொருளாம் எனும் இச் சுலோகத்தை இங்குச் சிந்தித்தல் நலம்.
வாழ்விக்கும் மகா வாக்கியத்தை இலட்சியத்தில் வைத்து, ஐயம் திரிபு அறியாமை அகன்று, நிட்டை பலநாள் நீடித்து, சுவாநுபவம் பெறும் இயற்கை ஞானம் அபரோட்சம் என்று படிக்கப்பெறும்.( அபரோட்சம் –வெளிப்படை)
உருப்போட்டு எதையும் ஒப்பிப்பது வேறு. அஃது அல்ல இது. இது அனுபவ விலாசம் ( விலாசம் – இயற்கையாக) ரசித்து இருக்கும் இடம்; அது பொரொளி மயமான பெருநிலம். இதையே எண்ணி மகிழ்பவர் புண்ணியவான்கள்.