பசும்பகா தீத விமலம்
(ப-ரை) பரதுரிய அனுபவம் – வித்தகத் துரிய நிலையில் அனுபவமாக விளங்குவது : குருதுரிய பதம் – குருவின் துரிய உபதேசமாகக் குறுகுவது; அம்பகம் – (காணும்) கண்ணாவது ; பசு அதீத விமலம் – ( திரு ஐஸ்வர்யம், புகழ், வீரம், வைராக்யம் , ஞானம் எனும்) ஆறு நிலைகட்கும் அப்பாற்பட்ட களங்கமற்ற தன்மையது, (எ-று)
(வி-ரை) விழிப்பு, கனவு, அவசம், எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம், இது அபரம், இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம். பெருகிய அனுபூதி மான்கட்கு , உள்ளங்கை நெல்லிபோல் அந்நிலை உருவாகுமாதலின், ‘ பரதுரிய அனுபவம்’ எனப்பெற்றது.
என்றும் உயிர்கள் மேல் வைத்த இரக்கத்தால், வித்தகப் பரம், பரம குருவுருவில் வெளிப்படும்’; உரிய துரிய பதத்தை உபதேசிக்கும். அந்தச் சூழ்நிலையே ‘ குரு துரிய பதம்’ இதன் வழி, சிறந்த பரதுரியம் சித்திக்கும். (இந்த நன்றிக்கு அடையாளமாக, குருபூஜை எங்கும் கொண்டாடப்படுகிறது)
(கு-இருள் ; ரு – ஒளி) அறியாமை இருளகற்றி அருள் ஒளியை அறிவித்தலின், இவர்க்குக் குரு எனும் பெயர் கூடியளது.
“ கரையறு பிறவிவெங் கடலுளே விழுந்(து)
அயர்வுறு துயருழந் தவர் ஐயோ என
விரைவொடு வினைகெட நோக்கி, வேதகக்
கரையினை அருள்பவன் கருணை நன்குரு”
இவ்வளவு தானா? எங்கிருந்து வந்தார் குருநாதர்!
“ அகனமாய் யாரும் அறிவரி(து) அப்பொருள்
சகளமாய் வந்த(து) என் ( று) உந்தீபற
தானாகத் தந்தென்(று) உந்தீபற”
என்று கூறும் திருவுந்தியார், பராபர வஸ்து குருபரனாக வந்து,சீவனைத் தன்போல் சிவமாக்குவித்தது என்று, அருமை நடையில் அறிவிக்கின்றது.
அரிய இந்நிலையை என்றும் அனுபவிக்க, (பரம ஞான) ‘ அம்பகம் ‘ ஆகின்றது பரம். (அம்பகம் – ( அக நோக்கு)
“ கண்ணே ! கண்ணிற் கருமணியே! மணியோடு பாவாய்
காவாய்! எனத் தமிழ் மறையும்
“ காணும் கண்ணிற் கலந்த கண்ணே! உன்னைச்
சேணும் பாரும் திரிபவர் காண்பரோ”
என்று அரிய தாயுமானாரும் அறிவித்துளர்.
பதம் எனும் வடசொற்கு, ஆறு என்பது பொருள், அந்த ஆறு நிலை யாதெனப் பதவுரையில் விளக்கப் பெற்றளது. மேலும் அம்பகம் என்பது , பகம் என முதற் குறைந்தது எனக் கொண்டு, உணர்வு நோக்கிற்கு அன்றி ஊனக் கண்கட்கு அப்பாற்பட்டது எனினுமாம். இப்பகுதியை, நினைவார் நெஞ்சம் நெகிழ்தலுறும்.
திருவடிப்புகழ்ச்சி.
குகத்திரு இரசபதி அடிகள்